உங்கள் வீட்டில் திருமணமா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!

திருமணத்தில் மெட்டி போடுதல்
திருமணத்தில் மெட்டி போடுதல்https://tamil.boldsky.com

வைகாசி மாதம் தொடங்கி, தொடர்ந்து வரும் பல மாதங்கள் திருமணம் செய்ய உகந்த மாதங்கள்தான். திருமண வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ளவேண்டிய சில ஆன்மிக விஷயங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவற்றில் சில உங்கள் கவனத்திற்கு.

திருமாங்கல்யம் செய்ய நகையை உருக்கவோ, திருமாங்கல்யம் செய்யவோ நல்ல நேரம் பார்த்துக்கொள்வது நல்லது. ஆனால், அந்த நல்ல தினம் திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள். அது மிகவும் சிறப்பைத் தரும். திருமண தாலி செய்ய அல்லது வாங்க அஸ்வினி, ரோஹிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், உத்திராடம், ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் செய்தால் மாங்கல்ய பாக்கியம் சிறக்கும்.

திருமணம் நடத்த உத்தராயண காலமே மிகச் சிறந்தது. மேலும், வளர்பிறை காலமாக இருத்தல் நன்று. மதியம் 12 மணிக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது. 12 மணிக்குள் நல்ல நேரம் இல்லாவிட்டால் உதய லக்னத்தில் அதாவது காலை மணி 5.30 முதல் 6.30 மணிக்குள் முகூர்த்தத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தை, ‘கோதூளி லக்னம்’ என்று அழைப்பர். அல்லது 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருமணம் நடத்தலாம். இந்த நேரத்தை, ‘அபிஜித் முகூர்த்தம்’ என்பர்.

திருமண மேடையில் மணமக்கள் அமர்ந்து இருக்கும்போது அவர்களைச் சுற்றி யார் யார் நிற்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. தென் கிழக்கில் அக்னியை வணங்கும் முகமாக குட விளக்கை அமைக்க வேண்டும். தெற்கில் எமதர்மராஜனை வணங்கும் முகமாக புரோகிதரை அமரச் செய்ய வேண்டும். தென் மேற்கில் திருதியையின் அம்சமாக மணப்பெண்ணின் தோழியையும், வடமேற்கில் வாயுவின் அம்சமாக மணமகனின் தோழனையும் நிற்க வைக்க வேண்டும். வடகிழக்கில் ஈசான மூர்த்தியை வணங்கும் முகமாக அம்மியை வைக்க வேண்டும். வடக்கில் குபேரனின் அம்சமாக மணப்பெண்ணின் தந்தையை நிற்க வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மன மகிழ்ச்சிக்கு உதவும் டோபமைனை இயற்கையாக அதிகரிக்க 5 சுலப வழிகள்!
திருமணத்தில் மெட்டி போடுதல்

‘குறைவில்லாமல் பூரணத்துவம் பெற்று நீடூழி வாழ்க’ என்று தம்பதியரை வாழ்த்தும்போது, அட்சதையை தூவி வாழ்த்துகிறோம். திருமண வைபவங்களில் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்தும்போது, ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்பார்கள். இவை 16 பேறுகளைக் குறிக்கும் அவை: புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இனிமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகியவை.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வரும் மணமகளை, ‘வலது காலை எடுத்து வைத்து வா’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் ஒரு விளக்கம் உள்ளது. அதாவது, பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, இடம் இருந்து வலமாக சூரியனையும் சுற்றுகிறது. திருமணம் செய்து கொண்ட பெண்ணும் பூமியாக நிலமகளைப் போல் எல்லோரையும் அனுசரித்து தனது வாழ்க்கையை சுற்றி வர வேண்டும் என்பதற்காகத்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்கிறார்கள்.

திருமணமான பெண்கள் கண்டிப்பாக மூக்குத்தி அணிய வேண்டும் என்பது ஐதீகம். அவள் விடும் மூச்சுக் காற்று மூக்குத்தி தங்கத்தின் மீது பட்டு கணவர் மீது படும்போது கணவரின் ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.

திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று விரல்களில் மெட்டி அணியக் கூடாது. இப்படி அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும். மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்துகொள்ள வேண்டும். தலை குளிக்கும்பொழுது சுமங்கலிப் பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும். பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com