திருமணங்கள் அன்றும் இன்றும் - ஒரு மீள் பார்வை?

marriage
marriage

ற்காலத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லத் திருமணங்களுக்குச் சென்று வருவது என்பது வெறும் தலைகாட்டும் நிகழ்வாகிப் போய்விட்டது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒவ்வொரு பெரிய ஊர்களிலும் திருமண மண்டபங்கள் என்பது இங்கொன்றும் அங்கொன்றுமாய்த்தான் இருக்கும். அவை யாவும் எளிமையாகவும் இருக்கும். அக்காலத்தில் பெரும்பாலும் நாலு கட்டு வீடுகளிலேயே திருமணம் நடைபெறும் வழக்கம் இருந்தது. அத்தகைய வீட்டின் மையத்தில் திருமணம் நடைபெறும். நான்குபுறமும் உற்றார் உறவினர்கள் சூழ்ந்து நின்று மணமக்களை மனதார வாழ்த்தி மகிழ்வார்கள்.

திருமணங்கள் பெரும்பாலும் நெருங்கிய சொந்தங்களுக்குள்ளேயே முடிவு செய்யப்பட்டன. இரு பக்கத்து உறவினர்களும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திருமணம் நடைபெறும் வீட்டிற்கு வந்து திருமண வேலைகளை ஆளுக்கு ஒன்றாகப் பகிர்ந்து கொண்டு அனைவரும் கூடி சிரிப்பும் கும்மாளமுமாக அன்றைய திருமணங்கள் நடைபெற்றன.

ஒரு திருமண நிகழ்ச்சியில் மற்றொரு திருமணம் முடிவாகும் சூழ்நிலை அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. திருமணங்களுக்குப் பெரும்பாலும் குடும்ப சகிதமாகவே செல்லுவார்கள். திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள் திருமணம் நடைபெறும் இடத்திலேயே தங்கள் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ வரன் பார்த்து முடிவு செய்வார்கள்.

தற்காலத்தில் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமலேயே இணையத்தின் வாயிலாக புகைப்படங்களை மட்டுமே பார்த்து திருமணங்கள் முடிவு செய்யப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி பெற்றிருந்தாலும் மணமகனைப் பற்றியோ மணமகளைப் பற்றியோ தீர விசாரித்து அறிவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

திருமணம் என்பது ஒரு மங்கலகரமான விஷயம். அக்காலத்தில் உறவினர்களும் நண்பர்களும் தங்கள் இல்லத் திருமணத்திற்கு அழைக்க கணவன் மனைவியுமாக வீடு தேடி வந்து குங்குமம் கொடுத்து அழைத்துவிட்டுச் செல்லுவார்கள். ஆனால், தற்போதைய நிலையை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. திருமண அழைப்புகள் வாட்ஸ்அப் மற்றும் இமெயிலில் வந்து சேர்கின்றன. தொலைபேசியிலும் அழைப்பு வருகிறது. ஏன் பல சமயங்களில் தெருவில் வழியில் பார்க்கும்போதே பெயரைக் கூட எழுதாமல் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுச் செல்லுகிறார்கள்.

தற்காலத்தில் திருமணத்திற்குச் செல்பவர்கள், ‘தலையைக் காட்டிவிட்டு வருகிறேன்’ என்று சொல்லுவதை நாம் அவ்வப்போது கேட்கிறோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்லுபவர்கள் வரிசையில் நின்று கவருக்குள் பணத்தை வைத்து அதை மாப்பிள்ளை கையிலோ மணமகள் கையிலோ திணித்து செயற்கையாய் சிரித்து வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சாப்பாட்டு அறையை நோக்கி வேக வேகமாக ஓடி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பும் விஷயமாக மாறிவிட்டது.

தற்கால திருமண மண்டபங்களில் ஒரு காட்சியைக் காண சகிக்கவில்லை. ஒரு பந்தியினர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே அவர்களின் பின்னால் இருக்கையைப் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் மனிதர்களைப் பார்த்தால் சிரிப்பாதா அழுவதா என்றே புரியவில்லை.

இதையும் படியுங்கள்:
10 வகை பெற்றோர் பற்றி தெரியுமா?
marriage

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டுக் கச்சேரி மற்றும் டிஜே (Disc Jockey) என்ற பெயரில் காதைக் கிழிக்கும் பாடல்கள் அனைவரையும் எரிச்சலூட்டுகின்றன. நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் சொந்தங்கள் தங்கள் கருத்துக்களையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள இயலாத சூழ்நிலை நிலவுவதால் திருமணத்திற்கு வரும் எல்லோருமே ஊமைகளைப் போல நடந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலை நிலவுகிறது.

திருமணப் பத்திரிகை என்பது திருமணம் குறித்த தகவல்களை பிறருக்குத் தெரிவிப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் வசதியானவர்கள் வசதியில்லாதவர்கள் என அனைவருமே தங்கள் வீட்டுத் திருமணங்களில் மஞ்சள் நிறத்தில் ஒரு பத்திரிகையை பயன்படுத்தினார்கள். அதைக் கிழித்துப் போடவே மனம் வராது. ஆனால், தற்காலத்தில் இருநூறு ரூபாய் முன்னூறு ரூபாய் என ஒரு பத்திரிகைக்காகவே செலவிடுகிறார்கள்.

உணவு விஷயத்திலும் இதே அவலம்தான் நடக்கிறது. ஒரு இலையில் இருபத்தியோரு வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன. இன்றைய சூழ்நிலையில் ஐம்பது சதவிகிதம் பேர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இலையில் பரிமாறப்படும் பெரும்பாலான உணவுகள் குப்பைத்தொட்டிக்கே செல்லுகின்றன. திருமணங்களுக்கு வருகை தரும் பணக்கார உறவினர்களை வாய் நிறைய சிரித்து வணங்கி வரவேற்பதும், ஏழை உறவினர்களை கண்டு கொள்ளாமல் விடும் காட்சிகளையும் தற்காலத் திருமணங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

அடுத்தபடியாக, மொய் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்து. மொய் என்ற பெயரில் கடிகாரங்கள், அலங்காரப் படங்கள், விளக்குகள் போன்றவற்றை ஒரே சமயத்தில் பலர் வாங்கிக்கொண்டு வந்து தரும்போது அவை அனைத்தும் வீணாகிப் போகும் பொருட்களாகி விடுகின்றன. தற்போதைய நவீன யுகத்தில் மொய் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

திருமண அழைப்பிதழை முடிந்த மட்டும் கணவன் மனைவி சகிதமாக வீடேறிச் சென்று முறைப்படி அழைக்கப் பழக வேண்டும். திருமணத்திற்கு வரும் ஒவ்வொருவரையும் தம்பதி சமேதராய் கைகூப்பி வணங்கி மனதார வரவேற்க வேண்டும். ஏனெனில், இவர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்தான் நம் குழந்தைகளை சீரும் சிறப்புமாக வாழ வைக்கும். ஒவ்வொரு திருமணத்தையும் வீண் ஆரவாரம், வீண் சப்தம் இவை ஏதுமின்றி உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்து மிக எளிமையாக, அதேசமயம் சிறப்பாக நடத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com