

தற்போதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையில், கணவன் மனைவி இருவருமே வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் பல குடும்பங்களில் உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை வாட்ஸ் அப்பில் சாட் செய்து கொண்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே சந்தித்துக் கொள்ளும் தம்பதிகள் இன்று நிறைய உண்டு. இத்தகைய சூழ்நிலையில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் தங்களின் புரிதலையும் அன்பையும் எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
டிஜிட்டல் வழியில் தம்பதிகள் அன்பு பெருக சில எளிய வழிகள்
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்களுக்கு எவ்வளவுதான் நண்பர்கள் இருந்தாலும், தன் துணையிடம் மனம் விட்டுப் பேசும்போது கிடைக்கும் நிம்மதியே அலாதியானதுதான். ஆனால், வெவ்வேறு ஊர்களில் தூர தூரமாக இருக்கும்போது தினமும் நேரில் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியாது.
இன்றைய டிஜிட்டல் உலகில் இதனை ஓரளவுக்குச் சாத்தியப்படுத்த முடியும். காலையில் எழுந்தவுடன் தம்பதியர் ஒருவருக்கொருவர் 'குட் மார்னிங்' மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம். மதிய உணவின்போது ஒரு சின்ன வீடியோ கால் பேசி, "இன்னைக்கு ஆபீஸ்ல என்ன நடந்துச்சு தெரியுமா?" என அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வது, எட்டத்தில் இருந்தாலும் இதயத்தால் பக்கத்தில் இருக்கிறீர்கள் என்கிற உணர்வை உண்டாக்கும். கடமைக்காகப் பேசாமல், உண்மையான அக்கறையோடு பேசி, 'நான் இருக்கிறேன்' என்ற பாதுகாப்பு உணர்வை ஒருவருக்கொருவர் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
வார இறுதியில் தம்பதிகள் அன்பு குறையாமல் நேரத்தை செலவிடுவது எப்படி?
வார இறுதியில் சந்திக்கும்போது, வாரம் முழுக்கச் சேர்த்து வைத்த அலுப்பையோ அல்லது கோபத்தையோ காட்டி, இருக்கும் பொன்னான நேரத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த இரண்டு நாட்களையும் மிகவும் 'குவாலிட்டியான' நேரமாக மாற்றிக்கொள்ள வேண்டும்; அது தம்பதிகளின் கைகளில்தான் உள்ளது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சமைப்பது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, எளிய விஷயங்களைப் பேசிப் பரிமாறிக் கொள்வது போன்றவை அன்பைப் பல மடங்கு அதிகரிக்கும். மாலை நேரத்தில் பார்க், தியேட்டர் என ஏதாவது ஒரு சின்ன அவுட்டிங் போய் வரலாம்.
இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையுடனும் புரிதலுடனும் இருப்பது அவசியம். சந்தேகங்களுக்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது. துணைக்கு போன் செய்யும்போது அவர்கள் பிஸியாக இருந்தால், உடனே கற்பனைக் குதிரையைத் தட்டிவிடாமல் அவர்களின் வேலைச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் நண்பர்கள் வட்டம் மற்றும் சக ஊழியர்கள் யார் என்பதைத் துணைக்குத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். புதிய நபர்களுடன் வெளியே செல்ல நேர்ந்தால், அதை முன்கூட்டியே உங்களது துணையிடம் தெரிவித்துவிடுவது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும். இருவருமே தத்தமது நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை பரஸ்பரம் அனுமதிக்க வேண்டும்.
பரஸ்பர நம்பிக்கையுடன் தம்பதிகள் அன்பு ஆயுள் வரை நீடிக்க செய்ய வேண்டியவை
மிக முக்கியமாக, இந்த 'வீக்-எண்ட்' தம்பதி வாழ்க்கை என்பது ஒரு தற்காலிகமான ஏற்பாடாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே நிரந்தரமாகிவிடக் கூடாது. "இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள், அதற்குள் மாறுதல் வாங்கிக்கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும்" என்கிற தெளிவான இலக்கை இருவருமாகச் சேர்ந்து எடுக்க வேண்டும்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால் ஓரளவு பணம் சம்பாதித்த பிறகு, குறிப்பிட்ட சில வருடங்களில் ஊருக்குத் திரும்புவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல், எல்லையற்ற காதல் இருந்தால் தூரம் என்பது வெறும் கிலோமீட்டர் மட்டும்தான், இதயங்களின் தூரம் அல்ல!