
அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே திண்ணை ஒன்று இருக்கும். மாலை நேரமானால் அந்தத் திண்ணையில் கூடும் மக்கள், ஒருவருக்கொருவர் தாங்கள் சந்தித்த அனுபவங்கள் மற்றும் உறவுகள் பற்றி பேசி மகிழ்வார்கள். சில சமயங்களில் அந்த வீட்டு உரிமையாளர் தரும் மோர், காபி போன்ற உபசரிப்புகளும் அதில் அடங்கும்.
இதுபோன்ற திண்ணைகள் அப்போது நட்புகள், உறவுகளுக்கு இடையில் ஒரு பிணைப்பை உருவாக்கும் பாலமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. ஆனால், இந்தக் காலத்தில் எந்த வீட்டிலும் திண்ணைகள் இல்லை. அதற்கு பதில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கணினி மற்றும் அலைபேசி போன்ற டிஜிட்டல் சாதனங்கள் இடம் பிடித்துள்ளன. நமது நேரங்களைக் களவாடும் இந்த டிஜிட்டல் உலகில் எப்படி நட்புகள் மற்றும் உறவுகளிடம் உண்மையான மற்றும் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நாம் பெரும்பாலும் அதிகம் சந்திக்கும் குடும்பத்தினரின் பிணைப்புகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். முதலில் கணினி மற்றும் அறிவியல் சாதனங்களுக்கு விடுதலை தந்து தொழில்நுட்பம் இல்லாத பிரத்யேக நேரங்களை உருவாக்குங்கள். நேருக்கு நேர் கலந்துரையாடி மகிழ உணவு அல்லது குடும்ப செயல்பாடுகளின்போது அலைபேசி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களை கண்டிப்பாக அனுமதிக்காதீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமும் இந்த விதிமுறையைப் பழக்கப்படுத்துங்கள்.
வாரத்தில் அனைவருக்கும் வசதியான ஏதேனும் ஒரு நாளைத் தேர்வு செய்து அதில் குடும்பத்தினரின் கூடுகையுடன் திரைப்படங்கள், பொழுதுபோக்கு கேளிக்கை இடங்கள், மினி சுற்றுலாக்களை திட்டமிடுங்கள். மன அமைதி மற்றும் அன்பான தொடர்புகளை ஊக்குவிக்கும் தியானம் அல்லது யோகா போன்ற மன நிறைவுப் பயிற்சியை இணைந்து குழுவாக மேற்கொள்ளுங்கள்.
அதேபோல், பணம் மட்டும் நிம்மதியைத் தருவதில்லை என்பதை புரியவைக்க சமூக சேவை அல்லது தொண்டு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பையும் புரிதலையும் வளர்க்கலாம்.
நேரில் சந்திப்புகள் அல்லது செயல்பாடுகளை தவறாமல் திட்டமிட்டு நேருக்கு நேர் சந்திப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதால் தொடர்புகளை நெருக்கமாக்கி அர்த்தமுள்ள ஆட்டோகிராப் நினைவுகளை உருவாக்கும். உணர்வுபூர்வமான நெருக்கத்தை வளர்க்க அடுத்தவர் பேசுவதை அக்கறையுடன் கேளுங்கள். சிந்தனைமிக்க கேள்விகளைக் கேட்டு உரையை நீட்டியுங்கள்.
நேரில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். நிஜ உலக தொடர்புகளை மாற்றுவதற்குப் பதிலாக, பூர்த்தி செய்ய டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துங்கள். தொடர்புகளை நினைவு கூர வீடியோ அழைப்புகள், செய்திகள் மற்றும் ஆன்லைன் சமூக ஈடுபாட்டைத் தவறாமல் திட்டமிடுங்கள். ஆனால், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள்.
தற்போது வாட்ஸ்அப் குழுக்கள் பெருகி நன்மைகள் தருகின்றன. உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகும் ஆன்லைன் குழுக்கள் மற்றும் உள்ளூர் சந்திப்புகளில் சேர்ந்து உங்கள் ஆர்வங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து வலுவான பிணைப்பில் இணையுங்கள். நேரடித் தொடர்புகள் நன்மை எனினும் இயலாத பட்சத்தில் ஆன்லைன் தகவல் தொடர்புகள் மூலம் உறவுகள் நட்புகளுடன் நிலையான தொடர்பில் இருங்கள். தவறான புரிதல்களைத் தவிர்த்து அதனால் எழும் மோதல்களைத் தள்ளிப்போடாமல் நேரடியாக நிவர்த்தி செய்யுங்கள். உலகில் எங்கிருந்தாலும் வீடியோ கால் வசதி மூலம் முகத்திற்கு முகம் பார்த்துப் பேசி பிணைப்பைத் தொடருங்கள். தெளிவான தகவல் தொடர்புகளைப் பேணுவதன் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தொடர்புகளை சமநிலைப்படுத்துங்கள்.
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களை மதிப்புமிக்கவர்களாக உணர, அன்பான வார்த்தைகள் அல்லது சிறிய பரிசுகள் மூலம் உங்களது நன்றியையும் பாராட்டையும் வெளிப்படுத்துங்கள். மனம் நிறைந்த பாராட்டு உங்களிடம் அவர்களது தொடர்பை வலுப்படுத்தும். பரஸ்பர மரியாதை மற்றும் நெருக்கத்தை உறுதி செய்யவும், ஒருவருக்கொருவர் நேர வரம்புகளுடன் தொடர்பு கொள்ளவும் அவரவருக்கான தெளிவான எல்லைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
நேர்மையான தகவல் தொடர்பு சூழலும், வெளிப்படையாகப் பேசுவதும், சரியான திட்டமிடலும், பாசாங்கற்ற அன்பும் இருந்தால் டிஜிட்டல் உலகிலும் உறவுகளை பேணலாம்.