பணம் மட்டுமே நமது வாழ்க்கையை நிர்ணயித்துவிடாது என்றாலும், செல்வந்தர்களின் குழந்தைகள் சராசரி மக்களின் குழந்தைகளை விட சில குறிப்பிட்ட திறன்களையும், அணுகுமுறைகளையும் கொண்டிருப்பது உண்மைதான். பணக்காரக் குழந்தைங்களுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணம் என்ன? பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில குறிப்பிட்ட விஷயங்களை மிகச்சிறப்பாக கற்றுக் கொடுக்கின்றனர். அவை என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது: பணக்காரக் குடும்பங்களில் பணத்தைப் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கும். இதனால், குழந்தைகள் சிறு வயதிலிருந்தே பணத்தின் மதிப்பு, அதை எவ்வாறு சேமிப்பது, முதலீடு செய்வது, செலவு செய்வது என்பதை கற்றுக் கொள்கின்றனர்.
தன்னம்பிக்கை: பணக்கார குடும்பங்களில் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் திறமைகளை அடையாளம் கண்டு அதை மேம்படுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தப்படுகின்றனர். தோல்விகளை ஒரு பாடமாகக் கருதி மீண்டும் முயற்சி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர்.
கல்வி: கல்வியின் முக்கியத்துவம் என்னவென்று பணக்காரக் குடும்பங்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவர்களின் குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் படிக்க வைக்கப்பட்டு, கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் கல்வி தகுதியை மேம்படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற தயாராகின்றனர்.
தொடர்பு கொள்ளும் திறன்: பணக்காரக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பல்வேறு சூழல்களில் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது, தங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துவது மற்றும் மற்றவர்களின் கருத்தை கேட்டு புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி எப்படி செயல்படுவது போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர்.
நெட்வொர்க்கிங்: பணக்காரக் குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று புதிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டு எதிர்காலத்தில் தங்களுக்கு உதவும் நபர்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
சமூகப் பொறுப்பு: பெரும்பாலான பணக்காரக் குடும்பங்கள் சமூக பொறுப்புடன் இருக்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கும் இதையே அவர்கள் கற்பிக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்கு உதவும் பணிகளில் பணக்காரக் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் தங்கள் பங்களிப்பை அளித்து மனிதநேயத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.
நேர மேலாண்மை: நேரத்தை சரியாகக் கையாண்டாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். இது பணக்காரக் குடும்பங்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவர்களது குழந்தைகளுக்கும் இது கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் சமூகப் பணிகள் என அனைத்தையும் சமநிலையில் வைத்து செயல்பட நேர மேலாண்மை பயன்படுகிறது.
பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் இந்த 7 விஷயங்களையும், சாதாரண சராசரி குடும்பத்து குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க முடியும். இதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டிய தேவை இல்லை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் முறையாக உரையாடி, அவர்களின் திறமைகளை ஊக்குவித்து, சரியான வழிகாட்டுதலை அளித்தாலே போதும்.