ராஜஸ்தான் மாநிலத்தில் அறிமுகமானது பிலோனா (Bilona) நெய். இது பால் க்ரீமிலிருந்து தயாரிக்கப்படுவதில்லை. பாரம்பரிய முறைப்படி பாலைக் காய்ச்சி தயிர் தயாரித்து பின் அந்தத் தயிரை மரத்தினாலான ச்சர்னர் (churner) மூலம் கடைந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. பிறகு அந்த வெண்ணெயைக் காய்ச்சி நெய் தயாரிக்கப்படுகிறது. மரத்தினால் செய்யப்பட்ட, பிலோனா என்ற இந்த ச்சர்னர் பெயரை இந்த நெய்க்கு சூட்டியுள்ளனர். இந்த நெய்யில், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் குடல் இயக்கத்திற்கு பல வழிகளில் உதவக்கூடிய பியூடைரேட் (Butyrate) அதிகம் உள்ளன. ச்சர்னர் உதவியால் தயிரைக் கடைந்து பட்டரைப் பிரித்தெடுக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சிறிதும் குறையாமல் பட்டரில் நிறைந்திருக்கும்.
பாரம்பரிய முறைப்படி நீண்ட நேரம் மிதமான தீயில் வெண்ணெயைக் காய்ச்சி பிலோனா நெய் தயாரிக்கப்படுவதால், இதிலுள்ள ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்ஸைம்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.
பிலோனா நெய் புற்களை உட்கொண்டு வளரும் தேசி பசு (Desi-cow) எனப்படும் இந்திய இனப் பசுக்களின் ஆர்கானிக் பாலில் இருந்து நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது. ஆகையால், இதில் பதப்படுத்தப்பட்ட பாலிலிருந்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் நெய்யில் இருப்பதை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
பெரிய அளவில் தயாரிக்கப்படும் நெய்யில் இருப்பதை விட பிலோனா நெய்யில் மணமும், சுவையும் மிகவும் அதிகம். மிதமான தீயில் காய்ச்சும்போது பால் கேராமலாக மாறி பிலோனா நெய்க்கு ஒரு வகை நட்டி வாசனையையும் கோல்டன் கலரையும் தருகிறது. வெளியே காற்றுப் புகாத பாட்டில்களில் இந்த நெய்யை வைத்திருந்தாலும் இதன் சுவையும் மணமும் நீண்ட நாட்களுக்கு குறையாது.
பிலோனா நெய் தயாரிப்பில் ஆர்ட்டிசனால் (Artisanal) தயிர் சேர்ப்பதால், இதில் செயற்கை நிறமூட்டி, சுவையூட்டி, பிரிசர்வேட்டிவ் போன்றவை இருக்க வாய்ப்பில்லை. பிலோனா நெய் சிறப்பான செரிமானத்துக்கு மிகவும் உதவும். இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
இது நேரடித் தயாரிப்பு முறையில் பின்பற்றப்படுவதில் உள்ள சிரமங்களின் காரணமாகவும், குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுவதாலும் இதன் விலை ரெகுலர் நெய்யின் விலையை விட கூடுதல் ஆகும்.