
வாழ்க்கை என்பது பெரிய கடல். அதில் ஏற்றம், இறக்கம் வந்து வந்து போவது யதார்த்தம். ‘கடல் அலை ஓய்வது எப்போது? சமுத்திர ஸ்நானம் செய்வது எப்போது?’ என்பது போல எதிர்பாராத திருப்பங்கள், சில சந்தோஷங்கள், சில சங்கடங்கள் வந்து போகும் வேளையில், அதை நாம் எதிர்கொள்ளவேண்டும். எப்போதும் எதையும் சமாளிக்கும் போர்ப்படை தளபதி போல நாம் தயாராக இருக்க வேண்டும்.
நாம் கொரிப்பதற்காக நிலக்கடலை வாங்கி சாப்பிடுவோம். சுவாரஸ்யமாக, டேஸ்டாக இருக்கும் அந்த நிலையில், நிலக்கடலை சுவை மாறுவதற்குள் கடைசியாக இருக்கும் ஒரே ஒரு கடலை சொத்தையாக இருக்கும். அதை தெரியாமல் சாப்பிடும் வேளையில் மொத்த சுவையும் மாறிவிடும். அதேபோல, தொலைக்காட்சியில் முக்கியமான ஆன்மிக செய்தி பார்க்கும் வேளையில் மின் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது மனம் முழுதும் சங்கடம் சூழ்ந்துகொள்வதும் நடைமுறையே!
இந்நிலையில், அவசரமாகத் திருமணம் மற்றும் இதர வேலைக்கான நோ்காணலுக்குச் செல்லும்போது பேருந்து கிடைக்காமல் போவதும் அல்லது இரு சக்கர வாகனம் பழுதாகி பாதியில் நிற்பதும் வருத்தமும், கோபமும் ஏற்படுத்தும் நிகழ்வே ஆகும்.
வீட்டில் விசேஷ நாட்களில் பூஜை செய்து முடிக்கும் வேளையில் விளக்கின் திரி தூண்டப்படாமல் தீபம் அணைந்துபோவதும் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் நிஜமே. இதுபோலவே, வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்ப சூழலில் உறவு மற்றும் நட்பு வட்டத்தில் சில மனக்கிலேசங்கள் ஏற்பட்டு உறவில் விரிசல் வருவதும் இயற்கைதான்.
அது மட்டுமா? காலையில் நன்றாக, அன்பாக, பரஸ்பரம் ஒற்றுமையாக இருந்து கலந்து பேசிய மாமியார், மருமகள் உறவில் நம்மையும் அறியாமல் வார்த்தைப் பிரவாகங்களில் கோப தாபங்கள் ஏற்படுவதும் மனம் நொந்து வேதனைப்படுவதும் பல குடும்பங்களில் நிலவி வருவதும் உண்டல்லவா? இவையெல்லாம் திட்டமிட்டு வருவது அல்ல. யதார்த்தமாக நடப்பவை. அந்த நேரத்தில் நமக்கு வரக் கூடாதது மனச்சோர்வும் கோபமும். அப்போது நாம் கடைபிடிக்க வேண்டியது விவேகமும், பொறுமையுமே. விவேகம் கடைபிடித்து வாழ்ந்தால் எதிலும் விடாமுயற்சியோடு செயல்பட்டால் விஸ்வரூப வெற்றி பெறலாம்.
ஒரு விஷயத்தை நாமாகப் பெரிதுபடுத்தினால் அது பெரியதாகி விடும்! அதையே சமாளித்து விடலாம் என நினைத்து பொறுமையுடன் நோ்மறை சிந்தனையோடு செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்! சந்தோஷமான, சங்கடமில்லாத வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான மூல மந்திரங்களாகக் கருதப்படுபவை சிலவற்றை கீழே காண்போம்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நோ்மறை சிந்தனை, ஆன்மிக வழிபாடு, கோபதாபம் தவிர்த்தல், அடுத்தவர் சொல்லுக்கு மரியாதை கொடுத்தல், பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும் குணம், மனசாட்சிக்கு மரியாதை கொடுத்தல், நிதானம் கடைபிடித்தல், ஈவு இறக்கம் பார்த்தல், பிறருக்கு உதவும் தன்மை, அனுசரிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, மனம் விட்டுப் பேசுதல், தெளிவாகப் பேசுதல், நான் எனும் அகம்பாவம் தவிர்த்தல், பாவ புண்ணியம் பார்த்தல் என இப்படிப்பட்ட விஷயங்களை தவறாமல், எந்த சூழலிலும் கடைபிடித்து வாழ்ந்து வந்தால் வாழ்க்கையில் வசந்தம் வீடு தேடி வரும்.