
தோழிகள் வட்டம் மகிழ்ச்சியைத் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியாகவும், மன நலனுடனும் இருக்கவும் உதவுவதுடன் நல்வாழ்வை மேம்படுத்தவும் செய்கிறது.
மகிழ்ச்சி மற்றும் ஆதரவு:
நட்பு வட்டத்தில் ஒருவருக்கு ஏதேனும் மன சங்கடம் ஏற்பட்டால் மற்றவர்களும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், உதவி செய்யவும் தயாராக இருக்கவேண்டும். அதேபோல் ஒரு தோழிக்கு ஏதேனும் மகிழ்ச்சியான செய்தியை கிடைத்தால் அனைவரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ச்சியைக் கொண்டாட சந்தோஷம் பல மடங்கு பெருகும். தோழிகளுடன் சேர்ந்து வெளியில் செல்வதும், மனம் விட்டு சிரித்து பேசுவதும் மனப் புழுக்கங்களை குறைத்து மகிழ்ச்சி தருவதுடன் மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கும்.
மன நலனை மேம்படுத்துகிறது:
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பல்ல. மறு துளி வராமல் தடுப்பது தான் சிறந்த நட்பு. தோழிகளுடன் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை குறைத்து சந்தோஷத்தையும் மனநிறைவையும் தருவதுடன் தனிமையை எதிர்த்து போராடவும் உதவுகின்றன. மனம் விட்டு சிரித்து பேசி நேரம் செலவிடுவதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
சமூக திறன்களை வளர்க்கிறது:
தோழிகளுடன் பழகி அவர்களின் கருத்துக்களை கேட்டு ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது சமூகத்திறன்களை வளர்க்க உதவும். தனியாக இருக்கும் உணர்வை குறைத்து சமூக ஆதரவை அளிக்கும்; மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும். தோழிகள் வட்டத்தில் வேறுபாடுகளைக் கடந்து நல்லுறவைப் பேண சகிப்புத்தன்மை மிகவும் முக்கியம். சமூக உறவுகள் ஒருவருடைய மனநலன் மற்றும் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமானது.
சவால்களை எதிர்கொள்வது:
நெருக்கடியான காலங்களில் தோழிகள் நமக்கு பக்கபலமாக இருப்பது சந்தோஷத்தைத்தரும். விசுவாசமான தோழிகளே கடினமான சூழ்நிலைகளிலும் நம்முடன் தோழமை பாராட்டுவார்கள்.
வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை எதிர்கொள்ள மனதைரியமும், ஊக்கமும் பெற உதவுவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளவும் உதவியாக இருக்கும். கடினமான நேரங்களில் தோள் சாயவும் ஒரு உன்னதமான நட்பு தேவைப்படுகிறது.
கூட்டுப் பயணம்:
தோழிகளுடன் சேர்ந்து பயணம் செய்யும்பொழுது மனம் லேசாகிறது. புதிய இடங்களைச் சென்று பார்ப்பதும், புதிய அனுபவங்களைப் பெறுவதும், நினைவுகளை சேகரிப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. வலுவான சமூக உறவுகள் உள்ளவர்கள் மனச்சோர்வின்றி நல்வாழ்வை அனுபவிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மகிழ்ச்சியான தோழிகள் வட்டத்தை உருவாக்குவது எப்படி?
மகிழ்ச்சியான தோழிகள் வட்டத்தை உருவாக்க உண்மையான நட்புகளை வளர்க்கவும், நேர்மையாக இருக்கவும், மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கவும், நாமும் அக்கறை உள்ளவர்களாக, நம்பகத்தன்மை உள்ளவர்களாக இருக்கவும், நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் செய்தால் மகிழ்ச்சியான தோழிகள் வட்டத்தை உருவாக்க முடியும்.
தோழமையின் வலிமை:
நட்பு என்பது இரத்த உறவுகளுக்கு இணையான ஒரு வலுவான உறவாகும். தோழிகளுடன் நாம் விரும்பும் விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து பேசவும் முடியும். நட்பில் நம்பிக்கையும், உண்மைத் தன்மையும் மிகவும் அவசியம். ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதும், மதித்து நடப்பதும் உறவை வலிமைப்படுத்தும்.
இந்த பண்புகளைக்கொண்ட தோழிகளைக்கண்டால் அவர்களுடன் நெருங்கி பழகுவது நல்லது. இப்படிப்பட்ட தோழிகள் உண்மையிலேயே போற்றப்பட வேண்டிய பொக்கிஷங்கள்தான்.