
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்கள் தங்களுடைய நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். வங்கி லாக்கர் என்பது பொருட்களை வைக்கப் பாதுகாப்பான இடம் என்பது அனைவர் மனதிலும் உள்ள நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமான வங்கி லாக்கரில் வைக்க வேண்டிய மற்றும் வைக்கக் கூடாத பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
வங்கி லாக்கரில் வைக்கக் கூடிய பொருட்கள்: வங்கி லாக்கரை பொறுத்தவரை சொத்து தொடர்பான ஆவணங்கள், கடன் ஆவணங்கள், தங்க நகைகள், பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், காப்பீட்டு பாலிசிகள், சேமிப்பு பத்திரங்கள் போன்ற மதிப்பு மிக்க பொருட்களையும் அதோடு ரகசியமான பொருட்களையும் வங்கி லாக்கரில் வைக்கலாம்.
வங்கி லாக்கரில் வைக்கக் கூடாத பொருட்கள்: வெடி மருந்துகள், போதை பொருட்கள், வெடி பொருட்கள், ஆயுதங்கள், சிதைவுறக்கூடிய பொருட்கள் மற்றும் கதிரியக்கப் பொருட்கள் ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைக்கக் கூடாது. இவை வங்கி லாக்கரில் வைக்கத் தடை செய்யப்பட்ட பொருட்களாக உள்ளன. மேலும், வங்கி லாக்கரில் பணத்தை வைக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கி லாக்கர் யாருடைய பெயரில் உள்ளதோ அந்த வாடிக்கையாளருக்கு மட்டுமே லாக்கருக்கான சாவி வழங்கப்படும். அவரைத் தவிர அவருடைய குடும்பத்தில் உள்ள எந்த உறுப்பினரோ அல்லது வேறு எந்த நபரோ அவருடைய பெயரில் அனுமதி இன்றி லாக்கருக்குள் நுழையவே முடியாது.
வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு வங்கியே பொறுப்பாகும். அந்த வகையில் புதிய விதிகளின்படி வங்கியின் அலட்சியம் அல்லது வங்கியில் பணி புரியும் ஊழியரின் மோசடி காரணமாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருள் சேதமடைந்தாலும் அந்த வங்கி, வாடிக்கையாளருக்கு சேதமடைந்த பொருட்களுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும்.
இந்த இழப்பீட்டுத் தொகை என்பது வங்கி லாக்கரின் ஆண்டு வாடகை கட்டணத்துடன் தொடர்புடையது. அதாவது லாக்கரின் வருடாந்திர வாடகையை விட அந்த வங்கி 100 மடங்கு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுடைய லாக்கரின் வருடாந்திர வாடகை ரூபாய் 2000 கட்டணமாக செலுத்தி இருந்தால் வங்கி உங்களுக்கு ரூபாய் இரண்டு லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.
வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு வங்கி பொறுப்பேற்றுக் கொள்வதால் வீட்டில் மதிப்பு மிக்க ஆவணங்களையும், நகைகளையும் வைப்பதைத் தவிர்த்து வங்கி லாக்கரில் வைத்து பயனடைவதே மிகச்சிறந்த முறையாகும்.