
தனி மனிதனை வழிநடத்துவது மனமே. அந்த மனம் நல்ல சிந்தனைகளை, ஒழுக்கங்களை கற்பிப்பதாக இருத்தலே ஒருவரை நல்வழிப்படுத்தும். அலைபாய்ந்திருக்கும் எண்ணங்களால், ஆசைகளால் அவதியுறும்போது அவனை கட்டுப்படுத்தவும், நேர்வழியில் நடக்கவும் உதவுவது யோகா. இதில் பல்வேறு வகை ஆசனங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முத்திரை, பலன்கள் என நமக்கு பல நன்மைகளைத் தருகின்றது. 5,000ஆண்டுகளுக்கு முன்பு உண்டான யோகா கலையை நடைமுறைப்படுத்தியவர் பதஞ்சலி முனிவர்.
யோகாவில் முத்திரா, வீராசனம், சர்வாங்காசனம், பசங்காசனம், சிரசாசனம், தனுராசனம் என பல வகைகள் உள்ளன. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணா, தியானம், சமாதி என்கிற 8 அம்சங்களைக் கொண்டது யோகா.
இயமம்: பேராசையற்ற நிலை, எதற்கும் உரிமை கொண்டாடாமல் இருத்தல்.
நியமம்: போதுமென்ற மனம் மற்றும் கடவுளிடம் சரணாகதி.
ஆசனம்: அமர்தல், உடல்நிலைக் கட்டுப்பாடு.
பிராணாயாமம்: மூச்சை அடக்குதல்.
ப்ரத்யாஹாரம்: புற உலகப் பொருட்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
தாரணா: மன ஒருமைப்பாடு.
தியானம்: உண்மைத் தன்மையை ஆராய்ந்து சிந்தித்தல்.
சமாதி: உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்து விடுதல்.
கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்கிற 3 முக்கியமான யோகங்கள் பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரோக்கியத்தை முன்னேற்றும் வகையில் ஆரம்பித்து, மோட்சத்தை அடைவது வரை யோகாவின் குறிக்கோள்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சமயங்களும் ஒவ்வொரு விதமான குறிக்கோளுடன் யோகாவை பரிந்துரை செய்கின்றன.
யோகாவின் பயன்கள்:
உடல் நலம் பேண, பலவீனமான பகுதிகளை வலுவடையச் செய்ய, உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள, இரத்தத்திலுள்ள கொழுப்பைக் கரைத்து, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க யோகா உதவுகிறது. மேலும், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்க்க என யோகா பல விதங்களிலும் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தைக் கூட இது எளிதாக்குகிறது.
குழந்தைகளுக்கு நடனப் பயிற்சி போல் யோகா கற்றுத் தரப்படுகிறது. இம்மாதம் ஜூன் 21, சர்வதேச யோகா தினம். வடக்கு அரைக் கோளத்தில் ஜூன் 21 மிக நீண்ட நாளாகக் கருதப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்த இத்தினம் கருதப்படுகிறது. 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில், பிரதமர் நரேந்திர மோடி, யோகாவின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்யும் வகையில் ஆண்டின் ஒரு நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து 2015 ஜூன் மாதம் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள். ‘சுய மற்றும் சமூகத்திற்கான யோகா.’ தனி மனித மனமும், உடலும் சரியாக இருந்துவிட்டால் சமூகம் சிறப்பாக இருக்கும். பல நன்மைகள் கொண்ட யோகாவை நாமும் நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து, யோகாவை கடைபிடிக்க உடல் நலம், மனநலம் சிறப்பாக இருக்கும்.