பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, ‘குட் டச்’ மற்றும் ‘பேட் டச்’ குறித்து போதிக்கின்றனர். அதற்கான விழிப்புணர்வு தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு இருப்பது பாராட்டுக்கூரியதுதான். ஆனால், அதேசமயம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் போச்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நம்மில் எத்தனை பெற்றோர்களுக்கு இருக்கிறது என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் போச்சோ சட்டம். இந்தச் சட்டத்தினை, போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைப்பர். இதன் முக்கிய நோக்கமே பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான். அதாவது, இதனுடைய முழு விரிவாக்கம், ‘பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012.’ இது ஆங்கிலத்தில், ‘The Protection of Children from Sexual Offenses Act, 2012’ எனப்படும். இந்தியாவில் இந்தச் சட்டம் 2012ம் ஆண்டு முதலில் இருந்தே செயல்பாட்டில் இருந்து வருகிறது.
போக்சோ சட்டப் பிரிவுகளும் அதற்குரிய தண்டனைகளும்: போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ஏற்றவாறு பிரிவுகளும் அதற்குரிய தண்டனைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
* பிரிவு 3 மற்றும் 4: குழந்தைகளை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துவது குற்றமாகும். இதற்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டணையாகவும் உள்ளது. இது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும்.
* பிரிவு 5 மற்றும் 6: குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், அது அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்ட நபரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அதோடு அபராதமும் உண்டு.
* பிரிவு 7 மற்றும் 8: பாலியல் சீண்டல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். இவ்வாறான இழிவான செயலில் ஈடுபடும் குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அதோடு அபராதமும் உண்டு.
* பிரிவு 9 மற்றும் 10: குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அதோடு அபராதமும் உண்டு.
* பிரிவு 11 மற்றும் 12: குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாகப் பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது ஆகியவை குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
* பிரிவு 13 மற்றும் 14: குழந்தைகளை வைத்து ஆபாச படங்களை எடுப்பது, விற்பனை செய்வது, தயாரிப்பது, மற்றவருக்குக் கொடுப்பது மிகவும் குற்றமாகும். இது இணைய தளம், கணினி என எந்தத் தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
* பிரிவு 18: குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு துணைபோவதும் குற்றமே. எனவே, இவர்களுக்கும் குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும். அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைப்பதும் குற்றம்தான். இதற்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
எவ்வாறு புகாரளிப்பது?
பாலியல் தொந்தரவு அல்லது பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட அந்த நபரோ அல்லது அவரது பெற்றோரோ, உறவினரோ, நண்பரோ, அவர் படிக்கும் பள்ளியோ, அதன் ஊழியர்களோ தெரிவிக்கலாம். இந்தப் புகாரை நேரடியாக காவல் நிலையத்திலோ அல்லது போக்சோ இ-பாக்ஸ் என்ற இணைய பக்கம் மூலமாகவோ தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி, சிறுவர்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண் `1098' மூலமாகவும் கூட பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்கலாம். அதன் மூலம் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் உள்ளூர் காவல் நிலையத்திடம் புகாரைத் தெரிவிப்பார்.
மற்றொன்று, போக்சோ சட்டத்தின் கீழ் புகார் தரும் நபர் அவருக்கு பாதிப்பு நேர்ந்த உடனேதான் புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பாதிக்கப்பட்ட சிறுவனோ அல்லது சிறுமியோ எந்த வயதிலும் தனக்கு 18 வயதுக்கு கீழ் நேர்ந்த பாலியல் தொந்தரவு அல்லது பாலியல் வல்லுறவு குறித்த புகாரை தைரியமாக முன்வந்து தெரிவிக்கலாம்.
தவறாக புகார் அளித்தால் என்னவாகும்?
சிறுவர் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட போக்சோ சட்டம் ஒரு சிறந்த சட்டமாகும். எனவே, இதனுடைய முக்கியத்துவத்தையும் நன்மையையும் புரிந்துகொள்ளவேண்டும். அவை அனைத்தும் புரியாமல் இந்த சட்டத்தின் பிரிவுகளை உள்நோக்கத்துடன் பயன்படுத்தி பிறர் மீது தவறாக புகார் அளிப்பது இறுதி விசாரணையில் உறுதியானால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்த்தும்கூட விதிக்கப்படலாம்.