நைலிசம் (Nihilism) என்பது வாழ்க்கைக்கு உள்ளார்ந்த அர்த்தம், நோக்கம் அல்லது மதிப்பு இல்லை என்று கூறும் ஒரு தத்துவம். இந்தக் கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் பெரும்பாலும் பாரம்பரிய நம்பிக்கைகள், ஒழுக்கங்கள் மற்றும் மதிப்புகள் அடிப்படையற்றவை என்று நம்புகிறார்கள். எல்லாமே அர்த்தமற்றதாகத் தோன்றுவதால், இது வெறுமை அல்லது விரக்தியின் உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
நைலிச உணர்வுகளை வெல்ல உதவும் சில யோசனைகள்:
1. வாழ்வில் அர்த்தத்தை உருவாக்கவும்: உலகளாவிய அர்த்தம் இல்லாவிட்டாலும், தனக்கென்று ஒரு நோக்கத்தை அளிக்கும் செயல்பாடுகள் அல்லது இலக்குகளைக் கண்டறியவும்.
2. உறவுகளை உருவாக்கவும்: நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நல்ல உறவுகளை உருவாக்கி சமூகத்துடன் இணைந்து வாழவும். வலுவான, ஆதரவான உறவுகள் மற்றும் சொந்தங்கள், நட்புகள் போன்றவை வாழ்வின் நோக்கத்தை உணரச் செய்யும்.
3. அனுபவங்களில் கவனம் செலுத்தவும்: பொழுதுபோக்குகள், பயணம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அது மகிழ்ச்சி, திருப்தி, நிறைவு போன்றவற்றைத் தரும்.
4. நன்றி உணர்வு: இந்த உலகில் எல்லா விஷயங்களுக்குமே நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். எனவே, வாழ்வில் நமக்குக் கிடைத்துள்ள நல்ல விஷயங்களை சிந்தித்துப் பார்த்து அதற்குக் காரணமானவர்களைப் பாராட்டி நன்றி செலுத்துங்கள்.
5. சிறிய இலக்குகளை அமைக்கவும்: சிறிய, அடையக்கூடிய இலக்குகளை அமைக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு சாதனை செய்யத் தூண்டும்.
6. படைப்பாற்றலை மேம்படுத்துதல்: எழுத்து, இசை, நடனம், ஓவியம் போன்ற கலை வடிவங்களில் ஏதாவது ஒன்றிலாவது ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும். இது வாழ்க்கைக்கு அதிக ஆழத்தையும் அர்த்தத்தையும் பெற்றுத் தரும்.
7. பிறருக்கு உதவுங்கள்: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியாகவோ, நண்பர்களுடன் சேர்ந்து பிறருக்கு உதவுவதை ஒரு நோக்கமாகக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது தன்னுடைய வாழ்க்கையிலும் ஒரு நேர்மறையான விளைவைத் தரும்.
8. நினைவாற்றல் மற்றும் தியானப் பயிற்சி: தினமும் சிறிது நேரம் தியானப் பயிற்சி மற்றும் நினைவாற்றல் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தற்போதைய தருணத்தில் வாழவும் வெறுமையின் உணர்வுகளை குறைக்கவும் உதவும்.
9. புத்தகங்கள் படித்தல்: இலக்கியம், சுய சரிதைகள் அல்லது சுவையான கதைகள் போன்றவற்றை வாசிப்பது வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை அளிப்பதோடு சுவாரசியமாகவும் இருக்கும்.
10. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது: புதிய கலைகள் அல்லது புதிய மொழிகள், புதிதாக ஒரு கல்வி என ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வது முன்னேற்றத்தையும் வாழ்வில் நோக்கத்தையும் அளிக்கும். இது ஆர்வம் மற்றும் சுவாரசியத்தைக் கூட்டும்.
11. இயற்கையுடன் ஈடுபாடு: வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காக்கள், மரம், செடி கொடிகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி நேரம் செலவிடுவது, சுற்றியுள்ள இயற்கையான உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தும். இது வாழ்வில் புதிய அர்த்தத்தை, ஆச்சரியத்தைத் தரும்.
12. ஆன்மிக நம்பிக்கை: ஆன்மிக நம்பிக்கைகளில் ஈடுபாடு செலுத்தலாம். இது நம்பிக்கைகளை அதிகரிப்பதுடன் வாழ்வில் புதிய நோக்கம் மற்றும் செயல்பாடுகளை அளிக்கும்.
14. சுய இரக்கம்: தன்னிடம் கடுமையாக நடந்துகொள்ளாமல் கருணை காட்டி சுய இரக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையை வெறுப்பதை விட, போராடுவது பரவாயில்லை என்பதை உணர வேண்டும். வாழ்க்கையை வெறுத்து பிடிப்பின்றி இருக்கும் தன்னைப் போன்ற பிறருடன் இணைந்து ஆதரவு மிக்க புரிதலான ஒரு உலகத்தை உருவாக்க முடியும்.
கடவுள் படைத்த இந்த உலகில் வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்று உணர்ந்து, நைலிச மனப்பான்மையை விலக்கி, மகிழ்ச்சியுடன் வாழவும்.