புதிய வீடு கட்டும் போது அனைவருமே நல்ல நாள் பார்த்து பூமி பூஜை போடுவது வழக்கம். அப்போது தான் எந்தத் தடையுமின்றி வீடு நன்முறையில் மேலெழும்பி வரும். ஆனால் பழைய வீட்டை இடிக்கும் போது கூட நல்ல நாள் பார்க்க வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்தக் குழப்பத்தை தீர்த்து வைக்க உதவுகிறது இந்தப் பதிவு.
பழைய வீட்டில் குடித்தனம் இருக்கும் பலருக்கும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக வாழ்ந்த வீட்டை இடிக்க மனம் ஒப்புக் கொள்ளாது. இருப்பினும் புதிய வீட்டை கட்டியெழுப்ப பழைய வீட்டை இடித்துத் தான் ஆக வேண்டும். பழைய வீடுகளை இடிக்கும் போது சிலர் சரியான நேரம் மற்றும் நாள் எதுவெனப் பார்ப்பதில்லை. இதனால், வீட்டை இடித்து விட்டு புதிய வீட்டை முழுவதுமாய் கட்ட முடியாமலும், கடன் சுமையிலும் மாட்டிக் கொள்கின்றனர்.
சாஸ்திரத்தின் படி சுப போகத் தன்மையைக் தரக் கூடியவன் சுக்கிர பகவான். சுக்கிரனுக்கு உகந்த நாள் வெள்ளிக் கிழமை என்பதால் இந்நாளில் பழைய வீடுகளை இடிப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல. சனிக் கிழமையில் பழைய வீடுகளை இடிப்பதும் குடும்பத்திற்கு ஆகாது.
பூமிக் காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தைப் பெற்றது தான் வீடு. ஆகையால் சாஸ்திரத்தின் படி செவ்வாய்க் கிழமைகளில் பழைய வீடுகளை இடிப்பது தான் நல்லது. செவ்வாய்க் கிழமையில் சூரியன் வளருகின்ற ஏறு பொழுதில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் பழைய வீடுகளை இடித்தால், எந்தவித பாதிப்பும் குடும்பத்திற்கு நேராது.
ஒருவேளை செவ்வாய்க் கிழமைகளில் பழைய வீட்டை இடிக்க வேலையாட்கள் யாரும் வரவில்லை என்றால், மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து, அவரை வணங்கி செவ்வாய்க் கிழமை காலையில் நீங்களே வீட்டின் ஒரு சிறு பகுதியை இடிக்கத் தொடங்கலாம். வீட்டை இடிக்கத் தொடங்கும் நாள் செவ்வாய்க் கிழமையில் இருந்தால் போதுமானது. அதன் பிறகு வேலையாட்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து வீட்டை முழுமையாக இடிக்கலாம்.
பழைய வீடுகளை இடிக்கும் போது அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு பாதிப்பு வராத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இடிக்கும் போது உண்டாகும் தூசுகள் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் என்பதால், தகரத்தால் ஆன தடுப்புகளை அமைத்து விட்டு இடிப்பது நல்லது. இதில் வேலையாட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் மிக முக்கியமானது. பழைய வீட்டில் பயன்படும் வகையில் இருக்கும் கதவு மற்றும் சன்னல்களை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வது, புதிய வீடு கட்டும் போது உதவும்.