தூங்குவதற்கு சரியான நேரம் எது?

தூங்குவதற்கு சரியான நேரம் எது?
Published on

வேலைக்கான நேரம், குடும்பத்துக்கான நேரம் என ஒரு நாளில் பலவற்றுக்கு நேரம் ஒதுக்குகிறோம். உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். இதனால் அடுத்து செய்யப்போகும் விஷயத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

உடலில் நீர் சத்து குறைவதுதான் அநேக வியாதிகளுக்கு காரணமாகிறது. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். காலை நேரங்களில் அதிக தண்ணீர் அருந்துங்கள், இரவு நேரங்களில் குறைவான அளவில் நீர் பருகுங்கள்.

உணவை சமைத்து மூன்று மணி நேரத்துக்குள் சாப்பிடுவது ஆரோக்கியமானது. அதிகபட்சமாக 24 மணி நேரத்துக்கு மேலாக சேமித்து வழங்கப்படும் பழைய உணவை உண்பது தீங்கானது. இதனால் வயிறு, குடல் ஆரோக்கியம் கெடும் என்கிறார்கள்.

தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்கின்றவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதுடன், நோய்களின் பிடியிலிருந்தும் தப்பி வருகிறார்கள். அது ஒரு தடுப்பூசி போல செயல்படுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிட வேண்டாம். மருந்து, மாத்திரைகள் சாப்பிட்ட பின்னரோ, உணவுக்குப் பின்னரோ உடனே படுத்துவிடாதீர்கள்.

மாலை 5 மணிக்கு பிறகு ‘ஹெவியாக’ சாப்பிட வேண்டாம். அதேநேரத்தில் உங்கள் இரவு உணவை 8 மணிக்குள் அல்லது தூங்கப்போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக்கொள்ளுங்கள். இது பல நோய்கள் வரும் வாய்ப்புகளை தடுக்கும்.

தூங்குவதற்கு சரியான நேரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை. தூக்கத்தின் அவசியத்தை பலரும் அறிவதில்லை. தூக்கக் குறைபாடு என்ன செய்யுமென்றால், குறைந்த உடல் பலம், செரிமான கோளாறு, ஹார்மோன் சமச்சீரற்ற நிலை, தவறான உணவு பழக்கம், குறைந்த நோய் எதிர்ப்பாற்றல் போன்றவற்றை உண்டாக்கும்.

சூரிய வெளிச்சம் வந்த பின்னரும் தூங்குவது நல்லதல்ல. காலையில் எழுந்ததும் கண்கள் கூசாத அளவில் சூரிய கதிர்களைப் பார்ப்பது அன்றைய நாள் முழுவதும் நல்ல மனநிலையும், உடல் ஆற்றலையும் அதிகரிக்க உதவும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பொரித்த மற்றும் வறுத்த உணவுகள் உடல் பருமனுக்கும், கேன்சருக்கும் முக்கியக் காரணிகள். எந்தப் பொருளில் 15 நாட்களில் பூச்சி வருவதில்லையோ அவை வேதிப்பொருள் நிறைந்த, சுத்திகரிக்கப்பட்ட பொருள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இயற்கையாகக் கிடைக்கும் உப்பு பழுப்பு நிறத்தில் சற்றே அழுக்கடைந்தபடி இருக்கும். அதுதான் அயோடின் நிறைந்த நல்ல உப்பு. அந்த கல் உப்பின் குறைவான பயன்பாடே தைராய்டு கோளாறுகளுக்குக் காரணம்.

காலையில் எழுந்ததும் காபி குடித்தால்தான் எல்லாம் நடக்கும் என்று நம்புபவர்களா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தத் தகவல். முதல்நாள் சாப்பிட்ட உணவுகள் செரிமானமாகி மலக்குடலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி குடித்தால், அது அசிடிட்டியை உருவாக்கும். அதுவே எழுந்ததும் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு காபியோ, டீயோ குடித்தால் பிரச்னை இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com