ஆத்மார்த்தமாக நம் மனதைத் திறந்து அனைத்தையும் பகிரும் ஒரே ‘உறவு’ ஆழ்ந்த நட்பே. அப்படிப்பட்ட நட்பு இன்றைய அவசர யுகத்தில், சுயம் சார்ந்து இயங்கும் நிலையில், தொலைந்து போனதா?
நட்பு என்பது பள்ளி, கல்லூரி, அலுவலகம் சார்ந்தும், அண்டை அயல் வீட்டுத் தொடர்புகள் சார்ந்தும், வெகு சில நேரங்களில் சொந்தங்களிலிருந்தும் அமையும். இந்த நட்பு வெகு சிலரிடம் மட்டுமே ஆழ்ந்தும் நீடித்தும் தொடரும். வளர்ச்சி பெறும். அது தன்முனைப்பால் ஏற்படுவது அல்ல. அது நிகழும், நம்மை அறியாமல்... ஒரு ஆழ்ந்த தியானம் போல, ருசியான சமையல் போல, பிரமிக்கும் காட்சி போல, மகத்தான படைப்பு போல.
வாராது வந்த மாமணி போன்ற அந்த நட்பில் திளைத்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமையும் புரியும், தெரியும். அது ஒரு தரிசனம். விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர். சொல்லவோ விளக்கவோ முடியாது. குளிர்ந்த காற்றைப் போல, மகிழ்ந்த சுவையைப் போல, கண்ட அரிதான தரிசனம் போல, முகர்ந்த நறுமணம் போல, ஸ்பரிசித்த சுகம் போல ஐம்புலங்களாலும் உணரும் ஒருமித்த உணர்வு.
அப்படி அமைந்த நட்பில் பேதங்களோ, எல்லைகளோ, தூரங்களோ எதுவும் பொருட்டல்ல. எல்லாவற்றையும் பகிர்ந்து சில சமயங்களில் ஆலோசனை பெற்று, பல சமயங்களில் கடிந்து கொள்ளப்பட்டு, வெகு சமயங்களில் வெறுமனே கேட்கப்பட்டு காலங்கள் நகரும். அந்த நட்பிடம் தான் நமக்குப் பேசுவதற்கும், நாம் கேட்பதற்கும் நிறைய இருக்கும், எப்போதும்,எந்நேரமும். தான், தன் என்ற பாகுபாடு மறைந்து வெட்டவெளியில் நட்புக்காகவே நடக்கும் சம்பாஷனைகள் இடம் பொருள் சூழலை மறந்து நிகழும். சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் உள்ள தூரம் தொலைக்கப்படும். பகிர்வது பரஸ்பரமாகவும், ஆத்மார்த்தமாகவும், அன்யோன்யமாகவும் அமையும். இப்படிப்பட்ட ஆழ்ந்த நட்பு என்பது எல்லோருக்கும் வெகு குறைவாக, ஒன்றோ இரண்டோ நபர்களுடன் தான் அமையும். அப்படி அமைந்தாலும் அது நீடித்து நிலைத்து நிற்பது அதைவிட அரிதான நிகழ்வு.
அது நிகழ்ந்தால் அப்படி அமையப்பெற்றவர் மிகவும் பாக்கியசாலி. அந்த நட்பிடம் நமது அந்தரங்கம் முதல் நேற்று கண்ட காட்சி வரை அனைத்தையும் சொல்லலாம். எந்த எதிர்பார்ப்புக்கும், அதில் இடமில்லை. அவை மதிப்பீடப்படாமல், வேறு யாரிடமும் பகிரவும் படாமல் அவ்விடத்திலேயே அமிழ்த்தப்படும், விதைக்கப்படும்.
இன்றைய உலகில் அப்படிப்பட்ட அன்னியோன்யத்தை எதிர்பார்ப்பது வீண் கனவே. அவரவரின் வாழ்க்கை, தனக்கும் சமூகத்திற்குமான போராட்டமாக, உறவுக்கும் உரிமைக்கும் நிகழும் சச்சரவாக, செயலுக்கும் நேரத்திற்கும் நிகழும் ஓட்டமாக, ஆசைக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளியாக மாற்றம் கண்டு நிற்கிறது.
இதனால் மெல்லிய மேன்மையான உறவுகளுக்கு சாத்தியமற்று போய்விட்டது. கருவிகள் நம்மை இணைப்பது போல தோற்றம் காட்டி தூரத்தில் வைக்கிறது. வேகம் நம்மை அருகில் இருப்பதாக எமாற்றி இடைவெளி காக்கிறது. வசதிகள் நம் வாழ்வை சுகமாக்கியது போல மாயை செய்து சுமையாக மாறி நிற்கிறது. இப்படிபட்ட கால சிக்கல்களுக்கு அருமருந்தாக அமைவது அழ்ந்த நட்பு மட்டுமே.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பரிமாற்றம் நடப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. எப்போது எவ்வளவு காலம் கழித்து தொடர்பு கொண்டாலும் விட்ட இடத்திலிருந்து தொடரும் அற்புதம் நிகழ்வதும் இந்த நட்பில் தான்.
அறுபது நண்பர்கள் பள்ளி தோழர்களாக, கல்லூரியில் படித்தவர்களாக ஒன்றிணைக்கப்பட்டு whatsapp குழுவில் இயங்கலாம். அதில் எத்தனை பேரிடம் நம் ஆத்மார்த்த நட்பு இருக்கும் என்று சொல்வது கடினம். அலுவலக, தொழில் முறையில் நமக்கு பல நூறு நபர்களை தெரியலாம். தினந்தோறும் தொடர்பிலும் இருக்கலாம். இவர்களில் எத்தனை பேரிடம் நம் அந்தரங்கம் திறக்கப்படும் என்பது பெறும் கேள்வி.
நட்பே வாழ்வை ரசனை மிகுந்ததாக, உயிர்நிலை தொலைக்காமல் இருக்க உதவும். நமது வாழ்வின் கண்ணாடியாக, ஏன் மனசாட்சியாக கூட அமையும். ஒரே சிந்தனையில் இருந்தாலும் வேறு பார்வை தரும். இருவேறு உயிராக இருந்தாலும் ஒருமித்து இயங்கும். தன்னலம் தொலைத்து தனக்கென எதையும் ஒளிக்காமல் ஒதுக்காமல் ஒற்றை தன்மையில் இயங்கும். இப்படிப்பட்ட நட்பில் எந்த வித சமூக கல்வி வசதி சார்ந்த வேறுபாடுகள் தென்படவே செய்யாது. பல திரிகள் இருந்தும் ஒன்றிணைந்த ஜோதியாக ஒளிர்வதே அதன் விஷேசம். அன்பால் இணைந்தோமா அறிவால் நெருங்கினோமா என்பது விளங்காது. நெருக்கம் கொண்டோம் என்பதே நிதர்சனம். அந்த நிதர்சனமே நட்பின் தரிசனம்.