விமர்சனம்: நிழற்குடை - 'Feel Good' படம்!
ரேட்டிங்(3.5 / 5)
"நாம குழந்தைங்கள போர்ட்டிங் ஸ்கூல்ல சேர்க்கிறோம். குழந்தைகள் பெரியவங்க ஆனதும் நம்மள முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாங்க" என்று தேவயானி நிழற்குடை படத்தில் வசனம் பேசும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம். வன்முறை, ஆபாசம் அதிகம் உள்ள தமிழ் திரையில் அன்பின் தேவையை சொல்லும் படமாக வந்துள்ளது நிழற்குடை.
இலங்கையின் இறுதி போரில் தனது உறவுகளை இழந்த ஜோதி (தேவயானி) சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி அங்கேயுள்ள முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறார். அங்கே வரும் தம்பதிகளான நிரஞ்சன்(விஜித்) மற்றும் லான்சி (கண்மணி) தாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதாகவும், தங்கள் குழந்தை நிலாவை பார்த்துக்கொள்ள தங்களுடன் வந்து தங்குமாறு ஜோதியிடம் அன்பு வேண்டுகோள் வைக்கிறார்கள். ஜோதியும் ஏற்று கொண்டு குழந்தையை பார்த்து கொள்ள இவர்களின் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கே குழந்தை நிலாவுக்கு, தனது தாய் தந்தையிடம் கிடைக்காத அன்பு ஜோதியிடம் கிடைக்கிறது. மூன்றாண்டுகளுக்கு பின்பு நிலாவின் பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. அமெரிக்கா கிளம்பும் தருவாயில் பெற்றோர்களுடன் செல்ல மாட்டேன், ஜோதியுடன் தான் இருப்பேன் என குழந்தை நிலா பிடிவாதம் பிடிக்கிறாள். குழந்தையை சமாதானப்படுத்தி அமெரிக்கா அழைத்து சென்றார்களா? என்பது தான் இப்படத்தின் கதை.
கொஞ்சம் நாடகபாணி, அதிகமான வசனங்கள்... என ஒரு சில குறைகள் படத்தில் இருந்தாலும், படம் நகரும் விதம், கதாபாத்திர உருவாக்கம் போன்றவைகளில் படம் சிறப்பாக வந்திருக்கிறது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் குழந்தைகள் படும் பாட்டை காட்சி படுத்திய விதம் லைவ்வாக பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. குடுபத்தை இழந்த அன்புக்கு ஏங்கும் ஒரு பெண், அந்த அன்பு ஒரு குழந்தை மூலமாக கிடைத்தால் அடையும் மகிழ்ச்சியை தனது அனுபவமிக்க நடிப்பால் மிக சிறப்பாக தந்திருகிகிறார் தேவயானி.
இவரை தவிர வேறு யாரேனும் ஜோதி கேரக்டரில் நடித்திருந்தால் சிறப்பாக இருக்குமா என்பது சந்தேகமே. குழந்தை காணாமல் போகும் காட்சியிலும், குழந்தையை விட்டு பிரியும் காட்சியிலும் ஒரு உணர்ச்சி போராட்டத்தையே கண்முன் கொண்டு வந்து விடுகிறார் தேவயானி.
நிலாவாக நடித்த குழந்தை, கணவனாக நடித்த விஜீத், மனைவியாக நடித்த கண்மணி மூவருமே கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள்.
நரேன் பாலகுமாரின் பின்னணி இசை நிழற்குடை படத்தை ஒரு பீல் குட் (Feel Good) படமாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தில் ஒரிரு குறைகள் இருந்தாலும், இன்றைய கால கட்டத்திற்கு தேவையான குழந்தை வளர்ப்பு, கூட்டு குடும்பத்தின் தேவை போன்ற நல்ல விஷங்களை படத்தில் சொல்லியதற்காக நிழற்குடை படத்தின் டைரக்டர் சிவன் ஆறுமுகத்தை பாராட்டலாம். நிழற் குடை - அன்பின் நிழலை உணர வைக்கிறது.