
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுவர்கள் மத்தியில் பணப்புழக்கம் அவ்வளவாக இல்லை. அப்படியே இருந்தாலும் அதிகபட்சம் 100 ரூபாய்க்குள் தான் இருந்தது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசைப்படும் அனைத்தையும் வாங்கிக் கொடுக்கின்றனர். இதில் தவறில்லை என்றாலும், உபயோகமான செலவா என்பதை நாம் மட்டுமல்ல, சிறுவர்களும் சிந்திக்கும் வண்ணம் அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். சிறுவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் திறம்படச் செயல்பட பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
வளரும் இளம் பருவத்திலேயே சிறுவர்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும். சமீபத்தில் 10 வயதைக் கடந்த சிறுவர்கள் கூட சுயமாக வங்கிக் கணக்கைத் தொடங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனை சிறுவர்கள் உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் துணைபுரிய வேண்டும். அன்றெல்லாம் மாணவர்களின் முதல் சேமிப்பே உண்டியலில் இருந்து தான் தொடங்கியது. உண்டியல் கலாச்சாரம் மெதுவாக மறையத் தொடங்கினாலும், அதுகுறித்த விழிப்புணர்வுகளை சிறுவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.
தேவையான செலவு:
தினசரி வாழ்வில் தேவையான செலவு எது? தேவையற்ற செலவு எது என்பதை சிறுவர்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
1. அவசியத் தேவைகள் - அளவானது - செலவிடுங்கள்
2. ஆசைகள் - அளவற்றது - கட்டுப்படுத்துங்கள்
3. தீயப் பழக்கங்கள் - ஆபத்தானது - தவிர்த்திடுங்கள்.
இந்த 3 முக்கிய பண மொழிகளை அனைவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். ஒரு பொருள் நமக்கு அவசியமாகத் தேவைப்பட்டால், அதற்குரிய பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்குவது தான் நல்லது. இந்தப் பழக்கத்தை சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால், பிற்காலத்தில் மாதத் தவணைக் கடனில் சிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஜாடி முறை:
சிறுவர்களுக்கு 3 ஜாடிகளைக் கொடுத்து பணத்தை நிர்வகிக்க கற்றுக் கொடுக்கலாம். சேமிப்புக்கு ஒரு ஜாடி, உதவி செய்ய ஒரு ஜாடி மற்றும் செலவு செய்ய ஒரு ஜாடி என பிரித்து மாணவர்களின் நிதி ஆற்றலை ஊக்குவிக்க வேண்டும். உதாரணத்திற்கு பெற்றோர் கொடுக்கும் 100 ரூபாயை சேமிப்புக்கு ரூ.50, பிறருக்கு உதவி செய்ய ரூ.25 மற்றும் செலவு செய்ய ரூ.25 என ஜாடிகளில் போட்டு வரலாம். தேவைப்படும் நேரத்தில் இந்தப் பணத்தை எடுத்து செலவு செய்யும் போது பண நிர்வாகத்தில் சிறுவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும்.
பட்ஜெட்டை சொல்லிக் கொடுங்கள்:
சிறுவர்கள் 14 வயதைக் கடந்த பின்பு, வீட்டின் செலவுகள் பற்றிய விவரங்களை சொல்ல வேண்டும். எதற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை இப்போதே அவர்கள் தெரிந்து கொண்டால், பின்னாட்களில் உபயோகமாக இருக்கும். அதோடு குடும்ப பட்ஜெட்டை எப்படி போட வேண்டும் என்பது பற்றியும் சொல்லித் தர வேண்டும். சிறு வயதிலேயே பட்ஜெட் மீதான புரிதல் வந்து விட்டால், நிச்சயமாக வீண் செலவுகளைத் தவிர்த்து விடுவார்கள்.
சேமிப்பு விதி:
மாத வருமானத்தை 50:30:20 என்ற விகிதத்தில் பிரித்து செலவு செய்ய வேண்டும் என சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.குடும்பச் செலவுக்கு 50%, தேவையைப் பொறுத்து விடுமுறை நாட்களை ஆனந்தமாய் கழிக்க 30% மற்றும் சேமிப்புக்கு 20% என வருமானத்தைப் பிரிக்க வேண்டும். வருமானம் அதிகரிக்கும் போது சேமிப்பையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.