கைக்குழந்தைகளின் ஐம்புலனைத் தூண்ட என்ன செய்ய வேண்டும்?

கைக்குழந்தைகளின் ஐம்புலனைத் தூண்ட என்ன செய்ய வேண்டும்?

குழந்தை வளர்ப்பு என்பது ஓர் அற்புதக் கலை. இது கருவில் இருந்தே தொடங்கினாலும், குழந்தை பிறந்த பின் ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியமானதாகும். குழந்தை பிறந்த பிறகு இரண்டு மாதங்களிலிருந்து ஐந்து மாதங்கள் வரை மிகவும் முக்கியமானதாகும். இந்தக் காலகட்டத்தில்தான், ஒரு குழந்தையின் கேட்டல், தொடுதல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல் ஆகிய ஐந்து புலன்களும் தூண்டப்பட்டு அந்தக் குழந்தை தனது உலகத்தையும், தனது சொந்தங்களையும் உணர்ந்து கொள்கிறது. குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் இந்த உணர்வு அனுபவம்தான், அதன் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தையை அடிக்கடி அணைத்துக்கொள்ள வேண்டும்; தூக்கிக்கொள்ள வேண்டும். இதனால் அக்குழந்தை பாதுகாப்பாக உணர்வது மட்டுமின்றி, தனது பெற்றோர், குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளும். உறவுகள் மீது குழந்தைக்கு பாசம் உண்டாகும். அடிக்கடி குழந்தையின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு நிறைய பேச வேண்டும். அதற்கேற்ப குழந்தை தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட முக பாவங்களையும், உடல் அசைவுகளையும் பயன்படுத்தும்.

தலையை நிமிர்ந்து பார்க்கும், பழகிய குரல்களை கவனிக்கும், சத்தம் எழுப்பும், முகத்தின் மேல் துணி இருந்தால் அதை விலக்கும். இவற்றை செய்யவில்லை என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். குழந்தையைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி குழந்தையிடம் பேச வேண்டும். குழந்தை பேசத் தொடங்கும் காலத்தில் பல சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த அனுபவம் உதவும்.

குழந்தை பார்க்கும் பொருட்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டால் குழந்தைகளின் தொடர்பு திறன் மேம்படும். குழந்தை தனது உடலைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் தர வேண்டும். குழந்தைகளை தரையில் விட்டால், அது தனது உடல் உறுப்புகளை அசைத்து விளையாடும். இது உடல் வளர்ச்சிக்கு எளிதாகும். குழந்தையின் உடலில் உள்ள அனைத்து அங்கங்களும் இணைந்து செயல்படும். தலையைத் தூக்கி, தொலைதூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கும்.

சுவாரசியமான பொருட்களை, பொம்மைகளை குழந்தைகளிடம் கொடுக்கும்போது, தன்னைச் சுற்றியுள்ள பொருட்களைக் குழந்தை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும். இவ்வாறு குழந்தையின் மூளையை நாம் தூண்டுவதன் மூலம் அவர்களின் எதிர்கால வளர்ச்சி மிகச்சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com