

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில், காலை எழுந்தவுடன் பல் துலக்குகிறோமோ இல்லையோ, கைகள் தானாகச் செல்போனைத் தேடுகிறது. இரவு தூங்கியது முதல் காலை விழித்தது வரை நடந்த அனைத்தையும் புகைப்படம் எடுத்து, WhatsApp Status வைக்காவிட்டால் பலருக்கு அந்த நாளே விடிந்தது போல் இருப்பதில்லை.
குடிக்கும் டீ, போகும் வழி, அணியும் உடை, அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங் என வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உலகிற்கு அறிவிக்கும் பழக்கம் இன்று ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. ஆனால், இந்தத் தீவிரமான பகிர்வுக்குப் பின்னால் ஒரு பெரிய உளவியல் சிக்கல் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
'டோபமைன்' போதை!
நாம் வைக்கும் ஸ்டேட்டஸை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள், யார் யார் பார்த்திருக்கிறார்கள் என்று அடிக்கடி செக் செய்யும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் ஒருவித போதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆம், சமூக வலைத்தளங்களில் நமக்குக் கிடைக்கும் 'லைக்'குகளும், கமெண்டுகளும் நம் மூளையில் Dopamine என்ற மகிழ்ச்சி தரும் ஹார்மோனைச் சுரக்கச் செய்கின்றன.
இது ஒரு தற்காலிகமான இன்பம். "என்னை இத்தனை பேர் கவனிக்கிறார்கள்", "என் ரசனைக்கு இத்தனை பேர் அங்கீகாரம் கொடுக்கிறார்கள்" என்ற எண்ணம் கொடுக்கும் போதைக்காகவே, பலர் தொடர்ந்து எதையாவது பதிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒருவகையான கவன ஈர்ப்பு மனநிலை ஆகும்.
தனிமை!
நூற்றுக்கணக்கான காண்டாக்ட் எண்கள் போனில் இருந்தாலும், மனதுவிட்டுப் பேச ஒரு உண்மையான நட்பு இல்லாததுதான் இன்றைய நிதர்சனம். தங்கள் மனதில் உள்ள வலியை, ஏமாற்றத்தை அல்லது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஆள் இல்லாதபோது, மனிதர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஒரு வடிகாலாகப் பயன்படுத்துகிறார்கள்.
சோகமான பாடலையோ அல்லது தத்துவத்தையோ ஸ்டேட்டஸில் வைப்பதன் மூலம், "உனக்கு என்னாச்சு?" என்று யாராவது ஆறுதலாகக் கேட்க மாட்டார்களா என்ற ஏக்கம் பலரிடமும் இருக்கிறது. இது அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் தனிமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை. ஆனால், எதிர்பார்த்த நபரிடமிருந்து பதில் வராதபோது, அது இன்னும் மோசமான மனச்சோர்வை உண்டாக்குகிறது.
தனியுரிமை?
எல்லாவற்றையும் ஸ்டேட்டஸில் வைப்பது என்பது, உங்கள் வீட்டின் கதவை அகலத் திறந்து வைப்பதற்குச் சமம். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள், உங்கள் வீட்டில் என்ன பொருள் இருக்கிறது, உங்கள் பழக்கம் என்ன என்பதை நீங்களே திருடர்களுக்கும், சைபர் குற்றவாளிகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
அதுமட்டுமல்லாமல், குடும்பச் சண்டைகளை மறைமுகமாகத் தாக்கி ஸ்டேட்டஸ் வைப்பது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்கள் கேலிப் பொருளாகப் பார்க்க வழிவகுக்கும். இது அலுவலகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் உங்கள் மீதான மரியாதையைக் குறைத்துவிடும்.
வாழ்க்கை என்பது ரசித்து வாழ்வதற்குத்தானே தவிர, அதைப் பதிவு செய்து பிறருக்குக் காட்டுவதற்காக அல்ல. ஸ்டேட்டஸ் வைப்பது தவறில்லை; ஆனால் அதுவே வாழ்க்கையாக மாறிவிடக்கூடாது. உங்கள் மகிழ்ச்சியையும் சோகத்தையும் வாட்ஸ்அப் திரையில் பகிர்வதை விட, உங்கள் அருகில் இருக்கும் அன்பானவர்களிடம் நேரில் பகிர்ந்துகொள்ளுங்கள். அந்த உரையாடலில் கிடைக்கும் நிம்மதி, எந்த ஒரு 'ஸ்டேட்டஸ் வியூ'விலும் கிடைக்காது. டிஜிட்டல் உலகை விட்டு வெளியே வாருங்கள், நிஜ வாழ்க்கை இன்னும் அழகானது.