
நாம் நமது நண்பர்கள் மற்றும் உறவினா்களோடு, பேசிப் பழகி பல்வேறு விஷயங்களில் ஒத்த கருத்தோடு வாழ்க்கை எனும் ஓடத்தில் பயனிக்கிறோம். இதனிடையில் ஒவ்வொரு நபர்களிடமும் பல்வேறு குணநலன்கள் இருப்பது உண்டு. சிந்தனையும் அதேபோல மாறுபடலாம்! செயல்பாடுகளில் சிலவகை மாறுபாடுகள் வரலாம்!
இருப்பினும் நமக்கு பிடித்த கருத்துகள் சில நடவடிக்கைகள் மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம். பொதுவாக அனைவருக்கும் அனைவரையும் பிடிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், சபை நாகரீகம் என்பது பொதுவானது. அதை நாம் மீறக்கூடாது. நாம் நமது அன்றாட வாழ்வில் தவிா்க்க வேண்டிய அநாகரீகமான விஷயங்கள் நிறையவே உள்ளன.
1. நண்பரோ, உறவினா்களோ கட்டிய வீடு கிரஹப் பிரவேச நிகழ்வுக்குச் சென்றால், கட்டிய வீட்டிற்கு பழுது சொல்லுவது அநாகரீகம்.
2. நோயாளியை மருத்துவமனையில் பாா்க்கச் சென்றால், 'இதே போலதான் எனது உறவினருக்கு பாதிப்பு இருந்தது ஒரே மாதம் தான்' என தேவையில்லாமல் திருவாய் மலர்வது அநாகரீகம்.
3. உறவினா் வீடுகளுக்குச் சென்றால், சாப்பாட்டில் குறைக் கண்டுபிடித்து அனைவர் முன்னிலையிலும் வியாக்கியானம் பேசுவது அநாகரீகம்.
4. திருமண நிகழ்வுகளுக்குச் சென்றால், தம்பதி ஆகப்போகிறவர்களைப் பற்றிய விமர்சனம் வேண்டாம். மாப்பிள்ளை உயரம், பொண்ணு குள்ளம் இதுபோன்ற கருத்துக்களை உதிா்ப்பது அநாகரீகம்.
5. வாழ்ந்து கெட்டவர்களிடம் தேவையில்லாமல் நமது வசதி வாய்ப்புகளைச் சொல்லி தற்பெருமை பேசுவது அநாகரீகம்.
6. உறவினா் வீடுகளுக்குச் சென்றால் அவரது பிள்ளைகள் உயர் கல்வி பற்றி தேவையில்லாமல், 'ஏன் இந்த கோா்ஸ் எடுத்தாய் வேறு கல்லூாியே கிடைக்க வில்லையா?' என அதிகப் பிரசங்கம் பேசுவது அநாகரீகம்.
7. மாமியாா் மருமகள் ராசியாக இருக்கிறாா்களா, என் மருமகள் ஏழு மணிக்குத்தான் தூங்கி விழிப்பாள், ஒரு வேலையும் தொியாது என குறைகளை சொல்வது அநாகரீகம்.
8. இறந்தவர் வீடுகளுக்குச்சென்றால், அஞ்சலி செலுத்திவிட்டு அமைதி காக்க வேண்டும். அதை விடுத்து செல்போனில் யாாிடமாவது தேவையில்லாமல் சப்தமாக பேசுவதை தவிா்க்காமல் தொடா்வது அநாகரீகம்.
9. நண்பரின் மகன் வெளிநாடு போய்விட்டு வந்திருந்தால், உனக்கென்ன குறைச்சல் லட்சத்தில் புரள்கிறாய் என பொறாமை வாா்த்தைகளை உதிா்ப்பது அநாகரீகம்.
10. கோவிலுக்கோ, சினிமாவிற்கோ சென்ற நிலையில் நண்பர் குடும்பத்தைப் பாா்த்தால் கோவிலுக்கா? சினிமாவுக்கா? என தேவையில்லா வார்த்தைகளோடு வெத்து உபசாரம் கேட்பது அநாகரீகம்.
இதே போல நிறைய விஷயங்கள் உள்ளன. இப்படி தேவையில்லாமல் நாகரீகம் கடைபிடிக்க வேண்டிய நிலையில் அதை விடுத்து அநாகரீகம் கடைபிடிப்பதை தவிர்ப்பதே நாகரீகமான செயலாகும்.