கல்யாணத்தைக் கூட நடத்திவிடலாம்; ஆனால் குறிப்பிட்ட செலவில் நம்மால் வீடு கட்டுவது என்பது இயலாத காரியம். வீடு கட்டுவதற்கு என்று ஒரு பட்ஜெட் போடுவோம். ஆனால், நாம் வீடு கட்டி முடித்து கணக்கு பார்த்தால் தலை சுற்ற ஆரம்பித்து விடும். செலவு எகிறி விடும். ‘வீட்டை கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்’ என்பார்கள். கல்யாணத்தைக் கூட சிம்பிளாக ரிஜிஸ்டர் அலுவலகத்தில் முடித்து விடலாம். ஆனால், வீடு கட்டுவது என்பது பெரிய பட்ஜெட்டாகும்.
பேங்க் லோன் போட்டு, சேமித்த பணம் அவ்வளவும் செலவழித்தும் சில சமயம் கடன் கூட வாங்க வேண்டி இருக்கும். அதனால்தான் இப்பொழுது பலரும் புதிய வீடு கட்டுவதை விட, பழைய வீட்டை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதுவும் குறிப்பாக, பழைய அடுக்குமாடி வீட்டை வாங்கும்பொழுது செலவு அதிகம் மிச்சமாகிறது.
1. வீட்டின் வயதுக்கு ஏற்ப: பழைய அடுக்குமாடி வீடு, புதிய அடுக்குமாடி வீட்டின் விலையை விட நிச்சயம் விலை குறைவாகக் கிடைக்கும். பழைய அடுக்குமாடி வீட்டின் வயதை வைத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வீடு கட்டி 5 ஆண்டுகள் ஆகிவிட்டால் 15 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு. 10 முதல் 15 ஆண்டுகள் என்றால் 25 முதல் 30 சதவீதம் வரையும், 20 ஆண்டுகளுக்கும் மேல் என்றால் 40 சதவீதம் வரையும் என்று வீட்டின் வயதை வைத்து விலை குறைவாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதற்கும் குறைவான விலையில் அடுக்குமாடி வீடு வாங்கும்பொழுது வீடு கொஞ்சம் செலவு வைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
2. இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும் மதிப்பீடு: ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதிய வீடு விற்பனை செய்வதைப் போல பழைய வீட்டை விற்பனை செய்ய இயலாது. இடத்திற்கு தகுந்தாற்போல் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, சிட்டியின் மையப் பகுதியில் இருக்கும் புதிய அடுக்குமாடி வீட்டின் விலை இரண்டரைக் கோடி என்று வைத்துக்கொண்டால், பழைய வீட்டை அதே விலைக்கு விற்க முடியாது.
பழைய வீட்டை வாங்கும்போது நிறைய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். அதேபோல், பல விஷயங்களை ஆராய்ந்த பிறகுதான் விலையை மதிப்பீடு செய்ய முடியும். கட்டடத்தின் வயது, பராமரிப்பு, அமைந்துள்ள இடம் (area) என பல்வேறு காரணங்களை ஆராய்ந்த பிறகுதான் பழைய அடுக்குமாடி வீட்டிற்கு விலையை நிர்ணயிக்க முடியும்.
3. வில்லங்கம் இல்லா பத்திரம்: பழைய வீடு வாங்க முடிவு செய்துவிட்டால் முதலில் வீட்டில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். இதற்கு சிறந்த சட்ட ஆலோசகரை சந்தித்து தாய் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம். ஒரிஜினல் பத்திரத்தைப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில், சிலர் தனிநபர்களிடம் அல்லது வங்கியில் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் வாங்கி இருப்பார்கள். ஆனால், பத்திரம் தொலைந்து விட்டது என்று புகார் செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி ஏமாற்றவும் வாய்ப்புள்ளது. எனவே, டூப்ளிகேட் பத்திரம் கொடுத்தால் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
4. வீட்டை வாங்குவதற்கு முன்பு சரி பார்க்க வேண்டியது: வீட்டை வாங்குவதற்கு முன்பு வீட்டு வரி, தண்ணீர் வரியை பாக்கி எதுவும் இல்லாமல் கட்டி இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அத்துடன் இந்த இணைப்புகளை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ள பணம் கொடுக்கும்பொழுதே அந்தப் பணிகளையும் செவ்வனே செய்து விடுதல் வேண்டும். பழைய வீடுகளில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை ஏற்கெனவே இருக்கும் என்பதால் அவற்றை தனியாக பெற அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
5. செலுத்த வேண்டிய கட்டணம்: பழைய அடுக்குமாடி கட்டடத்தில் வீடு வாங்கும்போது குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை ஏற்கெனவே இருக்கும் என்பதால் அவற்றுக்கான செலவு மிச்சமாகும். அதேபோல், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்பொழுது பிரிக்கப்படாத மனைக்கு (யு.டி.எஸ்) புதிய முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்திற்கு செலவாகும். ஆனால், பழைய வீடு வாங்கும்பொழுது இவை எல்லாம் தேவைப்படாது. ஆனால், வீட்டின் தேய்மானம் தவிர்த்து அதன் மதிப்பிற்கு ஏற்ற முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
6. சில்லறை செலவுகள்: பழைய வீடு வாங்குவதில் பணம் ஓரளவு மிச்சமாகும் என்பதால்தான் நிறைய பேர் பழைய வீடுகளைத் தேடி அலைந்து வாங்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், பழைய வீடுகள் வாங்கும்பொழுது எலக்ட்ரிக் பொருட்கள், குழாய்கள், கழிவறை என சில பழுதடைந்து காணப்படும். அவற்றுடன் பெயிண்ட் அடிக்கும் செலவு என சிலவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். அவற்றை சரிசெய்ய பணம் செலவழிக்க வேண்டி வரும்.