இந்தியாவின் பிரபலமான ஸ்டீரிட் ஃபுட் ஆக இருக்கும் 'கார்ன்' என்ற மக்காச்சோளம் சுவையானது மட்டுமல்ல, எளிமையான கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணற்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அற்புதமான உணவாகும். இதன் 9 நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: கார்னில் உள்ள நார்ச்சத்துக்கள், குடலின் இயக்கத்தை சிறப்பாக்கி, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுவதோடு, வயிறு உப்புசத்தைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளர உதவுகிறது.
2. கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: கார்னில் உள்ள லியூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் போன்ற கரோட்டினாய்ட்கள், வயோதிகம் தொடர்பான கண் கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பதோடு, கண்ணில் கண் புரை நோய் வராமல் தடுத்து, ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
3. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது: கார்னில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவி, இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தைக் கொடுக்கிறது.
4. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: கார்னில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தின் நெகிழ் தன்மைக்கு உதவக்கூடிய புரதமான கொலாஜென் உற்பத்திக்கு உதவி, சருமத்தை சரிசெய்கிறது. மேலும், முகத்தில் உள்ள சுருக்கத்தை குறைக்க உதவி, சருமத்துக்கு இளமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது.
5. ஆற்றலைக் கொடுக்கிறது: கார்ன் ஆரோக்கியம் நிறைந்த ஒரு தானியம் மற்றும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோடு, உடலுக்கு முக்கியமான ஆற்றலை வழங்குகிறது. மேலும், கார்போஹைட்ரேட்கள் கார்னில் அதிக அளவு உள்ளதால், இது உங்களை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
6. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது: கார்னில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து, இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, தொற்றுக்களை அடித்து விரட்டுகிறது. இதனால் கார்ன் உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் வளராமல் தடுக்க உதவுகிறது.
7. உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது: கார்னில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளதால், வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, தேவையற்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது. இதனால் உடல் எடை முறையாகப் பராமரிக்கப்படுகிறது.
8. அனீமியா ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது: கார்னில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து இரும்பு குறைபாடு எனப்படும் ‘அனீமியா’ ஆபத்தைத் தடுக்கிறது. ஹீமோகுளோபின் உங்கள் உடல் முழுவதில் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல உதவுகிறது.
9. குளூட்டன் ஃப்ரியான தேர்வு: கார்னில் உள்ள இயற்கை குளூட்டன் இல்லாத தன்மை, சிலியாக் நோய் உள்ளவர்களுக்கு சிறப்பான தேர்வு. சிலியாக் என்பது குளுட்டன் உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு ஆகும். அவர்களுக்கு மட்டுமின்றி, குளுட்டனை தவிர்க்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது.
கார்னில் மேற்கூறிய 9 நன்மைகள் அடங்கி இருப்பதால் இதனை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.