

பெற்றோர்களாக இருப்பது ஒரு கலை என்றால், அதில் பெண் குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு நுட்பமான தவம். பொதுவாகவே பெண் குழந்தைகள் என்றாலே அப்பாவின் செல்லங்கள் என்பது உலகறிந்த உண்மை. அம்மா பலமுறை அடித்துத் திட்டினாலும், வராத வலி அப்பாவின் ஒரு சிறிய அதட்டலில் ஏன் வருகிறது? இதைப் பற்றிப் பல உளவியல் ஆய்வுகள் வியக்கத்தக்கத் தகவல்களைத் தருகின்றன. பெண் பிள்ளைகளின் மனதிற்கும் தந்தையின் வார்த்தைகளுக்கும் இடையிலான அந்த உணர்வுப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள சில முக்கியக் காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
முதல் ஹீரோ:
பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை, இந்த உலகிலேயே மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான முதல் 'ஹீரோ' அவர்களின் அப்பாதான். தனது தந்தை தன்னை எப்போதுமே ரசிப்பார், பாராட்டுவார், தன்னைப் பாதுகாப்பார் என்று ஒரு உயர்வான பிம்பத்தை அவர்கள் பிறந்தது முதலே மனதில் ஆழமாகப் பதித்து வைத்திருப்பார்கள்.
தந்தை எப்போதாவது கண்டிக்கும்போது, அந்த உயர்வான 'ஹீரோ' பிம்பம் தற்காலிகமாக உடைவதுபோல் உணர்கிறார்கள். அம்மாவின் திட்டுக்கள் அவர்களுக்குப் பழகிவிடுகிறது. ஆனால், மிகவும் அரிதாக வெளிப்படும் அப்பாவின் கோபம் அவர்களின் மென்மையான மனதை எளிதில் காயப்படுத்திவிடுகிறது.
குறைவான வார்த்தைகள்... வலியோ அதிகம்:
தந்தையின் கண்டிப்பில் ஒரு தனித்துவம் உண்டு. அதில் வார்த்தைகள் குறைவாகவும், அழுத்தமாகவும் இருக்கும். அம்மா கண்டிக்கும்போது பழைய கதைகளை எல்லாம் பேசி, நீளமாகத் திட்டுவார்கள். அப்போது பிள்ளைகளும் இடையில் பேசி சமாதானம் செய்யவோ அல்லது மல்லுக்கட்டவோ வாய்ப்பு உண்டு.
ஆனால், தந்தை கண்டிக்கும்போது அங்கு ஒரு 'கறார்த் தன்மை நிலவுகிறது. அந்தத் திடீர் மௌனமும், அதிகாரமான வார்த்தைகளும் பெண் பிள்ளைகளுக்கு ஒருவித பாதுகாப்பற்ற உணர்வைத் தந்துவிடுகின்றன. ‘அப்பா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?’ என்கிற கேள்வி அவர்களை நிலைகுலையச் செய்கிறது.
அங்கீகாரத்தை இழக்கும் உணர்வு:
பெண் குழந்தைகள் இயல்பாகவே மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் சிறந்தவர்கள். குறிப்பாக, தனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் அப்பாவின் அங்கீகாரத்தை அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அப்பா கோபப்படும்போது, அவர்களுக்குள் ஒரு தேவையற்ற பயம் எழுகிறது. ‘அப்பாவிற்கு என் மீது இருந்த அன்பு குறைந்துவிட்டதோ?’ அல்லது ‘அப்பாவின் அன்பிற்கு நான் தகுதியற்றவள் ஆகிவிட்டேனோ?’ என்று அவர்கள் எண்ணத் தொடங்குகிறார்கள். அம்மாவின் கண்டிப்பில் உணர்ச்சிகள் மேலோங்கி நின்றாலும், அப்பாவின் கண்டிப்பு ஒரு 'எச்சரிக்கை மணியைப்' போலச் செயல்படுவதால் அது அவர்களை ஆழமாக யோசிக்க வைத்து அழவைக்கிறது.
மனக்கசப்பு:
சீரியசான விஷயங்களுக்கு என்றில்லை, சிறிய விஷயங்களுக்கு அப்பா திட்டினால் கூட சில மகள்களால் தாங்கமுடியாது. ‘வெளியே போனால் சீக்கிரம் வீடு வந்து சேர்’ என்று கண்டிப்பாக சொன்னால் கூட, வளர்ந்து வரும் பெண் பிள்ளைகள் அதைத் தங்கள் சுதந்திரத்தில் தலையிடுவதாகவோ அல்லது அப்பாவிற்கு தங்கள் மீது நம்பிக்கை குறைகிறதென்றோ தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. இந்த முரண்பாடுதான் இருவருக்கும் இடையே மனக்கசப்பை உருவாக்குகிறது.
கனிவோடு கண்டிப்பு:
தாய் கண்டிக்கும்போது மகள் எதிர்த்துப் பேசுவதும், கோபித்துக்கொண்டு பின்பு சமாதானமாவதும் இயல்பு. ஆனால், தந்தை கண்டிக்கும்போது அப்பா தன் மீது அதிகாரம் செலுத்துகிறார் என மகள் தவறாகப் புரிந்து கொள்கிறாள்.
பெண் பிள்ளைகளுக்கு அப்பா இரண்டு வார்த்தைகள் கோபமாக பேசிவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு முகத்தைக் தூக்கி வைத்துக்கொண்டு விடுவாள் மகள். எனவே, அப்பாக்கள் மகள்களைக் கண்டிக்கும்போது கனிவும், அன்பும் கட்டாயம் தேவை. மகள், தந்தையின் கோபம் தன்னைச் செதுக்கும் ஒரு சிற்பியின் உளி என்பதை உணர்ந்தால், தந்தை மீது அன்பு கூடவே செய்யும்.