குழந்தைகள் விரல் சூப்புவது ஏன் தெரியுமா?

விரல் சூப்பும் குழந்தை
விரல் சூப்பும் குழந்தை

குழந்தைகளுக்கு தூக்கம் வரும்போதும், தனிமையை உணரும் போதும், பசி எடுக்கும்போதும், சோர்வாக உணரும்போதும், பல் முளைக்கத் தொடங்கும்போதும், ஈறுகளில் உண்டாகின்ற உறுத்தல் காரணமாகவும் விரல் சூப்பும் பழக்கம் உண்டாகிறது.

பொதுவாக, இரண்டு வயது வரை இந்தப் பழக்கம் இருக்கும். பிறகு தானாகவே மறைந்து விடும். ஆனால், சில குழந்தைகள் அதற்குப் பின்பும் விரல் சூப்பும்போதுதான் பெற்றோர்களுக்குக் கவலை உண்டாகும். சில குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது அதை ரசித்து மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள்தான் பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலும் அந்தக் கதகதப்பை எதிர்பார்த்து விரல் சூப்புவதை பழக்கமாக்கிக் கொள்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படலாம். வாய் மற்றும் சப்பும் விரல்களில் காய்ப்பு மற்றும்  துர்நாற்றம் ஏற்படலாம்.

இதற்கான தீர்வு என்று பார்த்தால், குழந்தைகள் கைவிரலை சூப்பும் சமயம் விரலை மென்மையாக எடுத்து விட்டு அவர்கள் மனதை வேறு திசையில் திசை திருப்பலாம். விளையாட்டு காட்டலாம். சில குழந்தைகள் இரண்டு மூன்று விரல்களைக் கூட வாயில் வைத்து சூப்புவார்கள். சில அம்மாக்களோ பிளாஸ்டிக் நிப்பிள்களை கொடுத்து சூப்ப விடுவார்கள். இது முற்றிலும் தவறு.

இதனைத் தவிர்க்க வேப்ப எண்ணையை கைவிரல்களில் சிறிது எடுத்துத் தடவி விடலாம். அல்லது கொழுந்து வெப்பிலையாக எடுத்து அரைத்து விரல்களில் தடவி விடலாம். வேப்பிலையின் கசப்பால் குழந்தைகள் திரும்பவும் விரலை வாய்க்குள் கொண்டு செல்லாது. அதேபோல், விளக்கெண்ணையும் பயன்படுத்தலாம்.

எந்நேரமும் வாயில் விரலை வைத்துக் கொண்டிருந்தால் நோய்க் கிருமிகள் தாக்கும். வாய் துர்நாற்றம், குடல் புழு தொல்லை போன்றவை ஏற்படலாம். குழந்தைகளின் தாடைப் பகுதி பாதிக்கப்படும். தெற்றுப் பல் முளைக்க இந்த பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமையும்.

விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த குழந்தைகளை மிரட்டுவதோ அடிப்பதோ உளவியல் ரீதியாக பாதிப்பை அதிகப்படுத்தும். அன்பான அணுகு முறையால் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவது நல்ல பலனைத் தரும்.

குழந்தைகளுடன் அதிகம் பேசி விளையாட்டு காட்டி அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம். கை விரல்களுக்கு வேலை கொடுக்கும்படியான விளையாட்டை விளையாட ஊக்குவிக்கலாம். கை விரல்களுக்கு வேலை கொடுக்கும்படி படம் வரைதல், வண்ணங்கள் தீட்டுதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளை கடைப்பிடிக்க குழந்தைகள் இந்தப் பழக்கத்தை மெதுவாக விட்டுவிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மனோரா கோட்டை வரலாறு!
விரல் சூப்பும் குழந்தை

பல் முளைக்கும் சமயம் ஈறுகள் ஊறுவதால் விரல்களை சூப்பத் தோன்றும். இதற்கு கேரட், ஆப்பிள், பீட்ரூட் போன்றவற்றை தோல் சீவி சாப்பிடக் கொடுக்கலாம். தூங்கும்போது சில குழந்தைகள் வாயில் விரலை வைத்துக்கொள்வார்கள். இதற்கு, தூங்கப்போகும் சமயம் கையில் அவர்களுக்கு பிடித்த விளையாட்டு பொம்மை ஒன்றை கொடுத்து விட, விரல் சூப்பும் கவனம் பொம்மைகளின் மீது சென்று விடும்.

குழந்தைகளின் தனிமை, பாதுகாப்பில்லாத உணர்வை போக்கிவிட்டாலே குழந்தைக்கு கை சூப்பத் தோன்றாது. மூன்று வயதுக்கு மேலும் அவர்கள் கை சூப்பிக் கொண்டிருந்தால் பற்கள் வளர்வதில் பிரச்னை ஏற்படும். எனவே, இதற்கு சிறந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com