

பணத்தை அதிகமாக செலவு செய்பவர்களைப் பார்த்தால் ‘காசை தண்ணீர் போல் செலவழிக்கிறாயே’ என்று கூறுவது உண்டு. அதுபோல், பணத்துக்கும் தண்ணீருக்கும் பல நூற்றாண்டு தொடர்பு இருக்கிறது. 'பணம் காற்றோட்டத்தில் இருக்கிறது என்றும் சொல்வார்கள்' ஃபெங்சுயியின் கருத்தும் மாறுபட்டதல்ல. ஒரு வீட்டின் தண்ணீர் புழங்கும் இடங்களான குளியலறை மற்றும் வாஷிங் மெஷின் வைத்து உள்ள இடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
தண்ணீர் செல்வத்தை ஆள்வது. ஒட்டுமொத்த குடும்ப வளத்தையும் அது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. குளியலறையில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருப்பது, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதை சில வீடுகளில் காணலாம். இதைக் காணும்போது நம்மில் பெரும்பாலானவர்கள் குளியல் அறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்பது வருந்தத்தக்கதாக உள்ளது.
பணத்தட்டுப்பாடு உள்ளவரும், கையில் கிடைத்த பணத்தை நிர்வகிக்கத் தெரியாதவரும், தங்கள் குளியல் அறையை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். தங்களுடைய நிதி நிலையில் விரும்பத்தக்க மாற்றத்தை எதிர்பார்க்கிறவர் ஃபெங்சுயி விதிகளின்படி குளியல் அறையை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைத்துக் கொண்டால் எதிர்மறை நிலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
குளியலறையில் நுழையும்போதே உள்ளும் வெளியுமாய் உயிர் சக்தியின் ஓட்டம் லகுவாக இருக்கும்படி கதவு அகலமாக திறந்துகொள்ளும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அந்தக் கதவை முழுமையாக திறக்க முடியாமல் போனாலும், ஒரு சுவருக்கு எதிராக திறந்துகொள்ளும் என்றாலும், கதவின் வெளிப்புறமும் உட்புறமும் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை தொங்க விடலாம். அதனால் உயிர் சக்தியின் பலன் ஊக்குவிக்கப்படும்.
பொதுவாக, வீட்டிலேயே குறுகலான அறை குளியலறைதான். வழி வழியாக அது அப்படித்தான் இருந்து வருகிறது. குளியல் அறையின் அளவுக்கும் குடும்பத்தின் வளமைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மிகவும் சிறிய குளியலறை வறுமைச் சூழலையும், பற்றாக்குறையையும் உருவாக்கும். விசாலமான குளியல் அறை வெற்றி, அதிர்ஷ்ட உணர்வை உருவாக்கும்.
உங்கள் குளியலறை எவ்வளவு பெரிது அல்லது சிறிது என்பதைப் பற்றி கவலைப்படாமல், முடிந்த அளவு அதை உயர்ந்ததாக்கப் பார்த்து பெரியதாகக் காட்ட முயலலாம். அதற்குக் குளியல் அறையில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை தொங்க விட்டால் அது உள்ளீட்டை கூடுதலாக்கிய மாதிரி ஒரு மாயத் தோற்றத்தை உண்டுபண்ணும்.
அடுத்ததாக, குளியலறை ஒரு சுவற்றின் பக்கம் உள்ளதை விட மற்றொரு சுவற்றுப் பக்கம் குறுகியதாக இருந்தால் ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை நீண்ட சுவர்களில் ஒன்றில் தொங்க விடலாம். குளியலறை சுவரைப் போலவே கூரையிலும் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கலாம். அதிக இடம் இருப்பதான உணர்வை அது கொடுக்கும். வெளிச்சமாகவும் உணரச் செய்யும். அது வீட்டின் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.
இன்னும் சில வீடுகளில் பார்த்தால் கூரை பரப்பு முழுவதும் ஒரே கண்ணாடியை பெரிதாக பொருத்தி விடுகிறார்கள். அதில் இருந்து குளித்துவிட்டு வந்த ஒருசிலர் முன்பை விட இப்பொழுது பாத்ரூம் பெரிதாக இருக்கிறது என்று கூறியதை கவனிக்க முடிந்தது. காரணம், அதன் வெளிச்சம்தான். ஆதலால், அத்தகைய பெரிய கண்ணாடி வழக்கமாகத் தேவைப்படுவதில்லை. ஆனாலும், நம் விருப்பத்திற்கேற்ப நன்றாக வெளிச்சம் வரும்படி ஒரு கண்ணாடியை மேற்கூரையில் பதித்து வைத்துக் கொண்டால் அறையை பெரிதாக்கிக் காட்டுவதோடு, அது வசதியுடையதாக நமக்கு மாறிவிடும்.
அடுத்ததாக, வாஷிங் மெஷின். துணி வெளுக்கும் இயந்திரமும் நீரோட்டத்தை ஏற்படுத்துவதுதான். இந்தத் துணி வெளுக்கும் இயந்திரம் ஒரு மின் உபகரணம் என்பதால் உயிர் சக்தியை அதிக அளவில் ஊக்குவிக்கும். இந்த இயந்திரம் சத்தமின்றி இயங்க வேண்டும்.
இரைச்சல் அல்லது சத்தம் சுற்றுப்புற உயிர் சக்தியை தகர்த்து விடும். அதனால் நல்லதை விட, கெடுதல் அதிகம் சம்பவிக்கும். ஓசை மிக்க ஒரு இயந்திரம் வடமேற்கில் வைக்கப்பட்டால் உங்களுடைய தலைமை குணத்தையும், திட்டத்தையும் அது பாதிக்கும். அந்த பாதிப்பு எதிர்மறையானதாக இருக்கும்.
ஓசை மிக்க இயந்திரம் ஒன்று கீழ்த் திசையில் வைக்கப்பட்டால் அது உங்களுடைய தேக, மன ஆரோக்கியம் இரண்டையும் பாதித்துவிடும். குறிப்பாக, உயர் அளவு இறுக்கத்தையும், கவலையும் ஏற்படுத்தும். எதிர்மறை விளைவுகளை எதிர்க்கவும் சமாளிக்கவும் அசையும் பொருள் அல்லது மணித்தொடர், ஸ்படிகக் கல் இவற்றில் ஒன்றை இயந்திரத்திற்கு நேராக கூரையில் கட்டி தொங்க விடலாம். சமையலறை முழுவதும் ஒரு சமநிலையை பராமரிக்கவும், எதிர்மறை உயிர் சக்தியை சிதறடிக்கவும் உதவும் என்று கூறுகிறது ஃபெங்சுயி.
அலைமகள்தானே செல்வத்தின் அதிபதி. ஒரு வீட்டில் இந்த செல்வநாயகி தங்க வேண்டும் என்றால் அங்கு நீர் புழங்கும் இடமும் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். அது வீட்டில் வாழும் அனைவருக்கும் புத்துணர்ச்சியையும், நேர்மறை சக்தியையும், எண்ணத்தையும் தந்து செல்வ வளத்தைப் பெருக்கும் என்பது நம்பிக்கை.