தூக்கம் என்பது தினசரி வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்று. ஒவ்வொருவரின் வயதை பொறுத்து அவர்களது தூக்க நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரியவர்களாக இருந்தால், 7 முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியமாகிறது. அதேபோல் சிறிய குழந்தைகளுக்கு 14 மணி நேரம் தூக்கம் வேண்டும். இப்படி வயதுக்கேற்ப இருக்கும் தூக்க நேரத்தை தான் அறிந்திருப்பீர்கள்.... ஆனால் தூக்கத்திற்கும் பாலினத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பதை அறிந்ததுண்டா?
அமெரிக்காவின் நெஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பெண்களுக்கு சராசரியாக 7 மணி 40 நிமிட தூக்கம் தேவை. அதே சமயம் ஆண்களுக்கு 7 மணி 20 நிமிட தூக்கம் தேவை என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, ஆண்களை விட பெண்களுக்கு சுமார் 20 நிமிடங்கள் அதிக தூக்கம் தேவைப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
ஆண்களை விட பெண்களுக்கு ஏன் அதிகமான தூக்கம் தேவை?
தூக்கமின்மை
ஆண்களை விட பெண்கள் 40 சதவீதம் தூக்கமின்மையை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில், அவர்கள் ஆண்களை விட கவலை, பதட்டம் மற்றும் மனச்சோர்வினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம்.
ஹார்மோன் மாற்றங்கள்
முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவர்களது தூக்கத்தை பெரிதும் பாதிக்கிறது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, பிடிப்புகள் மற்றும் அசௌகரியம் காரணமாக பல பெண்கள் தூக்கமின்மையை சந்திக்கின்றனர். மாதவிடாய் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுப்படும். இது போன்ற மாற்றங்களாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். அடிக்கடி மனச்சோர்வு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், வலி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வீக்கம் இவை அனைத்தும் அவர்களின் தூக்கத்தை பெரிதளவில் பாதிக்கிறது.
சிலருக்கு ஏற்படும் உடல் உபாதைகள், வேலைசுமை, வீட்டில் ஏற்படும் தனிப்பட்ட பிரச்னை என அனைத்தும் அவர்களைப் பற்றிக் கொண்டு தூக்கத்தைத் தொலைக்க செய்கிறது. இன்னும் சிலர் சமூக ஊடகங்களில் மூழ்கி அவர்களாகவே நேரத்தை வீண் அடித்து தூக்கத்தை நிராகரிக்கின்றனர்.
இவ்வாறு பல காரணங்களால் பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது.
ஆழ்ந்த தூக்கம்
தூக்கம் வராமல், சிரமப்படுபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது, ஒரே நேரத்திற்கு தூங்க செல்வது, படுக்கையை சுத்தமாக வைத்துக் கொள்வது என இருந்தால் தூங்குவதில் சிரமம் இல்லாமல் இருக்கும். அதேபோல் இரவில் காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும். அதோடு தூங்கும் அறையை இருட்டாகவும், அமைதியாகவும் வைப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
பெண்களே! தூங்க கிடைக்கும் நேரங்களில் சமூக ஊடகங்களில் மூழ்கிவிடாமல், உங்கள் ஆரோக்கியத்தை பேணுவதற்கு தேவையான தூக்கத்தை உடலிற்கு கொடுப்பது நல்லது.