
புதிதாக வீடு கட்டுபவர்கள் முதலில் பூஜை போட்டு வீட்டு வேலை ஆரம்பித்தவுடன் கட்டுமானத்தை சுற்றி பச்சை வலை போடுவர். அதற்கான காரணம் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பச்சை நிற வலை போர்த்துவது அந்தக் கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். கட்டிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வெளியில் நடப்பதைக் கவனிக்க நேர்ந்தால் கவனக்குறைவாக கீழே விழ நேரிடலாம். ஆகையால் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இந்த பச்சை வலை போர்த்துவது.
மேலும், அதிகமான சூரிய வெளிச்சம் கட்டிடத்தினுள் விழுவதால் அங்கு பணிபுரிபவர்களை விரைவில் சோர்வடைய செய்யும் என்பதாலும் இதனை தவிர்க்கும் விதமாக இந்த மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது .
அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. ஏனெனில் கட்டிடத்திலிருத்து வெளியேறும் தூசி பக்கத்து கட்டிடத்தைப் பாதிப்பதால் அதைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இவ்விதம் வலை அமைப்பு கட்டிடத்தைச் சுற்றிலும் அமைக்கப்படுகிறது. கட்டிடத்திலிருந்து வெளியே விழ நேரும் சிறு சிறு கற்கள் போன்றவற்றால் தெருவில் நடந்து போகின்றவர்களைக் காக்கும் நடவடிக்கையும் இது.
கட்டிடத்தின் வெளிப்பூச்சு சமயம் சிமென்ட் கலவை அடுத்த கட்டிடத்தின் மீது விழுவதைத் தடுப்பதற்காகவும் மற்றும் பெயிண்ட் அடிக்கும்போது பக்கத்து கட்டிடத்தின் மீது சிதறாமல் தடுத்து வலையின் உள்ளேயே தங்குவதற்காகவும் வலை ஏற்படுத்தப்படுகிறது.
கட்டிடம் முடியும் வரை மற்றவர்களின் கண்ணேறு (திருஷ்டி) கட்டிடத்தின் மீது படுவதைத் தடுப்பதற்காகவும் இவ்விதம் கட்டிடத்தைச் சுற்றிலும் பச்சை நிற வலையமைப்பு ஏற்படுத்துகின்றனர்.
கட்டிட தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுற்றுப்புற சூழல் மற்றும் கண் திருஷ்டி இவற்றிற்காகத்தான் புதிதாக கட்டும் கட்டிடத்தைச் சுற்றி பச்சை வலை அமைப்பை ஏற்படுத்துகின்றனர்.