
நாய் வாங்கி ஆசைஆசையாய் வளர்ப்பவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் தெருவில் விட்டு விடுகின்றனர். தெருவில் அனாதையாக விடப்படும் நாய்கள் கிடைப்பதை தின்று தெருவில் சுற்றித்திரிகின்றன.
அதுமட்டுமின்றி அவை தெருக்களில் உள்ள கழிவுகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை தின்று விட்டு அங்குள்ள சாலைகள், தெருக்களிலே அலைகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை விரட்டி இடையூறு ஏற்படுத்துகின்றன. நோய்த்தொற்றுக்கு ஆளான தெருநாய்கள் ஒருவரை கடித்தால் அவருக்கும் நோய்த்தொற்று பரவுகிறது.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். தெருக்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவது மட்டுமில்லாமல், இரவு நேரங்களில் நடுரோட்டில் படுத்து உறங்குவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே நாயை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
முன்பு தெருக்களில் 1, 2 தெருநாய்கள் இருந்த நிலையில் தற்போது 10,15 என பெருகி விட்டது.
நாட்டில் கிட்டத்தட்ட 4 கோடி அளவுக்கு தெரு நாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தெரு நாய் கடிக்கு பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தெருநாய்கள் கடித்து பலரும் காயமடைவது, மட்டுமில்லாமல் உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வேளச்சேரி பவானி தெருவில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த தாய் மற்றும் 7 மாத குழந்தையை தெரு நாய் கடித்ததில் குழந்தைக்கு கையில் பலந்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த தெருவில் 9 வயது சிறுவன் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நபர்களை அந்த நாய் கடித்துள்ளது. இந்த சம்பவம் வருத்தத்தை அளித்தாலும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
சமீபகாலமாக தெரு நாய்கள் அடிக்கடி ரோட்டில் போகும் நபர்களை எல்லாம் கடிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி தெரு நாய்கள் சிறு குழந்தைகள், தனியாக செல்பவர்களை குறி வைத்து தாக்கி வருகிறது. ஏனெனில் குழந்தைகளால் எதிர்த்து போராட முடியாது என்பதால் தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றன. ஒரு நாய் ஒருவரை துரத்திக் கடிக்கும்போது கூட்டத்தில் இருக்கும் அனைத்து நாய்களும் ஓடிப்போய் காரணமின்றிக் கடிக்கும். இது இயற்கையாகவே இவற்றின் மரபணுவில் கலந்த ஒரு செயலாகும்.
தெரு நாய்கள் பசியால் தவிக்கும்போது, உணவுக்காகவோ அல்லது உணவு கிடைக்காத போது ஏற்படும் வெறியின் காரணமாக குழந்தைகளைத் தாக்குகின்றன. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும். அச்சமயத்தில் நாய்களின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதால் கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் கடிக்கும். சில சமயங்களில் தெரு நாய்களை ஆத்திரமூட்டப்பட்டாலோ அல்லது மிரட்டப்பட்டாலோ அது குழந்தைகளைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
பொதுமக்கள் தெருநாய்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. அதே போல் குழந்தைகளை கடை மற்றும் விளையாட தனியாக செல்ல அனுமதிக்க வேண்டாம்.
மாநகராட்சி நிர்வாகம் சரியான ஒழுங்கு முறையை கையாண்டால் மட்டுமே தெருநாய்களை கட்டுப்படுத்த முடியும். குழந்தைகள் மற்றும் பொது மக்களின் உயிருடம் விளையாடும் இந்த தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.