கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும் பனியும் கூடிய தட்பவெப்ப நிலை நிலவும். காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய்கள் படையெடுக்கும் காலமும் இதுவே. கைக்குழந்தைகளை குளிர்காலத்தில் நன்றாகப் பராமரிக்கும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சரியான ஆடை அணிவித்தல்: கைக்குழந்தைகளுக்கு தடித்த ஆடையை அணிவிப்பதற்கு பதிலாக பல மெல்லிய அடுக்குகளுடன் கூடிய ஆடையை பயன்படுத்த வேண்டும். தடித்த ஆடை எளிதில் வெப்பமடைய செய்யும். அதனால் குழந்தைகள் அசௌகரிமாக உணர்வார்கள். தலை மற்றும் கை கால்களில் இருந்து வெப்பம் வெளியேறுவதால், தொப்பிகள், கையுறைகள் மற்றும் காலணிகள் அணிவிப்பது அவசியம். வெளியில் பயணிக்கும்போது குழந்தைகளுக்கு அவசியம் ஸ்வெட்டர் பயன்படுத்த வேண்டும்.
மென்மையான குளியல்: கைக்குழந்தைகளின் சருமம் மிக மிக மென்மையாக இருக்கும். எனவே, குளிர்காலத்தில் நீண்ட நேரம் தண்ணீரில் குளிக்க வைப்பதைத் தவிர்த்து விட்டு விரைவில் குளியலை முடித்துக்கொள்ள வேண்டும். சருமத்துக்கு எரிச்சல் ஊட்டும் கடுமையான சோப்பிற்கு பதிலாக மென்மையான சோப்பை உபயோகிக்க வேண்டும். அதிக சூடு அல்லது குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்தாமல், வெதுவெதுப்பான நீரே சிறந்தது.
அடிக்கடி கை கழுவுதல்: குழந்தைகளை கையாளும் முன்பும் குழந்தைகளை தூக்கும் முன்பும் எப்போதும் கைகளை சோப்பு போட்டு கழுவுவது மிகவும் அவசியம். கைக்குழந்தைகளை பிறர் தொட்டு தூக்காதவாறு பார்த்துக்கொள்வதும் நல்லது. ஏனெனில், அவர்கள் மூலமாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்றுகள் பரவுவதைக் குறைக்கலாம்.
வெப்பநிலையை கண்காணித்தல்: குழந்தையின் கழுத்து அல்லது முதுகை அவ்வப்போது தொட்டு வெப்பநிலையை சரி பார்க்க வேண்டும். அதிகமாக வியர்த்திருந்தால் அல்லது சிவந்திருந்தால சௌகரியமான ஆடையை அணிவிக்க வேண்டும். ஜிப் அல்லது கொக்கி வைத்த உடைகளை விட, ப்ளெய்ன் ஆன உடைகள் சிறந்தது.
சுத்தமான காற்று: குளிர்காலத்தில் கூட முடிந்தவரை அறையை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். ஜன்னல்களைத் திறந்து வெளிப்புறத்தில் இருந்து காற்று உள்ளே வர வழி செய்ய வேண்டும். அறையில் உள்ள அடைபட்ட காற்று வெளியேற வேண்டும். பனிக்காற்று வீசும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லக்கூடாது. மிதமான வானிலை இருக்கும்போது குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடைப்பயிற்சி செல்லலாம். புதிய காற்று அவர்களுக்கு நன்மை பயக்கும்.
ஆரோக்கியத்தை கண்காணித்தல்: குழந்தைக்கு இருமல், தும்மல் அல்லது வழக்கத்துக்கு மாறான ஏதாவது நோய் அறிகுறி இருந்தால் உடனே சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.
சுகாதாரம் பேணுதல்: குழந்தை மல, ஜாலம் கழித்து விட்டால் உடனடியாக பார்த்து சுத்தம் செய்வது அவசியம். டயாப்பர் உபயோகிப்பவர்கள் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை அதை மாற்ற வேண்டும். ஈரப்படுத்தா விட்டாலும் மாற்றுவது அவசியம். பெரும்பாலும் வீட்டிற்குள் இருக்கும்போது டயப்பர் அணிவிக்காமல் காட்டன் துணி விரித்து குழந்தையை படுக்க வைப்பது நலம். குழந்தைகள் உபயோகிக்கும் பொம்மைகள் விளையாட்டு சாமான்களை தொடர்ந்து சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
கண்காணிப்பு: வீட்டில் மூத்த குழந்தைகள் இருந்தால் அவர்கள் கைக்குழந்தைகளை கிள்ளவோ அடிக்கவோ செய்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். சில குழந்தைகள் தம்பி, தங்கையைத் தூக்குகிறேன் என்று கீழே போட்டு விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வறண்ட சருமம்: குளிர்ந்த காற்று குழந்தையின் உதடுகள் மற்றும் கை கால்களில் வெடிப்பு மற்றும் வறண்ட சருமத்தை உண்டாக்கும். இதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவினாலே போதும்.
தூங்கும்போது தந்தை அல்லது அன்னை அருகில் குழந்தையை நெஞ்சோடு அணைத்தவாறு கதகதப்புடன் வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். வீட்டில் யாராவது , சளி காய்ச்சல் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.