பெரும்பாலான பெண்கள் தாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே கணவன் உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். எல்லோரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆனால், கணவரிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்ற புரிதல் பலருக்கும் இல்லை.
கணவன் மனைவி உறவு என்பது அற்புதமானது. அதே நேரத்தில் அதில் பல்வேறு சிக்கல்களும் நிறைந்துள்ளது. ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் ஏற்படும். ஆனால், பெரும்பாலான தம்பதிகளுக்கு குறிப்பிட சில பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தங்கள் கணவனிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. திருமண உறவு சுமுகமாக இருக்க, மகிழ்ச்சி நீடிக்க பெண்கள் தங்கள் கணவனிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்பது போன்ற விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
உங்களுக்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொள்பவன்தான் கணவன்: மனைவிக்கு அல்லது மனைவியின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒருசில விஷயங்களை மாற்றிக்கொள்வது அவசியம்தான். ஆனால், குழந்தை பருவத்திலிருந்து ஒருசில முக்கிய பழக்க வழக்கங்கள் மற்றும் உங்கள் கணவர் மதிக்கும் சில விஷயங்களை நீங்கள் முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது. மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண வாழ்க்கை என்பது இருவரும் மற்றவரின் விருப்பத்தையும் கருத்துக்களையும் மதித்து நடப்பதில்தான் இருக்கிறது.
நீங்கள் விரும்பும் நேரத்தில், விரும்பும் வேலையை செய்ய வேண்டும் என்று விரும்புவது: ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை முக்கியம், அது எந்த உறவாக இருந்தாலும் சரி! அதேபோல ஒவ்வொரு நபரும் அவருக்கு உரிய வேகத்தில், அவருக்குரிய பாணியில் தங்கள் செயல்களை செய்வார்கள். உங்கள் கணவருக்கும் அது பொருந்தும். நீங்கள் விரும்பும் நேரத்தில் நீங்கள் விரும்பிய கால அளவுக்குள் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்கவேண்டும் என்று எப்போதுமே எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கணவர் வேலையை சரியாக செய்கிறார் என்றாலும் நீங்கள் அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் அதை அவர் வேண்டுமென்றே தாமதப்படுத்தலாம்.
உங்களை எப்போதும் பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பது: எல்லோருக்குமே பாராட்டு தேவைதான். பாராட்டு நமக்கு மகிழ்ச்சி அளித்து, ஊக்கப்படுத்தும் மற்றும் நேர்மறையான எண்ணங்களை விளைவிக்கும். ஆனால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் உங்கள் கணவர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது. உங்களை பாராட்டவில்லை என்றால் உங்களுக்கு மரியாதை அளிக்கவில்லை என்ற அர்த்தம் கிடையாது. எனவே, அதை நீங்கள் பெரிய பிரச்னையாக மாற்ற வேண்டாம்.
மகிழ்ச்சிக்கான காரணம்: கணவன் மனைவியாக இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது என்பது வேறு, ஒரு குடும்பமாக மகிழ்ச்சியாக இருப்பது என்பது வேறு, தனிப்பட்ட நபர் மகிழ்ச்சியாக இருப்பது வேறு. உங்களுடைய மகிழ்ச்சியான மனநிலைக்கு நீங்கள்தான் காரணமாக இருக்க வேண்டும். உங்கள் கணவர் அதற்கு பங்களிக்கலாம். ஆனால். ஒட்டுமொத்தமாக நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதற்கு உங்கள் கணவரே காரணம் என்று குற்றம் சாட்டக் கூடாது.
இனிமேலாவது உங்கள் கணவரிடம் இதை எலலாம் எதிர்பார்க்காதீர்கள். எலியும் பூனையுமாக இருந்தவர்கள் கூட இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை என்றால் ரோமியோ ஜூலியட் போல் டூயட் பாடி லைஃபை என்ஜாய் செய்யலாம்.