
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்கில் நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆகவே, 1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி அதன் காரணமாக பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908-ல் பெண்கள் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். இதன் விளைவாக 1910-ல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911-ம் ஆண்டு மார்ச் 19-ம்தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகள் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8-ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
1975-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து முதன்முதலில் தோன்றியது. பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் உரிமைகளை வடிவமைக்கும் சட்டங்கள் மற்றும் சமூக மாற்றங்களைக் கொணர்வதில் நாம் உறுதியுடன் செயல்படவேண்டும் என்பதை இந்த நாள் நமக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்களின் உரிமைகளை பொறுத்தவரையில் இதுவரை கண்ட சாதனைகளை மதிப்பிடுவதற்கும், தடைகளை எதிர்கொள்வதற்கும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஒரு முக்கிய தருணமாக இந்நாள் உள்ளது.
நம் தமிழ் நாட்டிலே பெண்களின் பங்களிப்பும், அவர்களுக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் துவக்க காலத்திலிருந்தே இருந்தது என்றுச் சொல்லலாம். இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவது மறுக்க முடியாத உண்மையாகும். குறிப்பாக ஆண்களை எதிர்கொள்வது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர் வேலைக்குத் தான் என்ற கூற்றெல்லாம் தற்போது மாறிவிட்டது.
அதாவது பெண்கள் இப்பொழுது ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, கணினித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை. அந்த அளவிற்கு பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்றும். அவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து வீட்டு வேலைகளை செய்ய வைத்த காலங்கள் போய் இப்போது பெண்கள் நாடு கடந்து, கடல் கடந்து பல சாதனைகளை செய்து வருகின்றன. ஆகவே சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட, குடும்பத்தை சரியான முறையில் நிர்வாகம் செய்ய, உலகத்தை பேணிக் காக்க, பெண் கல்வி அவசியமான ஒன்றாகும். பெண்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலமாக வீட்டையும், நாட்டையும் மற்றும் சமுதாயத்தையும் மேம்படுத்த முடியும்.
ஆனால் ஒரு வருத்தம் என்னவென்றால் இன்றும் சில வீடுகளில் ஆண் பெண் என்கிற பாகுபாடு இருக்கத் தான் செய்கிறது. பெண் குழந்தைகள் சிறிது லேட்டாக எழுந்து விட்டால் போதும், அம்மாக்கள், “ஏண்டி, பொம்பள பொண்ணு இத்தனை நேரம் தூங்கலாமா” என்று ஜோராக கத்துவார்கள். ஆண் பையன் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் தூங்கலாம், அம்மாக்களுக்கு பரவாயில்லை.
என் பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகள் வேலை செய்ய வந்திருந்தாள். அவள் அம்மா ஏதோ ஒரு வேலையின் காரணமாக வரவில்லை. இந்த குழந்தை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கிறாள். இவளின் அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது.
ஒரு அண்ணன் இருக்கிறான். அண்ணன் ரொம்ப வருடமாக கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்தான். இப்போது சமீபத்தில் இங்கேயே வந்து விட்டான். இந்த பெண் குழந்தையின் மனதில் எத்தனை ஏக்கம் வருத்தம். மனதில் உள்ள பாரத்தையெல்லாம் தன் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள் அந்த பெண்.
அந்த பெண் கூறுகிறாள், எங்கம்மா அண்ணன் வந்ததிலிருந்து தினுசு தினுசா சமைக்கிறார்கள், நான் தூங்கினால் எனக்கு திட்டு கிடைக்கிறது, அண்ணா தூங்கினால் ஒன்றும் சொல்வதில்லை, நான் பள்ளிக்கூடத்திற்கும் போய் விட்டு வீட்டு வேலையும் செய்யணும். அண்ணன் என்னென்ன கேட்கிறானோ எல்லாம் வாங்கித் தருகிறார்கள், நான் கேட்டால் நீ பொண்ணு, உனக்கு எதற்கு? அவன் ஆம்பள சிங்கம் என்றெல்லாம் சொல்கிறார்கள், ஏன் இந்த பாகுபாடு என்று அந்த பெண்ணும் தோழியும் மிக வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
உண்மையிலேயே இதைப் போல நிறைய பேர் வீட்டில் இன்னும் இந்த பாகுபாடு இருக்கிறது. இந்த பெண்ணின் தாயோ படிக்காதவள், ஆனால் படித்தவர்கள் கூட இன்னும் இந்த வித்தியாசத்தை கடைபிடிக்கத் தான் செய்கிறார்கள்.. இந்த வருட மகளிர் தினத்தில் பெண்கள் எல்லோரும் சேர்ந்து இந்த பாகுபாட்டை முறியடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது ஆண் குழந்தைக்கும் பெண்களின் முக்கியத்துவத்தையும், அவர்களது உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எடுத்துரைக்க வேண்டும்.
எல்லா பெண்களும் இன்பமயமோடு வாழ என் வாழ்த்துக்கள்!!!