

இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், இரவு உணவு முடித்தவுடன் ஏற்படும் உடல் சோர்வு காரணமாக, நம்மில் பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு, சாப்பிட்ட தட்டுகளையும் பாத்திரங்களையும் கழுவாமல் அப்படியே சமையலறைத் தொட்டியில் போட்டுவிட்டுத் தூங்குவதுதான்.
"காலையில் எழுந்து நிதானமாகக் கழுவிக் கொள்ளலாம்" என்று நாம் நினைக்கும் அந்தச் சில மணி நேர இடைவெளி, நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு ஆபத்தானது.
கிருமிகளின் சொர்க்கம்!
பொதுவாகவே பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் வளர்வதற்கு இரண்டு முக்கிய விஷயங்கள் தேவை: ஒன்று ஈரப்பதம், மற்றொன்று மிதமான வெப்பம். நாம் இரவு முழுவதும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யாமல் சிங்க்கில் போட்டு வைக்கும்போது, இந்த இரண்டு சூழலும் கிருமிகளுக்கு மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது. பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களைச் சாப்பிட்டு, அந்த ஈரப்பதத்தில் பல்கிப் பெருகும் பாக்டீரியாக்களுக்கு உங்கள் சமையலறை சிங்க் ஒரு 'சொர்க்கபுரியாக' மாறிவிடுகிறது.
ஆய்வு சொல்லும் அதிர்ச்சி!
பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், நம் வீட்டுச் சமையலறை சிங்க்கில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கை, கழிவறையில் இருப்பதை விட அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது கேட்பதற்கே அருவருப்பாக இருந்தாலும், இதுதான் உண்மை.
நாம் அதே சிங்க்கில்தான் பச்சைக் காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றைக் கழுவுகிறோம். இறைச்சியில் இருக்கும் கிருமிகளும், பாத்திரத்தில் இருக்கும் உணவுக்கழிவுகளும் சேர்ந்து E. coli போன்ற மிக ஆபத்தான பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன.
உடல்நல பாதிப்புகள்!
இந்தக் கிருமிகள் சாதாரணமாகத் தெரிந்தாலும், இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் வீரியம் மிக்கவை. ஆரம்பத்தில் சாதாரணக் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். ஆனால், தொடர்ந்து அசுத்தமான சிங்க்கைப் பயன்படுத்தும்போது, அது நீண்ட காலத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகளையும், ஏன்... குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் கூட உருவாக்குவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நம்மையும் அறியாமல், விஷம் கலந்த உணவை உண்பதற்குச் சமமான நிலையை இது உருவாக்குகிறது.
தீர்வு என்ன?
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி, சோம்பலை உதறித் தள்ளுவதுதான்.
இரவு உணவு முடிந்த கையோடு, பாத்திரங்களைக் கழுவி, சிங்க்கையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும்.
பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் 'ஸ்பாஞ்ச்' அல்லது நாரை, வாரம் ஒருமுறையாவது மாற்ற வேண்டும். அல்லது, அவ்வப்போது மைக்ரோவேவ் அவனில் வைத்துச் சூடுபடுத்தியோ, வெந்நீரில் முக்கி எடுத்தோ கிருமிகளை அழிக்க வேண்டும்.
பாத்திரங்கள் இல்லாவிட்டாலும், சிங்க்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
"சுத்தம் சோறு போடும்" என்பார்கள், ஆனால் சமையலறையில் சுத்தம் இல்லாவிட்டால் அதுவே நோயையும் கொண்டு வரும். எனவே, இன்றிரவு முதல் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி, சமையலறையைச் சுத்தமாகப் பராமரிப்போம்.