
இளைய தலைமுறையினரிடம் தற்போது பேசும்போது, "நாங்கள் எல்லாம் 2k கிட்ஸ் தெரியுமா?" என்று சொல்வதைக் கேட்டு இருப்போம். '2k என்றால் என்ன?' 2K என்பது 'ஆண்டு 2000' என்பதன் சுருக்கமாகும். பழைய கணினி அமைப்புகள் ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களை மட்டுமே சேமிக்கப் பயன்படுத்தியதால் 2000ம் ஆண்டை 1900 என்று கணினிகள் தவறாகப் புரிந்துகொள்ளும் என்ற அச்சம் ஏற்பட்டது, இது Y2K அல்லது 'ஆண்டு 2000' என்று அறியப்பட்டது.
இந்த 2k தலைமுறையினரின் உறவுகள் குறித்து இதற்கு முந்தைய தலைமுறையினர் கவலைப்படுவது தற்போது அதிகமாகி வருகிறது. அன்று கூட்டுக் குடும்பம் மற்றும் அறிவியல் தாக்கம் அதிகமில்லை என்பதால் உறவுகளுக்கிடையே நெருக்கமும் பண்புகளும் முறையாகப் பேணப்பட்டன. இன்று ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்று சுயமாக சிந்திக்கும் திறனுடன் யாரையும் சாராமல் வாழ்வதால், உறவுகளிலும் சில முரண்கள் எழுவது சகஜமாகி வருகிறது.
2k தலைமுறையினர் உறவுகளைப் பேண உதவும் டிப்ஸ்:
எந்த உறவாக இருந்தாலும் அதில் வெளிப்படை மற்றும் நேர்மையாக இருப்பது முக்கியம். நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு உண்மையுள்ளவராக இருங்கள்.
உங்கள் துணையுடன் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
துணை என்றாலும் உடன் இருக்கும் பெற்றோர் என்றாலும் அவர்கள் பேசும்போது அக்கறையுடன் கவனம் செலுத்துங்கள்.
மரியாதையை எதிர்பார்ப்பது மனிதரின் இயல்பு என்பதால் உறவுகளின் கருத்துக்கள், எல்லைகள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும்.
வீட்டில் உள்ள உறவுகளின் வெற்றிகளை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டாடுங்கள். அங்கீகாரம் உறவுகளை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒன்றாக இணைந்து மகிழ வேண்டிய நாட்களின் தேதிகள் அதைக் குறித்த செயல்பாடுகள் மற்றும் அதனடிப்படையில் நெருங்கிய உறவுகளை தவறாமல் திட்டமிட்டு ஒருங்கிணைந்து மகிழுங்கள்.
ஒருவருக்கொருவர் பேசும்போது உங்கள் அனுபவங்களை நகைச்சுவை கலந்து விவரியுங்கள். நகைச்சுவை உறவுகள் மனதில் உங்களுக்கான இடத்தைப் பெற்றுத் தரும்.
பேசும் வார்த்தைகள், செயல்கள் மற்றும் சைகைகள் மற்றும் சிறு சிறு பரிசுகள் மூலம் அன்பையும் பாராட்டையும் வெளிப்படுத்தலாம்.
வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட தகவல் தொழில்நுட்பம் உறவுகளை கனெக்ட் செய்யவும் உதவும். வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து குடும்ப விபரங்களை பகிர்வது, வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து அளவளாவுவது போன்ற பல வழிகளை கடைபிடிக்கலாம்.
தற்போது திரைப்படங்கள் ரிலாக்ஸ் செய்யும் விஷயங்களில் முன்னணியில் உள்ளது. நல்ல படங்களை உறவுகள் சூழ நேரடியாக தியேட்டர் சென்று காண்பது புது உற்சாகம் தரும்.
கணவன், மனைவியாக இருக்கும் பட்சத்தில் அவரவர் இலக்குகளை அடைய ஊக்குவிப்பதும் எந்த நிகழ்விலும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதும் அவசியம்.
வேலை வேலை என கணிணியில் மூழ்கி உறவுகளிலிருந்து விலகி இருக்காமல், அதற்கென நேரங்களையும் எல்லைகளையும் நிர்ணயித்துக் கொள்வது உறவுகள் சிதையாமல் காக்கும்.
குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் துணையுடன் பெற்றோர் இருவரும் வேலைகளைப் பகிர்ந்து அக்கறை காட்டுவது ஆரோக்கியம் தரும்.
இந்த பாஸ்ட்புட் உலகில் உணவு முதல் உணர்வு வரை ஒருவருக்கொருவர் வேறுபாடுகள் இருப்பது சகஜம். அவற்றை கருத்தில் கொண்டு, மேலும் உறவுகளை சிக்கலாக்காமல் இருப்பது நல்லது.
மேலும், கேரியர் வெற்றி என்பது அனைவருக்கும் அவசியம். எனினும், அதன் அளவுகோலில் மாற்றம் உண்டு. அதை சுட்டிக்காட்டி வேதனைப்படுத்துவதை தவிர்த்து நட்பான உறவுகளைப் பேணலாம்.
இதுபோன்ற வழிமுறைகள் கணினி யுக தலைமுறையினருக்கு உறவுகளை வளர்க்க பெரிதும் உதவும்.