நிறங்களுக்கும் மனநிலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு குணம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் மஞ்சள் என்பது கவர்ச்சிகரமான நிறமாகக் கருதப்படுகிறது. வண்ணங்கள் பல இருந்தாலும் அதில் தனித்துவமாக இருப்பது மஞ்சள் நிறம் எனலாம். மஞ்சள் நிறம் மனதிற்கு உற்சாகத்தைத் தரும் என்றால் அது மிகையல்ல.
ஆன்மிகத்துக்கும் மஞ்சளை நிறத்துக்கும் அதிக தொடர்பு உண்டு. பெரும்பாலும் ஆலயங்களில் பூசாரிகள் அணியும் ஆடைகளில் மஞ்சள் நிறம் இடம் பெற்றிருக்கும். ஆன்மிகத்தில் குருவின் அடையாளமாக மஞ்சள் நிறமே உள்ளது. உணவு தயாரிப்புகளிலும் மஞ்சளை சேர்ப்பதால் அது கிருமி நாசினியாக செயல்பட்டு உடலை ஆரோக்கிம் பெற வைக்கிறது.
இனி, மஞ்சள் நிறத்துக்கான தனித்துவமான பண்புகள் சிலவற்றைக் காண்போம். மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருப்பவரைக் கண்டால் பாதுகாப்பான உணர்வடன் அவருடன் நட்பு கொள்ளவே தோன்றும். சிவந்த நிறம் உடையவர்களுக்கு மட்டுமின்றி மாநிறம் கொண்டவர்களுக்கும் மிகவும் பொருத்தமான நிறமாக மஞ்சள் இருக்கிறது.
மஞ்சள் நிறத்தை உபயோகிப்பவர்கள் மனதில் சிறு தடுமாற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, தீய விஷயங்கள் தம்மை அணுகக் கூடாது என்ற மூடநம்பிக்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். அதற்குப் பாதுகாப்பு தருவதாகவும் மஞ்சள் நிறத்தை எண்ணுவார்கள்.
பொதுவாக, மஞ்சள் நிற விரும்பிகளுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இருக்காது. உழைத்தால் முன்னேறலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் ஒளிவு, மறைவின்றி வெளிப்படையாகப் பேசும் முரட்டுத்தனம் உடையவர்களாதலால் சில சமயம் வீண் விரோதங்களையும் சம்பாதித்து, கவலையும் கொள்வார்கள் என்கிறார்கள் நிற வல்லுனர்கள்.
மஞ்சள் நிற விரும்பிகள் பெரும்பாலும் சமூகத்தில் மதிக்கப்படுபவர்களாக, கற்பனா சக்தி நிறைந்த எழுத்தாளர்களாகவும், எதையும் ரசிக்கும் திறனும் நிரம்பப் பெற்றவர்களாக இருப்பார்களாம். உடல் ரீதியாக இவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. ஆனால், பித்தம், தலைவலி, லேசான தலைசுற்றல், கல்லீரல் பாதிப்பு போன்ற சில வியாதிகளால் இவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் உண்டு. இவர்கள் மனதில் பெரும் தன்னம்பிக்கையுடன் திகழ்வார்கள் என்பதால் அவர்கள் தலைமைப் பொறுப்பு போன்ற தனித்தன்மையுடன் வெற்றி பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
வீடு, அலுவலகங்களின் அறைகளில் பூசப்படும் மஞ்சள் நிறம் அங்குள்ளவர்களுக்கு ஒரு பாதுகாப்பையும் மூளை, நரம்புகளுக்கு சுறுசுறுப்பையும் தருவதாக அமைவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அடர்த்தியான மஞ்சள் நிறம் குழந்தைகளிடம் எதிர்மறையான குணத்தை ஏற்படுத்துவதும் உண்டு என்பதால் வெளிறிய மஞ்சள் நிறம் அறையை பிரகாசிக்கச் செய்து அமைதி தரும் என்றும் கூறப்படுகிறது.