ரயில்வேயில் ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்யும் வசதி வந்து விட்டதால் பலருக்கும் எளிதாக டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் இடைத்தரகர்கள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இவர்கள் மொத்தமாக டிக்கெட்டுகளை புக் செய்து விடுவதால் மற்றவர்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ரயில் டிக்கெட்டுகள் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. பண்டிகைக் காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட அவையும் விரைவில் தீர்ந்து விடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதி இருந்தாலும் அந்த இடங்களிலும் புரோக்கர்களின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. இவர்கள் மொத்தமாக பயண சீட்டுகளை பதிவு செய்து விடுவதால் சாதாரண மக்களுக்கு டிக்கெட் புக் செய்வதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனைக் குறித்து ஏராளமான புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இருப்பினும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
ரயில்வே சட்டப்பிரிவு 143ன்படி அங்கீகாரம் இல்லாமல் பயணச்சீட்டு விற்பது குற்றமாகும். அத்துடன் ரயில்வே சட்டப்பிரிவு 142ன்படி ரயில்வே ஊழியர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் தவிர, மற்றவர்கள் பயணச் சீட்டு விற்பனையில் ஈடுபடுவது குற்றம் என்பதால் ரயில்வே பாதுகாப்புப் படை இணையதளங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அத்துடன் ரயில் நிலையங்களில் உள்ள பதிவு மையங்களிலும், டிராவல் ஏஜென்சிகள், தனியார் நெட் சென்டர்களிலும் பாதுகாப்புப் படை அதிரடி சோதனைகள் நடத்தி தவறான வழியில் பயணச்சீட்டு பதிவு செய்பவர்களைக் கண்டறிந்தால் அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. டிக்கெட் பதிவு செய்யும் ஸ்டேஷன்களில் உள்ள சிசிடிவி மூலமும் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்துடன், மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே எடுத்துள்ளது. அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரகர்களின் தலையீடு தடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கைரேகை சரிபார்த்தல், முக அடையாளம், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் பண்டிகைக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுவதைத் தடுக்க முடியும். தரகர்கள் மொத்தமாக டிக்கெட்டுகளை பதிவு செய்வதையும் தடுக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணித்தால் இனி எவ்விதமான இடையூறும் இன்றி பொதுமக்கள் ரயில் டிக்கெட்களை புக் செய்ய வசதியாக இருக்கும். தரகர்களிடம் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்குவதைத் தவிர்த்து ரயில் பயணத்தை அனுபவிக்கவும் முடியும்.