மைட் என்பது பூச்சி போன்ற உயிரினங்களின் குழுவைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். அவற்றில் சில மனிதர்களை கடிப்பதும் எரிச்சலை உண்டுபண்ணுவதும் உண்டு. சில பூச்சிகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் ஒட்டுண்ணிகளாக வாழும். பெரும்பாலான பூச்சிகள் மனிதர்களுடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளாது. ஆனால், மனித ஆரோக்கியத்தை பாதிக்கும். இப்படி கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் கடித்தால் உடம்பில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும்.
தூசி பூச்சிகள் என அறியப்படும் மைட் பூச்சிகள் அளவில் மிகவும் சிறியவை. அவற்றை அடையாளம் காண்பதும் கடினம். இவை கடித்த பின்தான் பூச்சிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். தூசி பூச்சிகள் ஆர்த்ரோபாட் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை உண்ணிகளுடன் தொடர்புடையவை. இவற்றிற்கு இறக்கைகள் மற்றும் கண்கள் கிடையாது. இந்த தூசி பூச்சிகள் கடித்தால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அரிப்பு, வீக்கம், வைக்கோல் காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மைட் கடியின் பொதுவான அறிகுறிகள்:
சிறிய புடைப்புகள்: கடினமான அல்லது வீக்கம் அடையக்கூடிய அளவில் சிறிய புடைப்புகள் தென்படும்.
நிறமாற்றம்: சருமத்தில் நிற மாற்றம் ஏற்பட்டு சொறி போன்ற அடையாளங்கள் தோன்றும்.
வீக்கம்: கடித்த இடத்திற்கு அருகில் சிறு கொப்புளங்கள் அல்லது வீக்கம் ஏற்படும்.
வலி, எரிச்சல்: தூசி பூச்சிகள் கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படுவதும், எரிச்சலை உண்டாக்குவதும், சிறிதளவு வலியும் காணப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியலாம். வைக்கோல் அரிப்புப் பூச்சிகள் பொதுவாக சேமிக்கப்பட்ட தானியங்கள், வைக்கோல், விதைகள், மரங்களின் இலைகளில் வாழ்கின்றன. இவை கடித்தால் அரிப்பு மற்றும் சொறி போல் சிறு தடிப்புகள் ஏற்படும்.
கரப்பான் பூச்சிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத தூசிப் பூச்சிகள் மற்றும் அவற்றின் மலம் போன்றவை காற்றில் பரவும். வீட்டின் தூசிக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள் உண்மையில் தூசி பூச்சிகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள். அவற்றின் உடல்கள் மற்றும் மலம் தூசியின் முக்கியக் கூறுகளாகும். இவை ஆஸ்துமா தாக்குதல்களைத் தூண்டும். கொறித்துண்ணி பூச்சிகள், அரிப்புப் பூச்சிகள் மற்றும் சிகர்களைப் போல் அல்லாமல் இவை வீட்டில் மெத்தை, மரச்சாமான்கள், தலையணைகள், தரைவிரிப்புகள் போன்றவற்றில் காணப்படும்.
தீர்வுகள்: தூசி பூச்சிகளால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், வீக்கம் போன்றவற்றிற்கு மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. இந்த பூச்சிகளால் அதிக பாதிப்பு இல்லை என்றாலும், வீட்டில் ஈரப்பதத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம். ஈரப்பதம் மிகுந்த இடங்களில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும்.
தூசி பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க வீட்டில் குறைவான ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். ஏசி, ஷவர் போன்ற தினசரி நடவடிக்கைகளால் வீட்டின் அறைப் பகுதிகளில் ஈரப்பதத்தின் அளவு ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும். எனவே, ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
படுக்கை, தலையணைகள், திரைச்சீலைகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். மரச்சாமான்களை முறையாகப் பராமரிப்பது, மெத்தைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை சரியாகப் பராமரிக்க, தூசி பூச்சியின் தொல்லைகளைத் தடுக்க இயலும். ஒவ்வாமையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.