

‘அப்பா’ என்ற குடும்பத் தலைவர் சொல்லும் சில யோசனைகள், கடைப்பிடிக்கச் சொல்லும் சில ஒழுங்கு நடைமுறைகள் எல்லாம் இளைய தலைமுறையினருக்குப் பல சமயம் எரிச்சலாகவும், வெறுப்பாகவும் இருக்கும். ஆனால், இளைஞராக அவர் இருந்தபோது அவருடைய அப்பா சொன்ன அறிவுரைகள்தான் இவை, கொஞ்சம் மாறுதலாக, வேறு சொற்களோடு. அப்போது இவரும் அவற்றைக் கேட்க விரும்பாதவராகத்தான் இருந்தார். ஆனால், வயதாக ஆகத்தான், அனுபவங்கள் பெருகப் பெருகத்தான் அந்த யோசனைகள் எத்தனை அறிவுபூர்வமானவை என்பதை அவராலும் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. தன்னுடைய அனுபவங்களிலிருந்து தனது அப்பா சொன்னதைப் போலவே தானும் தனது பிள்ளைகளுக்குச் சொல்கிறார் அப்பா!
அதாவது, தன்னைப் போல அனுபவித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதல்லாமல், அதற்கு முன்னாலேயே வெறும் அறிவுரையாலேயே தனது பிள்ளைகள் தெரிந்து கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம்தான் காரணம்.
‘யார் பாத்ரூம் போனது?‘ என்று ஒரு நாள் அப்பா கேட்டார். அவர் எதற்காகக் கேட்கிறார் என்பது பளிச்சென்று புரிந்து விட்டதால், பாத்ரூமைப் பயன்படுத்தியவரும் சரி, மற்றவர்களும் சரி அமைதியாக இருந்து விட்டார்கள்.
‘நான் போகவில்லை; ஆகவே உங்களில் ஒருத்தர்தான் போயிருக்கணும். போங்க, யூஸ் பண்ணுங்க, ஆனா வெளியே வந்து பாத்ரூம் லைட் ஸ்விட்சை ஆஃப் பண்ணுங்க. எத்தனை வாட்டி சொல்றது!‘ என்று அலுத்தபடி கேட்டார்.
அதேபோல, பகலில் பாத்ரூம் லைட்டைப் போட்டுக் கொண்டாலும், அதற்காக கோபிப்பார். ஏனென்றால், பகல் நேரத்தில் பாத்ரூம் வெண்டிலேட்டர் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே பரவலாக விழும். ‘சன் லைட் இருக்க, ட்யூப் லைட் எதுக்கு?‘ என்று கேட்டு, பகலில் யாரும் பாத்ரூம் லைட்டைப் போடக் கூடாது என்று அறிவுறுத்துவார்.
‘ஸ்விட்ச் போர்டு நம்ம பாத்ரூமுக்குள்ள இல்லே. மின்சாரம் சம்பந்தப்பட்டதுங்கறதால, தண்ணீர் பட்டு எந்த ஆபத்தும் நேர்ந்துடக் கூடாதேன்னு வெளியே வெச்சிருக்கு. வெளியிருந்த வாக்கிலேயே ஸ்விட்சைப் போட்டுக்கொண்டு உள்ளே போய், வேலை முடிந்ததும் திரும்ப வந்து ஸ்விட்ச்சை ஆஃப் பண்ணணும்; அதுக்குப் பிறகு பாத்ரூம் கதவை சாத்தணும். ஆனா, அடுத்து வேற ஏதோ தலைபோகிற வேலை இருக்கறாப்பல, சுத்தமா மறந்துட்டுப் போயிடறோம். இந்த மாதிரி பழக்கத்தாலதான் நிதானமும் நமக்குப் பழகும்.
‘ஒன் திங் அட் எ டைம் அண்ட் தட் டன் வெல்‘ (One thing at a time and that done well) அப்படீம்பாங்க. அதைப்போல எந்த வேலையை மேற்கொள்கிறோமோ அந்த வேலையை கம்ப்ளீட்டாக முடிச்சுட்டுதான் அடுத்த வேலையைப் பத்தி யோசிக்கவே செய்யணும். பாண்டிச்சேரி அன்னை சொல்வாங்க, ‘பாத்திரம் தேய்க்கறியா, அதை மட்டும் செய். அந்த நேரத்துல வேற எதையாவது யோசிச்சுகிட்டிருந்தியானா, முழுமையா உன்னால பாத்திரம் தேய்க்க முடியாது. பாத்திரத்திலே எங்கேயாவது இண்டு, இடுக்கிலே அழுக்கு கழுவப்படாம இருக்கும். ஒன்றே செய், அதை நன்றே செய்‘ என்பார்.
‘அப்படி என்ன பெரிசா கரண்ட் செலவாகிடப் போகுது? இதுக்குப் போய் இப்படி அலட்டறாரே!‘ என்று யாராவது முணுமுணுத்தாலும், அது அப்பாவின் காதுகளை எட்டிவிடும்.
‘மின்சார சிக்கனமாக இந்தப் பழக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். கூடுதல் கரன்ட் செலவை சமாளிக்க முடியாமல் இல்லே; அதுக்கான கட்டணத்தைக் கொடுக்க வசதியும் இருக்கு. ஆனால், நான் செலவை முன்வெச்சுப் பேசலே. கரண்ட்டை வீணாக்கறது ஒரு தேசிய நஷ்டம். அதைப் புரிஞ்சுக்கோங்க‘ என்பார்.
‘அட, ஆமாம் இல்லே?‘ என்று மற்றவர்கள் மனதார நினைத்துக் கொண்டார்கள்; அதோடு, அவரை மேலும் நேசிக்க ஆரம்பித்தார்கள். இந்த அப்பாவை இன்னொரு நாள், இன்னொரு விஷயத்துக்காக நினைத்துக் கொள்வோம்.