

நீங்கள் ஒருவரை முதன் முறையாக ஒரு கான்ஃபெரென்ஸிலோ அல்லது கல்யாண வீட்டிலோ சந்தித்துப் பேசும்போது அவரை முழுமையாக உங்கள் பக்கம் கவர்ந்திழுக்க, நீங்கள் அவரிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும், என்னென்ன பேசலாம் என்பதைக் கூறும் ஏழு விதமான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. ‘வாழ்க்கையில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு உற்சாகமான தருணம் எதுவென்று ஞாபகம் இருந்தால் அதை கூற முடியுமா?’ இந்தக் கேள்வியை ஒருவரிடம் கேட்டவுடனே அவர் கண்கள் பிரகாசமாகும். உடலின் சக்தி உத்வேகமெடுக்கும். நேர்மறையான, மகிழ்ச்சி தரும் பழைய நிகழ்வு ஒன்றை மீண்டும் நினைத்துப் பார்க்க நீங்கள் ஒரு கருவியாய் இருந்தது, தொடர்பு இறுக உதவும்.
2. ‘நீங்க எப்படி இங்க?’ எனக் கேட்கும்போது, கேட்பவரை ஊக்குவித்து உங்களிடம் சகஜமாக, அவர் அங்கு வந்ததன் காரணத்தை விளக்கமாகக் கூற முடியும். இது உங்களின் உண்மையான அக்கறையை எடுத்துக்காட்டி, மேலும் உங்களுடன் தொடர்புடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டுபண்ணும்.
3. ‘வார இறுதி நாட்களை எப்படிக் கழிப்பீர்கள்?’ எனக் கேட்பதும் நாகரிகமானது. பொதுவாக, எல்லோரும், ‘வேலை எப்படிப் போகுது?’ என்றே கேட்பதுண்டு. ஒருவேளை நீங்க கேள்வி கேட்ட நபர் வேலை இல்லாமலிருந்தால் தர்மசங்கடத்திற்குள்ளாவார். வார இறுதி நாட்கள் பற்றி கேட்கும்போது அவர் உற்சாகமாகி உண்மையை கூறி, உங்களுடன் தொடர்பிலிருப்பதை விரும்ப ஆரம்பிப்பார்.
4. ‘ஆச்சரியப்படும் விதத்தில் சமீபத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட புதிய விஷயம் எது?’ என ஒருவரிடம் கேட்பது, பேச்சின் திசையை மாற்றி இருவருக்கும் ஆர்வத்தை உண்டுபண்ணும். மற்றவர் பகிர்ந்த அனுபவத்தைக் கேட்டு நீங்களும் சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் நட்பு தொடரவும் வாய்ப்பு உருவாகும்.
5. ‘உங்கள் வாழ்வில் நேர்மறை சக்தியை அதிகரிக்க உதவும் வகையில் திருப்புமுனையை உண்டாக்கிய நபர் இருக்கிறாரா?’ என்று கேளுங்கள். இதற்கு பதில் ‘ஆம்’ என்றால், உடனே அவர், அந்த நபர் உண்டுபண்ணிய தாக்கத்தை நன்றியுணர்வோடு உங்களோடு பகிர்ந்து, அதே உணர்வுடன் உங்களுடன் தொடர்பிலிருக்கவும் அவர் விரும்புவார்.
6. ‘உங்களை வீட்டிலிருப்பது போல உணரச்செய்யும் வேறொரு இடத்தைப் பற்றி கூறுங்கள்’ என்று கேளுங்கள். இது அவரின் நினைவலைகளை மேலெழுப்பி, வேறொரு ஊர் அல்லது நாட்டில் உள்ள ஒரு பார்க் பெஞ்ச் அல்லது ஒரு ரெஸ்டாரென்ட்டின் குறிப்பிட்ட இருக்கை என்று ஏதாவது ஒரு இடத்தைக் கூறுவார். இது ஓர் அர்த்தமற்ற பேச்சாக இல்லாமல் அவரின் ஆழ்மனது உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி உங்கள் மீதான மதிப்பை உயர்த்துவதாக இருக்கும்.
7. ‘எந்த மாதிரியான நாட்கள் உங்களுக்கு மிகச் சிறந்தவைகளாகத் தோன்றும்?’ ஒரு மனிதரின் உண்மையான உணர்வுகளை வெளிக்கொணர உதவும் கேள்வி இது. ‘என் குழந்தைகளோடு சந்தோஷமாய் கழிக்கும் நாட்கள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு செயலை செய்து முடிக்கும் நாள்’ என்பது போன்ற ஏதாவதொரு பதிலை அவர் அளிப்பார். உண்மையில் அது ஒரு நேர்மறை சக்தியின் பிரதிபலிப்பாகவோ அல்லது ஒருவரின் மதிப்பை உயர்த்த உதவும் விதமான உரையாடலாகவோ அமையும்.
உங்களின் உரையாடல் பிறரை பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதாக உணரச் செய்வதுடன், உங்களின் புன்சிரிப்பு, அமைதி நிறைந்த முகம், உடல் மொழி, கனிவான பார்வை, குரல், பிறர் பேசுவதை ஆர்வமுடன் கவனிக்கும் குணம் போன்றவையும் பிறரை சுலபமாக உங்கள் பக்கம் கவர்ந்திழுக்க உதவி புரியும். இதுவும் ஒரு கலை என்று தாராளமாகக் கூறலாம்.