
முழு நேரமாக அலுவலகத்திற்குச் செல்ல இயலாத இல்லத்தரசிகள், ஓய்வு பெற்ற பெண்கள், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலையைச் செய்து வருமானம் ஈட்டலாம். பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வேலைகளை இணையத்தின் அசுர வளர்ச்சி காரணமாக தொலைவில் இருந்து செய்யத் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க விரும்பும் பெண்களுக்கு ஏற்ற 5 வேலைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. ஆன்லைன் பயிற்சி அளித்தல்: கணிதம், அறிவியல், கணினி அறிவியல், இசை அல்லது ஏதாவது ஒரு மொழிகளில் ஆழமான அறிவு ஒரு குறிப்பிட்ட துறையில் இருந்தால் பள்ளிகள் அல்லது கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக மாறலாம். வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வழிகாட்டியைத் தேடுவதால் கணினி, இணைய இணைப்பு மற்றும் கற்பிக்கும் ஆர்வம் இருந்தால் இதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டலாம்.
2. எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்: பல வலைத்தளங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள், கட்டுரைகள் மற்றும் தயாரிப்பு விளக்கங்களுக்கு தரமான கன்டென்ட் எழுதுவதற்கான ஆட்களைத் தேடுவதால், எழுதும் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நல்ல புலமை இருப்பவர்கள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவதோடு, வீட்டிலிருந்தபடியே ஆவணங்கள், புத்தகங்கள் அல்லது இணைய பக்கங்களை மொழிபெயர்க்கும் பணியையும் செய்யலாம். எல்லாத் துறைகளிலும் AIயின் பணி சிறப்பாக இருந்தாலும், மனிதர்களின் எழுத்தையோ, சிந்தனையையோ அதனால் உருவாக்க முடியாது என்பதால் இந்தத் துறையின் மூலம் பெண்கள் பகுதி நேர வேலை வாய்ப்பு அதிகம் பெற வாய்ப்புண்டு.
3. இ-காமர்ஸ் மூலம் கைவினைப் பொருட்கள் விற்பனை: நகைகள் செய்தல், துணி ஓவியங்கள், சமையல் பொருட்கள், இயற்கை சோப்புகள், தின்பண்டங்கள் செய்யும் தனித்துவமான திறன் இருப்பவர்கள் அதை இ-காமர்ஸ் தளங்களான Flipkart, Amazon, Instagram அல்லது சொந்த வலைத்தளம் மூலம் விற்பனை செய்வதன் மூலம் உங்களது படைப்பாற்றல் வெளிப்பட்டு வருமானம் பெருக வாய்ப்புள்ளது. முதலீடு குறைவு என்றாலும் தயாரிப்பின் தரமும் தனித்துவமும் முக்கியமானதாகும்.
4. சமூக ஊடக மேலாளர்: சிறிய, பெரிய வணிகங்கள் சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராமில் இயங்க வேண்டியது தற்போது அவசியமாக உள்ளதால் சமூக ஊடகங்களை சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பதிவுகளை உருவாக்குவது, வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, விளம்பரங்களை அமைப்பது போன்ற பணிகளைச் செய்து பகுதி நேரமாக அந்த நிறுவனங்களின் சமூக ஊடகப் பக்கங்களை நிர்வாகம் செய்து, வருமானம் ஈட்டலாம். நேர மேலாண்மையும், சமூக ஊடக போக்குகள் பற்றிய அறிவு மட்டுமே இந்த வேலைக்கு தேவையான மூலதனமாகும்.
5. விர்ச்சுவல் உதவியாளர்: ஒழுங்கமைக்கும் திறன் மற்றும் கணினியில் சரளமாக பணிபுரியும் பெண்களுக்கு தொலைவிலிருந்து ஒரு தொழிலதிபர், மருத்துவர் அல்லது சிறிய நிறுவனங்களுக்கு நிர்வாகப் பணிகளில் உதவும் விர்ச்சுவல் உதவியாளர் வேலை மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
தங்கள் சொந்த திறமைகளைப் பயன்படுத்தி பொருளாதார சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் பெண்கள் பெறுவதற்கு மேற்கூறிய வழிகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.