தலைக்குள் ஓடும் ஆயிரம் எண்ணங்கள்... மௌனம் தரும் அற்புதமான சக்தி என்ன தெரியுமா?

ஜென் பௌத்த தத்துவம் வழிகாட்டாவிட்டால் வீண் கவலைகளிலிருந்து மனதை மீட்டெடுப்பது எப்படி?
மன அமைதி
மன அமைதிGemini image
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

ரபரப்பான இந்த நவீன வாழ்வியல் முறையில் மனிதர்கள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். சுற்றி நிகழும் இடைவிடாத கூச்சல்களாலும், மனதில் ஏற்படும் எண்ணற்ற எண்ணங்களாலும் விரைவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் அன்றாடம் சந்திக்கும் பல மனப் போராட்டங்களுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வு வெளியுலகத்தில் இல்லை. மாறாக, நமக்குள்ளே இருக்கும் அமைதியான மௌனத்தில்தான் ஒளிந்திருக்கிறது.

இந்தத் தத்துவத்தை மிகச் சிறப்பாக விளக்குகிறது சுன்மியோ மாசுனோ (Shunmyo Masuno) எழுதிய 'Don't Worry: 48 Ways to Relieve Anxiety from a Zen Buddhist Master' என்ற புகழ்பெற்ற வாழ்வியல் நூல். வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கவும், தேவையற்ற வீண் கவலைகளிலிருந்து நமது மனதை முற்றிலுமாக விடுவிக்கவும் ஜென் பௌத்தத் தத்துவம் நமக்கு முதன்மையான சில வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத் தருகிறது.

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில் நாம் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களையும் தவறுகளையும் நினைத்து வருந்துகிறோம்.

அதேபோல எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்கிற கற்பனையான பயத்திலும் நமது பொன்னான ஆற்றலையும் நேரத்தையும் வீணடிக்கிறோம்.

ஆனால், ஜென் தத்துவம் நம்மை "இப்போது, இந்த விநாடியில்" முழுமையாக வாழக் கற்றுத் தருகிறது. "உணவு அருந்தும்போது அந்த உணவின் சுவையை மட்டுமே ரசித்து உண்ணுங்கள்; நடக்கும்போது நிலத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்" என்று அது சொல்கிறது.

நமது மனதிற்குள் எப்போதும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் அலைகள் போல ஓடிக்கொண்டே இருக்கின்றன. அந்த எண்ணங்களின் ஓட்டத்திற்குச் சற்று ஓய்வு கொடுக்க தினமும் குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை அமைதியாக, மௌனமாக அமர வேண்டும். எதைப் பற்றியும் சிந்திக்காமல் இயல்பான மூச்சுக்காற்றை மட்டும் கவனித்து வரவேண்டும். அமைதியாக இருக்கும் அந்தச் சிறிய நேரம், மனிதனின் மூளைக்கும் மனதிற்கும் அளப்பரிய புத்துணர்ச்சியையும் தெளிவையும் தருகிறது.

மன அமைதி
மன அமைதிGemini image

இன்றைய இணைய சமூகத்தில், சமூக வலைதளங்களில் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது மிகப்பெரிய மன உளைச்சலைத் தருகிறது. மற்றவர்களின் வளர்ச்சி, அவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை போன்றவற்றை ரீல்ஸ்களிலும் வீடியோக்களிலும் பார்க்கும்போது, நாம் நம்மை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

இதையும் படியுங்கள்:
அள்ள அள்ள குறையாத அன்பு: இல்லறத்தை அட்சய பாத்திரமாக மாற்றும் கலை!
மன அமைதி

இதனால் பொறாமையும் ஏக்கமும் தலை தூக்குகிறது. "ஒவ்வொருவருக்குமான பாதை மிகவும் தனித்துவமானது; அதை வேறு யாரோடும் எப்போதும் ஒப்பிடாதீர்கள்" என்று இந்த நூலின் ஆசிரியர் மிக ஆழமாகக் குறிப்பிடுகிறார்.

அதேபோல, நம்மிடம் உள்ள தேவையற்ற மனக்கசப்புகளையும் பேராசையையும் பிடித்து வைத்துக்கொள்ளாமல் விட்டு விலகப் பழகவேண்டும். ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே நீர் முழுமையாக நிரம்பியிருந்தால், அதில் புதிய நீரை ஊற்ற முடியாது. அதேபோலத்தான், பழைய கவலைகளாலும் எதிர்மறை எண்ணங்களாலும் நிரம்பியிருக்கும் மனதிற்குள் புதிய மகிழ்ச்சியோ அல்லது தெளிவான அமைதியோ நுழையவே முடியாது.

உங்கள் வாழ்க்கையின் குழப்பங்களுக்கு உடனடித் தீர்வைத் தேடி வெளியே எங்குமே அலைய வேண்டியதில்லை. தினமும் சிறிது நேரம் இயற்கையோடு அமைதியாக நேரத்தைச் செலவிடுங்கள்; சுற்றியுள்ள எளிய விஷயங்களை ரசியுங்கள்; தேவையற்ற எண்ணங்களைக் கூட்டிப் பெருக்கி மனதிலிருந்து அகற்றுங்கள்!

இதையும் படியுங்கள்:
மன்னிப்பே வலிமை: உறவுகளைக் காக்கும் அற்புத வழிமுறைகள்!
மன அமைதி

அமைதி என்பது வெளியிலிருந்து தேடிப் பெறவேண்டிய ஒன்று அல்ல. மனதின் ஆழத்தில் ஏற்கனவே உறைந்திருக்கும் அந்த அற்புத மௌனத்தை உணர வேண்டும். குழப்பங்கள் சூழும்போதெல்லாம் சற்று ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, மௌனத்தின் ஆற்றலை நோக்கி உங்களது கவனத்தைத் திருப்புங்கள்! மனமும் லேசாகும், வாழ்வும் சிறப்பாக இருக்கும்.

தேவையற்ற கடந்தகால நினைவுகளையும் எதிர்கால பயத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தினமும் 10 நிமிடம் மன அமைதியாக மூச்சை கவனிப்பதன் மூலம் மனதிற்குள் உறைந்திருக்கும் உண்மையான அமைதியை அடைய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com