
காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு கழுவ வேண்டும். காய்கறிகளை ஊறவைக்கும் அல்லது கழுவும் நேரத்தை குறைத்தல் மூலம், அதிக அளவு சத்துக்கள் வீணாகாமல் தடுக்கலாம்.
காய்கறிகளின் தோலை சீவுவதற்கு, தோல் சீவும் கருவியை (Peeler) பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும் போது, மேற்புறத் தோலை மட்டும் நீக்குவதால், சத்துக்கள் வீணாவதில்லை.
சமைப்பதற்குப் போதுமான அளவு நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பின்பு, காய்கறிகளை போட்டு சமைப்பது நல்லது.
காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்குவதன் மூலம், உயிர்ச்சத்துகள் சமைக்கும் போதும், கழுவும் போதும் நீரில் கரைவது குறைக்கப்படுகிறது.
காய்கறிகளை சமைப்பற்கு ஆவியில் வேகவைத்தல் (Steaming), அழுத்தக் கொதிகலன் முறை (Pressure cooker) போன்ற சமையல் முறைகளைப் பயன்படுத்தி, சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கலாம்.
காய்கறிகளை சமைக்கும் போது சமையல் சோடா உபயோகிப்பதை தவிர்த்தல் வேண்டும். இல்லையெனில், உணவிலுள்ள மிக அவசியமான உயிர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். காய்கறி சாலட், பரிமாறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தயாரிப்பதன் மூலம் ஊட்டச்சத்துகளின் இழப்பை தடுக்கலாம். சாலட் தயாரிப்பில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமிலங்களை சேர்ப்பதன் மூலம் காய்கறிகளிலுள்ள உயிர்ச்சத்து இழப்பு தடுக்கப்படுகிறது. ஏனெனில் உயிர்ச்சத்து அமிலங்களில் அழியாமல் நிலைத்திருக்கும்.