

மகிழ்ச்சியாக வாழ ஒரு பெரிய கம்ப சூத்திரம் ஒண்ணும் தேவை இல்லைங்கோ! உற்சாகம் தரும் பேச்சுக்களை கேட்பது, அடிக்கடி பயணம் செய்வது, நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பது, பாசிட்டிவான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும்.
சிலர் பணம் இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைக்கின்றார்கள். பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.
மனம் போல் வாழ்வு என்று கூறுவது உண்மைதான். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நினைத்தால் உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியாக இருப்போம். மனதிற்கும் நம் எண்ணங்களுக்கும் தொடர்பு உண்டு. எதையும் லேசாக எடுத்துக் கொள்வது மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கும்.
அனைவருடைய மகிழ்ச்சி என்பதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியின் அளவுகோல் வேறுபடும். ஒருவேளை சாப்பாடு கிடைப்பவருக்கு மூன்று வேளை நல்ல சாப்பாடு கிடைத்தால் அதுவே அவருக்கு மகிழ்ச்சி தரும். ஆயிரம் ரூபாய் கையில் வைத்திருப்பவனுக்கு பத்தாயிரம் கிடைத்தால் மகிழ்ச்சி.
சிலருக்கு தனிமையில் இருக்க மகிழ்ச்சி பெருகும். சிலருக்கோ கூடி வாழ்ந்து, கூடி பேசிட மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியின் இலக்கு வித்தியாசமானது. நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே.
மனிதனின் பெரும் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சாதனங்களில் முக்கியமானது மொபைல்ஃபோன். தகவல் தொடர்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய மொபைல் ஃபோன்களை 24 மணி நேரமும் பயன்படுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் மற்ற மகிழ்ச்சியான செயல்பாடுகளையும் செய்யவிடாமல் தடுத்து விடுகிறது. எனவே குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் அதிக நேரம் செலவிடுதல் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பசுமையான இடங்கள், பறவைகளின் ஒலிகள், மன அமைதி தரும் கோவில்கள், மலைப்பிரதேசங்கள் சென்று வருதல் நல்ல மன நிலையை கொடுக்கும். அதற்காக தொலைதூரப் பயணம் போகவேண்டிய அவசியமில்லை. நமக்கு அருகிலேயே நம்மைச் சுற்றி நிறைய இடங்கள் உள்ளன.
நம் மனதுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதும் அதில் ஈடுபடுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எந்த வேலை செய்வதாக இருந்தாலும், அதில் நம் மனமும் உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் நம் மனம் தேவையற்ற சிந்தனைகளில் ஓடாது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே மகிழ்ச்சியும் குறையாது.
நம்மை நாமே விரும்புதல் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் படி. நம் மீது நமக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே உணவு, உறக்கம் என நம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி முதலில் நம்மை நாமே விரும்ப காலப்போக்கில் நம்மைச் சுற்றி இருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லோரையும் ரசிக்கவும், கொண்டாடவும் ஆரம்பித்து விடுவோம். இதனால் நம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மீது அக்கறையை வளர்த்துக் கொள்ளுதல், நல்ல நண்பர்களை சம்பாதித்தல், புதுப்புது விஷயங்களை அன்றாடம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுதல், எப்போதும் பிரச்சினைகளே இருக்கக் கூடாது என்று நினைக்காமல் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள தன்னம் பிக்கையை வளர்த்துக் கொள்ளுதல், நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவை நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.