ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவமான தன்மை உண்டு. அது பிறரால் மெச்சப்படும்போது அது ஓர் ஆளுமை ஆகிறது. அதுவே நாளடைவில் உங்களது பர்சனாலிட்டியாகிறது. ஒரு நல்ல ஐடியாவிற்கு நீங்கள் எப்படி மரியாதை கொடுக்கிறீர்கள் என்பதை வைத்து, உங்களது பர்சனாலிட்டியை நீங்களே முடிவு செய்துகொள்ள முடியும்.
ஒரு நல்ல ஐடியா தோன்றும்போது மந்தமான மனிதர்கள் அதிலிருந்து விலகி ஓடக் காரணம் தேடுகிறார்கள். சோம்பேறிகள் அதற்கு மரியாதை தராமல் சுகமான வாழ்க்கை வேறெங்கோ இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். தன்னியக்கம் உள்ளவர்கள் அதைப் புறக்கணித்து விட்டு நியாயம் கற்பிப்பார்கள். முட்டாள்கள் தனது தாமதத்தால் அந்த ஐடியாவை நழுவிப்போக விடுகிறார்கள். அறிவாளிகள் தங்களை முழுதாக அந்த ஐடியாவிற்கு அர்ப்பணிக்கிறார்கள். உங்களது பர்சனாலிட்டி என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கும் வெற்றிக்கும் இடையில் இரண்டு உறுதி மொழிகள்தான் இருக்கின்றன அவை: ‘உடனே செயல்படத் தொடங்குவேன். பிறகு ஒரு நாளும் தளர மாட்டேன்’ செயல்படத் தொடங்குவதற்கு முன்னால், ‘இன்னும் எனக்கு நேரம் வரலை. சரியான மூடு இல்லை’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு காத்திருக்காதீர்கள். உடனே செய்யத் தொடங்குங்கள். நேரம், காலம், மூடு எல்லாம் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.’ என்கிறார் ராபர்ட் ஹெச் ஷில்லர்.
உங்கள் பர்சனாலிட்டியை நீங்களே மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கு இந்த 10 அடிப்படை உத்திகள் உதவும்.
நீங்கள் எப்போது பேசினாலும் அடுத்தவரின் கண்களைப் பார்த்து பேசுங்கள். உங்களிடத்தில் பேசுகின்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களுடன் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும்போதும் கண்ணோடு கண் நோக்கி பேசுங்கள். அது உங்கள் பர்சனாலிட்டியை உயர்த்துவதற்கும், உங்களது மூளையின் நல்ல செயல்பாட்டிற்கும், சந்தோஷமான மனநிலைக்கும் உதவுகிறது என்கிறார்கள் ஆக்ஸ்போர்டு தேசிய ரிசர்ச் ஆராய்ச்சியாளர்கள்.
எங்கே நீங்கள் உட்கார்ந்தாலும் எப்போதும் நிமிர்ந்து உட்காருங்கள். மற்றவர்கள் முன் உடம்பை வளைத்து நெளித்து நிற்காமல் பவ்வியமாக நேராக நின்று பழகுங்கள். உங்களின் நல்ல உடல் தோரணை உங்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும்.
எப்போதும் எவரையும் நீங்கள் பார்த்து பரஸ்பரம் கை குலுக்கினாலும் அதில் ஓர் உறுதித்தன்மை தெரிய வேண்டும். ஏனோதானோ என்று கை குலுக்காதீர்கள்.
மற்றவர்களுடன் பேசும்போது மெலிதாக புன்னகை சிந்துங்கள். ஒரு சிறு புன்முறுவல் உங்கள் பர்சனாலிட்டியை பல மடங்கு உயர்த்தும்.
மற்றவர்களுடன் பேசும்போது அவர்கள் கூறுவதை ஆர்வமாகக் கேளுங்கள். அது உங்கள் மீது அடுத்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்க வழி வகுக்கும்.
உங்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் தவறாமல் மன்னிப்பு கேளுங்கள். தவறுகளை வெறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். யார்தான் தவறு செய்யவில்லை? தவறுகள் மூலம்தான் நாம் அதிகம் கற்றுக் கொள்கிறோம்.
மற்றவர்களுடன் நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தை அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
இதுவரை உங்களது குறைகளையே நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால், அதை விட்டு உங்களது நிறைகளை எண்ணிப்பார்க்கத் துவங்குங்கள். குறைகள் குறையத் துவங்கும். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை தினமும் நினைத்துப் பாருங்கள்.
உங்கள் திறமைகளை அடையாளம் காணுங்கள். புதிய திறமைகளைக் கண்டுபிடித்து பெருமை தேடிக் கொள்ளுங்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது உங்களது பர்சனாலிட்டியை பல மடங்கு உயர்த்தும் என்கிறார்கள்.
உங்களை விட, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தை கைவிட்டு, திறமையுள்ள பிறரோடு உங்களுக்கு இருக்கும் ஒற்றுமையைப் பாருங்கள். தனியாக சாப்பிடுவதை விட மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுங்கள். அதனால் உங்களது மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.