வாரன் பஃபெட் ஒரு அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், பரோபகாரி. உலகின் பத்தாவது பணக்காரர். அவரை பணம் சேர்ப்பதிலும், ஆலோசனை வழங்குவதிலும் வல்லவர் என்று கூறுவார்கள். வாழ்க்கையின் வெற்றிக்கு அவர் வலியுறுத்துகிற 12 முக்கிய முடிவுகள் என்னவென்று பார்ப்போம்.
1.ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முடிவெடுத்தல்
இதனை சிறு வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். தன்னுடைய பத்தாவது வயதில் படித்த “1000 டாலர் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்” என்ற புத்தகமும், அதனால் அவருக்கு பணத்தில் எழுந்த ஆர்வமும், தந்தையுடன் “நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்” சென்ற நிகழ்வும் பங்கு சந்தையில் ஆர்வத்தை தூண்டியதாகக் கூறுகிறார்.
2.ஆரம்பிக்க முடிவு செய்தல்
ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. துணிவாகக் களத்தில் இறங்க வேண்டும். முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியாத நிலையிலும், பரிட்சை செய்து பார்ப்போம் என்று செயல்படுத்தும் துணிவு வேண்டும்.
3.தகுந்த வழிகாட்டிகளைக் கண்டுபிடிக்க முடிவு செய்தல்
தனியாக முடிவெடுத்து யாரும் முன்னேறுவதில்லை. முன்னேற, எது சிறந்த பாதை, என்பதை நல்ல வழிகாட்டிகளிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
4.தைரியமாக முடிவெடுத்தல்
“அதிர்ஷ்டம் தைரியமானவர்களை ஆதரிக்கிறது” என்பார்கள். ஆகவே துணிச்சலுடன் காரியத்தில் இறங்க வேண்டும். பஃபெட்டின் வழிகாட்டி, அரசு பணியாட்கள் காப்பீடு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அந்த நிறுவனத்தின் அலுவலகம் சென்று, காப்பீடு பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட பஃபெட், சில வருடங்களுக்குப் பிறகு அந்த நிறுவனத்தை தனதாக்கிக் கொண்டார்.
5.ஆரோக்கியமாக இருக்க முடிவெடுத்தல்
“நமக்கு இருப்பது ஒரு மனது, ஒரு உடம்பு. அது நாம் வாழும் காலம் வரை இருக்க வேண்டும். அவற்றை சரிவர பராமரிக்காவிட்டால், 40 வருடத்திற்குள் அவை வலுவிழந்து விடும். இப்போது, நாம் செய்யும் பராமரிப்பு, வரும் காலங்களில் உடம்பும், மனமும் எப்படி வேலை செய்யும் என்பதை நிர்ணயிக்கும்” என்று பஃப்பெட், தன்னுடைய மாணவர்களிடம் கூறுவார்.
6.தனிமரமாக இயங்காமல் நல்ல கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முடிவெடுத்தல்
தன்னுடைய பங்குதாரர்களுக்கு மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்வது முக்கியம் என்பதை வலியுறுத்துவார் பஃப்பெட். அவர் மற்றவர்ளை தன்னுடைய பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு, இணைந்து வேலை செய்யத் தயங்கவில்லை.
7.எதிர்காலம் பற்றிய முடிவெடுத்தல்
வாழ்க்கை நிரந்தரமில்லை. ஆகவே, நம்முடைய காலத்திற்குப் பிறகு, யார் நாம் விட்டுச் செல்கின்றவற்றைப் பராமரிப்பார்கள் என்பதை யோசித்து, செயல் படுத்த வேண்டும்.
8.இழப்பை குறைக்க முடிவெடுத்தல்
பலரும் செய்கின்ற மிகப்பெரிய தவறு, நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிந்தாலும், அதனை ஒத்துக் கொள்ளாமல் மேன்மேலும் முதலீடு செய்து நஷ்டம் அடைவது. தவறான முடிவு எடுத்து விட்டோம், பட்ட நஷ்டம் போதும் என்று அதனை விட்டு வெளியேற வேண்டும். அமெரிக்காவில், ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு எதிர்காலமில்லை என்று உணர்ந்த பஃபெட், பல வருடங்களாக நடத்தி வந்த ஜவுளித் தொழிலை விட்டு வெளியேறினார்.
9.சிரித்து வாழ வேண்டும் என்ற முடிவு
“வாழ்க்கை இனிமையானது, அதிகமாக சிரித்தால்” என்பார்கள். பஃபெட் நடத்தும் நிறுவனம், முக்கியமாக பணம், முதலீடு, மற்றவர்களின் எதிர்காலம் என்று தீவிரமான நிறுவனம் என்றாலும், அவருடைய பேச்சுகள், கடிதங்கள், நேர்காணல் ஆகியவை ஜோக்ஸ் கலந்தே இருக்கும்.
10.அறிந்தவற்றை மற்றவர்க்கும் கற்றுக் கொடுக்க முடிவெடுத்தல்
மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது பஃபெட் மிகவும் விரும்பும் பணிகளில் ஒன்று. அவர் மற்றவர்களுக்கு அனுப்பும் கடிதம், பணியில் இருப்பவர்களுக்கு அனுப்புகின்ற விவரங்களில் புத்திமதி, ஆலோசனை ஆகியவற்றைக் காணலாம்.
11.எதுவும் செய்யாத முடிவு
“சும்மா நிற்காதே. ஏதாவது செய்” என்று பழமொழி உண்டு. ஆனால் பஃபெட் சொல்வது, “ஏதாவது செய்யாதே. சும்மா இரு”, என்பது அவரைப் பொறுத்தவரை வெற்றிப் பாதைக்கு மிகவும் முக்கியமானது. நாம் முடிவெடுத்து செய்வதற்கு நல்ல விருப்பத் தேர்வு இல்லாதபோது, செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்யாமல், சும்மா இருப்பதே நல்லது.
12.சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும் முடிவு
நாம் சேர்த்ததை, நாம் வசிக்கின்ற சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பஃபெட் விரும்பும் கொள்கை. அதனால், மற்றவர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருகிறார்.