நம் வாழ்க்கையில் கடினமான நேரங்கள் வரும்போதுதான் பெரும்பாலும் நம்பிக்கையை இழந்து விடுவோம். அதுபோன்ற சமயங்களில்தான் கண்டிப்பாக நம் மீதும், நாம் எடுக்கும் முயற்சியின் மீதும் நம்பிக்கையிருக்க வேண்டும். கடுமையான தருணங்களில் நாம் துவண்டு போனாலும், அதனால் கிடைக்கும் வாழ்க்கை பாடம் எதிர்க்கால வெற்றிக்கு நிச்சயம் பயன்படும். இன்றைய பதிவிலும் நம் வாழ்க்கையில் மறக்கக்கூடாத 12 வாழ்க்கை பாடங்களை பற்றி தான் பார்க்க உள்ளோம்.
1. நம்முடைய வாழ்க்கையில் நடந்து முடிந்த தோல்விகளோ, அவமானங்களோ நம்மை யார் என்று நிர்ணயிக்கப் போவதில்லை. அதெல்லாம் முடிந்துபோன நிகழ்வாகும். எதிர்க்காலம் இன்னும் எழுதப்படாமல் தான் இருக்கிறது. இன்று நீங்கள் யார், நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பது வரும் எதிர்க்காலத்தை மாற்றியமைக்கும். எனவே முடிந்து போன பழைய விஷயங்களை விட்டுத்தள்ளுங்கள்.
2. நம் வாழ்க்கையில் எல்லாம் சரியாகப்போய் கொண்டிருக்கிறது என்று யாருக்கும் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் அழ நேரலாம், மனம் உடைந்து போகலாம். அப்போது அழுவதில் எந்த தவறும் இல்லை. எவ்வளவு சீக்கிரத்தில் நாம் அழுது முடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரத்தில் சிரிக்கத் தொடங்கி பிரச்சனைகளை எதிர்க்கொள்ள தொடங்குவோம். அதற்கான பலத்தை பெற வேதனைகளை அழுது தீர்ப்பதில் தவறில்லை.
3. வாழ்க்கை சிறியது, கண்ணாடி போன்று பாதுகாக்க வேண்டியது, எளிதில் உடைந்துவிட கூடியது. இருப்பினும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டிய காரியத்தில் கண்ணாக இருந்து எதிர்க்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும். நமக்கு இருக்கும் சிறிது நேரத்திலும் பழைய விஷயங்களை எண்ணி கவலைப்படுவது நேரத்தை வீண் விரயமாக்கும் செயல்.
4. என்னதான் நடந்தாலும், எது மாறினாலும் அடுத்த நாள் சூரியன் உதிக்கத்தான் போகிறது. மோசமான விஷயம் என்னவென்றால், இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல விஷயம் என்னவென்றால், இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதேயாகும்.
5. நம்முடைய எதிர்க்காலம் இன்னும் எழுதப்படாத காகிதமாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய தொடக்கம். ஒவ்வொரு காலையும் நம் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ஆரமிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. நம்முடைய பிரச்சனைகளுடன் அதிகமாக Emotional attachment ஆவதை நிறுத்துங்கள். அவற்றை மாற்றியமைக்கவும், அவற்றை பற்றி நீங்கள் உணரும் விதத்தை மாற்றவும் உங்களால் முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
7. நம் வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை இன்னொரு பிரச்சனையை வைத்து பெரிது பண்ண தேவையில்லை. அதாவது அதை நினைத்து வருந்தி மேலும் கஷ்டம் சேர்க்க வேண்டாம். மேகத்தால் சூரியனை வெகுகாலம் மறைக்க முடியாது. அதைப்போல நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில், நாம் ஜோலிக்க போவது என்பது உறுதி அதை நினைவில் கொள்ள வேண்டும்.
8. சிரிப்பது என்பது வாழ்கையில் மிகவும் தேவையான மருந்தாகும். துன்பத்தில் சிரிப்பது, எல்லாவற்றிலும் நகைச்சுவையை கண்டுப்பிடிப்பது, பாசிட்டிவாக எடுத்து கொள்வது தானாகவே நம்மை சுற்றி மகிழ்ச்சியான மக்களை கொண்டு வந்து சேர்க்கும்.
9. உங்களை யாரேனும் காயப்படுத்தினாலும் அவர்களை மன்னித்து விடுங்கள். நம் மனதில் இருக்கும் கோபம், மனக்கசப்பு, வெறுப்பு இவை அனைத்தும் அவர்களை விட நம்மையே அதிகமாக காயப்படுத்தும். எனவே அவர்களை மன்னிப்பது அவர்களுக்காக இல்லாவிட்டாலும் நமக்காக செய்ய வேண்டியது அவசியமாகும்.
10. சில சமயங்களில் நாம் ஆசைப்பட்டது நமக்கு கிடைக்காதது கூட நல்லதேயாகும். எனெனில் அப்போது தான் நாம் செய்ததில் உள்ள தவறுகள் என்னவென்று ஆராயத் தொடங்குவோம். ஒன்று இல்லையேல் இன்னொரு கதவு திறக்கும், புது வாய்ப்புகள் வரும்.
11. நம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை நினைத்து கவலைப்படுவது வீண் நேரவிரயம், கவலைப்படுவதால் நம் துன்பங்கள் விலகப் போவதில்லை. அது நம்மிடமிருக்கும் இன்றைய பலத்தையும் சேர்த்து உறிஞ்சிக்கொள்ளும்.
12. நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டது என்று நினைக்கும் போது கூட ஒரு புதிய தொடக்கத்தை ஆரம்பிக்க முடியும். முடிவு என்று வருவது ஒரு புதிய தொடக்கத்திற்காகத்தான் என்பதை உணர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.