

இன்று புத்தாண்டு துவக்க நன்னாளாகும். இப்படி பல புதிய வருடங்கள் கடந்து போய்விட்டன. மனிதன் தனக்கும் உலகத்திற்கும் புதிய வருடமானது அமைதி, சந்தோஷம், வளம் ஆகியவற்றை நல்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். ஆனால் உலகின் நலமானது மனிதனது நடத்தையைப் பொறுத்தே அமைகிறது. மனிதனின் நடத்தை அவனது மனதைப் பொறுத்திருக்கிறது. மனதின் இயற்கை அவனது எண்ணங்களைப் பொறுத்திருக்கிறது. சத்தியத்தின் அடிப்படையில் மனிதனின் எண்ணங்கள் அமையும் போதுதான் உலகம் செழிக்கும். உலகின் வளத்தை விரும்பும் ஒருவன் அது அவனது எண்ணங்களும் செயல்களும் அவன் உயர்வாக எண்ணுவதைப் பொறுத்தே அமைந்திருக்கும் என்பதை நினைக்க வேண்டும்.
நன்மையும், தீமையும், சந்தோஷமும், துன்பமும், புண்ணியமும், பாவமும் அவனது செயல்களைப் பொறுத்தே அமைகிறது. செயல் எப்படியோ அப்படியே தான் விளைவும் அமையும். ஆனால் இன்றோ மனிதன் செயல்களின் விதியைப் பற்றி மறந்து தனக்கு இஷ்டமானபடி நடக்கிறான். பாவகரமான செயல்களில் ஈடுபடுவது சுலபம். ஆனால் அவை கொடுக்கும் தீய விளைவுகளைப் பொறுத்துக் கொள்வது என்பது மிகவும் கஷ்டம்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
உபநிடதங்கள் சொல்கின்றன: “தஸ்மை நமஹ கர்மணே” என்று.
(செயல்களே, உனக்கு நமஸ்காரம்)
நீங்கள் செய்யும் செயல்களுக்கு உங்கள் நமஸ்காரத்தை சமர்ப்பிக்க வேண்டும், அதன் மூலம் அவை புனிதமாகும்; நல்ல பெயரை ஈட்டித் தரும்; உலக வளத்திற்கு பங்களிக்கும். பாரதப் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளில் இது ஒன்றாகும்.
நடனமாடும் பெண்மணி தான் அணியும் தனது சலங்கைகளுக்கு நடனத்தை ஆரம்பிக்கும் முன்னர் மரியாதை செலுத்துகிறாள். தபலா கலைஞர்களும் கூட அதற்கு மரியாதை செலுத்திய பின்னரே தபலா வாசிக்க ஆரம்பிக்கின்றனர். நன்கு கல்வி கற்றவர்கள் மட்டும் இதைச் செய்வதில்லை, படிப்பறிவற்ற ஒரு லாரி டிரைவரும் கூட வண்டியை எடுப்பதற்கு முன்னர் ஸ்டீரிங் வீலுக்குத் தன் மரியாதையைச் செலுத்துகிறார். நமது பண்பாடு செயலுக்குத் தரும் புனிதத்தன்மை இது தான்.
உங்களின் நமஸ்காரத்தை நீங்கள் செய்யும் செயலுக்கு சமர்ப்பியுங்கள். நமஸ்காரம் என்பது என்ன? அகங்காரத்தை விடுவது தான் அது. ஆனால் இன்றோ இந்தப் பழைய பண்பாட்டை மறந்துவிட்டு மனிதன் தனது இஷ்டத்திற்கும் விருப்பத்திற்கும் தகுந்தபடி செயல் புரிகிறான். அதனால் அவன் சொல்லவொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகிறான். தனது தீய செயல்களுக்காக அதன் விளைவுகளை அனுபவிக்கும்போது அவன் துன்பப்படுகிறான்.
ஆனால் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்னர் அது நல்லதா, கெட்டதா என்பதை அறிய வேண்டுவதைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் பகுத்தறியும் உங்கள் உணர்வை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.
இன்று மக்கள் பக்தி பற்றி அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசி வருகிறார்கள். உங்கள் பக்தி எனக்கு வேண்டாம். உங்களது மாற்றத்தையே நான் விரும்புகிறேன். (I don’t want your devotion; I want your transformation).
பக்தி என்பது என்ன? பரோபகாரம் இதம் சரீரம் – மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே இந்த உடல் உள்ளது – இந்த உடலானது மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே இந்த உடல் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சேவையின் பாதையில் நடக்க உறுதி பூணுங்கள்.”