

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, நாம் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதும், வரும் ஆண்டிற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவதும் வழக்கம். பெரும்பாலும், "உடல் எடையைக் குறைக்க வேண்டும்", "ஜிம்முக்குச் செல்ல வேண்டும்" என்பது போன்ற தனிப்பட்ட சபதங்களையே நாம் எடுப்போம். ஆனால், நம் வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் நம் 'வேலை' குறித்து நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
2026 ஆம் ஆண்டு பிறக்கவிருக்கும் வேளையில், வெறும் இயந்திரமாக உழைக்காமல், புத்திசாலித்தனமாக உழைத்து, மன நிம்மதியோடு வேலையில் முன்னேறுவது எப்படி? அதற்கான சில எளிய, Resolution-களை இங்கே காண்போம்.
1. எல்லைக்கோட்டை வரையுங்கள்: "எந்நேரமும் ஆன்லைனில் இருப்பதுதான் அர்ப்பணிப்பு" என்ற பொய்யை முதலில் நம்பாதீர்கள். வேலை வேறு, வாழ்க்கை வேறு. அலுவலக நேரம் முடிந்த பிறகு வரும் மின்னஞ்சல்களுக்கோ, அழைப்புகளுக்கோ பதிலளிக்காமல் இருப்பதைப் பழக்கப்படுத்துங்கள். வேலைக்கும் ஓய்வுக்கும் இடையே ஒரு தெளிவான எல்லைக்கோட்டை வகுத்துக்கொள்வது உங்கள் மனநலனைப் பாதுகாக்கும்.
2. பிரச்சனையை உடனே பேசுங்கள்: அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமானாலோ அல்லது நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டாலோ, "சரி போகட்டும்" என்று அமைதியாக இருக்காதீர்கள். பிரச்சனை பெரிதாகும் வரை காத்திருக்காமல், ஆரம்பத்திலேயே அதைப் பற்றி மேலதிகாரியிடம் பேசுங்கள். இது சண்டை போடுவது அல்ல; உங்கள் எதிர்பார்ப்பை நாகரிகமாகப் பதிவு செய்வது. இது உங்களை எரிச்சலடையாமல் பாதுகாக்கும்.
3. ஒரே ஒரு புதிய திறமை: உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. உங்கள் துறை சார்ந்த ஏதாவது ஒரு புதிய தொழில்நுட்பத்தையோ அல்லது திறமையையோ இந்த ஆண்டில் கற்றுக்கொள்ளுங்கள். மொத்தமாக எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை. தினமும் சிறிது நேரம் ஒதுக்கி ஒரு விஷயத்தைக் கற்றாலே போதும், அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பெரிய வாய்ப்புக் கதவுகளைத் திறக்கும்.
4. மனநலம் முக்கியம் பிகிலு: வேலை அழுத்தம் என்பது சகஜம் தான், ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது. உங்களுக்குச் சோர்வாகத் தோன்றினால் தயங்காமல் விடுப்பு எடுங்கள். சக ஊழியர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ மனபாரத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான மனநிலை இருந்தால்தான், உங்களால் வேலையில் சிறந்து விளங்க முடியும் என்பதை மறக்காதீர்கள்.
5. உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்: பல நேரங்களில் நமக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகள் தெரியாமலேயே நாம் ஏமாந்துவிடுகிறோம். உங்கள் நிறுவனத்தின் விதிமுறைகள், விடுப்பு கொள்கைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அறிவுதான் உங்கள் ஆயுதம்.
6. நெட்வொர்க் அல்ல, நட்பு: லிங்க்ட்இனில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருப்பதை விட, ஆபீஸில் உண்மையான அக்கறையுள்ள நான்கு நண்பர்கள் இருப்பது சிறந்தது. சக ஊழியர்களிடமும், துறை சார்ந்தவர்களிடமும் ஆழமான நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இக்கட்டான சூழலில் உங்களுக்குக் கை கொடுப்பது இந்த உறவுகள்தானே தவிர, ஆன்லைன் எண்கள் அல்ல.
7. குட்டி வெற்றிகளைக் கொண்டாடுங்கள்: பதவி உயர்வு கிடைத்தால் மட்டும்தான் கொண்டாடுவேன் என்று இருக்காதீர்கள். ஒரு கடினமான ப்ராஜெக்ட்டை முடிப்பது, ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வது, ஏன்... ஒரு சவாலான வாரத்தைக் கடந்து வருவது கூட வெற்றிதான். உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பவை ஜனவரி மாதத்தோடு முடிந்துவிடுவதற்காக எடுக்கப்படுபவை அல்ல. 2026-ல் நீங்கள் ஒரு சிறந்த ஊழியராக மட்டும் இருந்தால் போதாது; ஒரு மகிழ்ச்சியான மனிதராகவும் இருக்க வேண்டும்.
மேலே சொன்ன விஷயங்கள் உங்களை ஒரு முழுமையான, தன்னம்பிக்கை கொண்ட நபராக மாற்றும். மாற்றத்தை இன்றே தொடங்குங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்.