
ஒருவர் தனது வாழ்வில் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு செயலை செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதில் மந்திரமோ மாயமோ எதுவும் இல்லை. ஒரு புதிய செயலை உருவாக்குவதற்கும் பழைய பழக்கத்தை மாற்றுவதற்கும் 21 நாட்கள் ஆகும் என்பது ஒரு பிரபலமான கருத்து ஆகும். நரம்பியல் ஆய்வுகள் மற்றும் சில உளவியல் ஆராய்ச்சிகள் கூட ஒரு பழக்கத்தை உருவாக்க அல்லது உடைக்க இது ஒரு குறைந்தபட்ச காலக்கெடு என்று கூறுகின்றன.
21 நாட்கள் ஏன் தேவை?
21 நாட்களுக்கு தொடர்ந்து ஒரு செயலை செய்வதன் மூலம் அவை வாழ்வின் இயல்பான பகுதியாக மாறும். உயரமான புல்வெளியில் ஒருவர் ஒரு புதிய பாதையை உருவாக்க நினைத்தால் அது முதலில் கடினமாக இருக்கும். முதன்முறையாக அதில் நடக்கும்போது பாதை சரியாகத் தெரியாது. ஆனால் அதே பாதையில் 21 நாட்கள் தொடர்ந்து நடக்கும்போது ஒரு தெளிவான பாதை உருவாகிவிடும்.
சவால்களும், தடைகளும்:
ஒருவர் காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அவர் வழக்கமாக 7 மணிக்குத்தான் எழுவார். புதிய செயலை செய்வதற்கு அவருக்கு நிறைய மனத்தடைகளும் சவால்களும் ஏற்படும். அந்த ஆரம்ப சிரமத்தைத்தாண்டி செல்வது மிக முக்கியம். அதிகாலை 5 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு ஒரு அவர் எழவேண்டும். பின்பு உடற்பயிற்சியை தொடங்கவேண்டும். அவரால் முதலில் கண்விழிக்கவே கஷ்டமாக இருக்கும். இன்னும் தூங்கலாம் என்று தோன்றும்.
ஆனால் அந்த பழக்கத்தை வழக்கமாக்கும்போது அதாவது 21 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது அந்த செயல் அவருக்கு எளிதாகிவிடும். அதன் பின்னர் அவருக்கு அதிகாலையில் எழுவதும் உடற்பயிற்சி செய்வதும் கடினமான காரியமாக இல்லாமல் எளிதாகிவிடும்.
பழைய கெட்ட பழக்கத்தை மாற்றுதல்:
இந்த 21 நாள் பழக்கத்தில் பழைய கெட்ட பழக்கத்தையும் மாற்ற முடியும். உதரணமாக இரவில் வெகுநேரம் கண்விழித்துவிட்டு மறுநாள் தாமதமாக எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி அலுவலகத்துக்கு லேட்டாக போவது என்கிற கெட்ட வழக்கத்தையும் இந்த 21 நாள் வழக்கத்தில் மாற்ற முடியும்.
பழக்கவழக்கத்திற்கு அடிமை:
வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் பலரும் இந்த முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது கண்கூடு. வெறுமனே 21 நாட்கள் தொடர்ந்து ஒரு செயலை செய்யும்போது அது மிகவும் எளிதாகிவிடும். மனிதன் பழக்கவழக்கத்திற்கு அடிமையாகிறான். அது நல்லதோ கெட்டதோ தொடர்ந்து செய்யும்போது அது மனிதனின் மீது ஒரு சக்தி வாய்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு நடத்தை பழக்கமாக மாறியவுடன் அதை உடைப்பது மிகவும் கடினமாகும். கெட்ட பழக்கத்தை மாற்றுவது என்பது கடினம் அதேபோல நல்ல பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டால் அது சம்பந்தப்பட்டவருக்கு மிகுந்த நன்மைகளைத்தரும்.
ஆனால் வெறும் 21 நாட்களில் ஒருவரால் தான் விரும்பும் நிலையை அடைய முடியாது. உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஒருவர் 21 நாட்கள் மட்டும் உடற்பயிற்சியை செய்தால் உடல் எடை குறையாது. ஆனால் 21 நாட்கள் தொடர்ந்து அந்த வேலையை செய்து வரும்போது அது அவருக்கு எளிதாக மாறிவிடும். தொடர்ந்து அவர் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் செய்யும்போது அவருடைய உடல் எடை கட்டுக்குள் வரும். வாழ்வில் வெற்றி அடைய நினைக்கும் ஒவ்வொருவரும் 21 நாட்கள் பழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டு வெற்றி அடையலாம்.
எழுத்தாளராக வேண்டும் என்று விரும்புபவர் 21 நாட்கள் தொடர்ந்து எழுதினால், அவரால் எழுத்தாளராக மிளரமுடியும். இது நடனம், பாட்டு மற்றும் பிற கலைகள் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும். 21 நாள் பழக்கத்தை கடைப்பிடித்து நாம் விரும்பியதை அடையலாம் என்பது உறுதி.