ஒரு மனிதனுக்கு உடல் வலிமையாக இருக்கிறதோ இல்லையோ அவனுடைய மனம் வலிமையாக இருக்க வேண்டும். மனவலிமை இருந்தாலே நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் நம்மால் சாதித்து விட முடியும். இந்தப் பதிவில் உங்கள் மனதை வலிமையாக்கும் மூன்று பழக்கங்கள் பற்றி பார்க்கலாம்.
உங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் எளிமையான பழக்கமாகும். அதேசமயம் உண்மையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பிறரிடம் வெளிப்படுத்தும்போது அதில் நேர்மையாக இருங்கள். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அதை அவர்களிடம் தெரியப்படுத்துவது நல்லது. அவர்களிடம் அதை மறைத்து போலியாக நடிப்பது, உங்களுக்கும் அந்த நபருக்கும் எந்த வகையிலும், எதிலும் பலனளிக்காது. எனவே முடிந்தவரை உங்கள் உணர்வுகளை பிறரிடம் வெளிப்படுத்தும்போது உண்மையாக இருங்கள். அதேசமயம் சில உணர்வுகளால் பிறருக்கு சங்கடம் ஏற்படுமாயின் அதை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையில்லாத சிந்தனைகளை தவிருங்கள்.
பெரும்பாலான நம் கஷ்டங்களுக்கு கடந்த காலத்தைப் பற்றி நாம் சிந்திப்பது, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகள் காரணமாக இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் எதுபோன்ற விஷயங்களை சாதிக்க போகிறீர்கள் என்பது உண்மையாக நடக்கிறதோ இல்லையோ, நீங்கள் அனைத்தையுமே உங்கள் மனதிலேயே நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். அதேபோல, சிலர் தன் வாழ்வில் எதையுமே செய்ய முடியாமல் இருப்பதற்கு, கடந்த காலத்தில் நடந்து முடிந்த ஏதோ ஒன்றைப் பற்றி தற்போது நினைத்து கவலைப்படுவது தான் காரணமாக அமையும். இத்தகைய இறந்த காலம் மற்றும் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் ஒருவரை நிகழ்காலத்தில் எதையுமே செய்ய முடியாமல் முடக்கிவிடுகிறது. நீங்கள் மனதளவில் வலிமை பெற்று அனைத்தையும் சிறப்பாகச் செய்ய, தேவையில்லாத சிந்தனைகளை ஒதுக்கி வைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
எது தேவை எது முக்கியம் என்பதை வகைபிரியுங்கள்.
மன வலிமைக்கு மிக முக்கியமானது நமக்கு உதவாதவற்றை எதிர்க்கும் திறனாகும். அதாவது இந்த வாரம் முழுவதும் உழைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள், ஆனால் அன்று மாலையே சோபாவில் ஜாலியாக படுத்துக்கொண்டு டிவி பார்க்கிறீர்கள். அல்லது உங்கள் மனைவியை மோசமான வார்த்தைகளில் திட்டுகிறீர்கள், ஆனால் அதைப் பற்றி அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றி நீங்கள் சிந்திப்பது இல்லை.
முதலில் நீங்கள் எது செய்வதாக இருந்தாலும், அதன் தேவை மற்றும் முக்கியத்துவத்தை வகை பிரிக்கும் தந்திரத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சோபாவில் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பது உண்மையிலேயே முக்கியமானது தானா? அது உங்கள் வாழ்வில் எத்தகைய மதிப்பைக் கொண்டுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். இப்படி நீங்கள் செய்யும் எந்த செயலுக்கும், அதன் மதிப்பு, அதனால் ஏற்படும் விளைவை சிந்தித்துப் பார்த்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்கள் மனதிற்கு தெரியும். இதனால் உங்கள் மனம் வலிமை பெறும்.