333 Manifestation
333 Manifestation

333 Manifestation உண்மையில் வேலை செய்யுமா? 

Published on

333 Manifestation என்ற சொல் சமீப காலமாக சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகக் கருதுகின்றனர். ஆனால், இது உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது? இதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.‌

333 Manifestation என்பது ஈர்ப்பு விதியில் பயன்படுத்தப்படும் ஒரு எளிய நடைமுறை. இதில் நீங்கள் விரும்பும் ஒன்றை 3 முறை சொல்லி, அதை 3 முறை பார்த்து, அதை 3 நிமிடங்கள் கற்பனை செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதன் மூலம், உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பிரபஞ்சத்துடன் இணைத்து, நீங்கள் விரும்பிய விஷயத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 

ஈர்ப்பு விதி: இந்த கோட்பாட்டின்படி நாம் எதைப்பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதை நம் வாழ்க்கையில் ஈர்க்கிறோம். 333 Manifestation இந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும் மனோ தத்துவ ஆய்வுகள், நம் எண்ணங்கள் நம் செயல்களை பாதிக்கும் என்பதை நிரூபித்துள்ளன. எனவே 333 Manifestation நமது நேர்மறையான எண்ணங்களை வலுப்படுத்தி நம்மை நோக்கி நாம் விரும்பும் விஷயங்களை ஈர்த்துக் கொண்டு வரும். பல ஆன்மீக பாரம்பரியங்கள் நம் எண்ணங்களுக்கு அதிக ஆற்றல் உண்டு என கற்பிக்கின்றன. 333 Manifestation இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நம் எண்ணங்களை பிரபஞ்சத்துடன் இணைத்து, நம் விருப்பங்களை நிஜமாக்குகிறது. 

இன்று வரை இந்த 333 Manifestation முறை முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், இதை சில வழிகளில் செயல்படுத்தலாம் என நம்பப்படுகிறது. இதனால், நேர்மறையான எண்ணங்களை மீண்டும் மீண்டும் சொல்வதால், அவை நம் மூளையில் ஆழமாகப் பதிந்து நேர்மறையான சிந்தனையைத் தூண்ட உதவுகிறது. இது நம் உள் உணர்வை நேர்மறையாக மாற்றி, நம் விருப்பங்கள், இலக்குகளை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
தினமும் சிட்டிகை சேர்த்தால் போதும்... பலன்கள் பல தரும் பலே பெருங்காயம்!
333 Manifestation

333 Manifestation செய்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து மன அமைதி அதிகரிக்கும். இது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரித்து நேர்மறையான எதிர்காலத்தை நோக்கி நகர்த்திக் கொண்டு செல்லும். இது நம் இலக்குகளை அடைய ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருந்து செயல்படும்.‌ 

இருப்பினும், இது நிச்சயமாக வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதற்கான எவ்விதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லை. இந்த முறை ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் அனுபவங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். இதன் முழு பலனை அடைய சிறிது காலம் எடுக்கும் என்பதால், உடனடியாக எந்த ரிசல்ட்டையும் எதிர்பார்க்கக் கூடாது. உங்களுக்கு இந்த முறையின் மீது நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சித்து, வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com